பீட்சா முதல் பபூன் வரை

பீட்சா முதல் பபூன் வரை

வீட்டில் எனக்கு வைத்த பெயர் அசோக் குமார். அப்பா பெயர் வீரப்பன். இரு பெயரையும் இணைத்து இப்போது  அசோக் வீரப்பன் என மாற்றிக் கொண்டேன். அதற்கு காரணம் சினிமா. அப்பாவிடம் சினிமாவிற்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வரவில்லை. அவரிடம் உண்மையை தாமதமாகத்தான் சொன்னேன். ‘இது உன்னுடைய வாழ்க்கை. உனக்கென்ன சரின்னுபடுதோ, அதை செய்னு' சொன்னார். இப்படி என்னுடைய ஆசைக்கு ஆதரவாக இருந்தவர், நான் சென்னை வந்த சில காலங்களில் உயிரிழந்துவிட்டார். இப்போது என்னுடைய முதல் படமான ‘பபூன்' வெளிவந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது. பலரும் என்னை அசோக் வீரப்பன் என்று அழைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் அப்பாவினுடைய பெயரைக் கேட்க முடிகிறது,' என தொடக்கத்திலேயே உருக்கமாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன்.

‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சி பொன்மலை பக்கத்தில் செந்தண்ணீர்புரம். அங்குள்ள மாநகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையும், பொன்மலைப்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையும் படித்தேன்.  திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் படிப்பு.

நான் நல்ல உயரம் என்பதால், கல்லூரியில் என்.சி.சி.யில் சேர்ந்தேன். ஒரு முறை டெல்லியில் நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டேன். இரண்டாம் ஆண்டு படிக்கும் வரை ராணுவத்தில் சேர்ந்திட ஆசை. மூன்றாம் ஆண்டில் அந்த ஆசை மாறத் தொடங்கியது. நிறைய கலைநிகழ்சிகளில் கலந்து கொண்டதால். அப்போது பிரதர் வில்சன் என்பவர் நாட்டுப்புற கலைகளை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவருடன் சேர்ந்து கரகாட்டம், மைம், ஸ்கிட் போன்றவற்றையெல்லாம் நிகழ்த்தினேன். கலை மீதான ஈடுபாடு அப்படித்தான் எனக்குள் விதையாய் விழுந்து முளைத்தது.

அதேபோல், எனக்கு சினிமா பற்றிய முதல் அறிமுகத்தை ஏற்படுத்தியவர் என் இரண்டாவது அண்ணன் ரவிக்குமார். ஒரு படத்தை இயக்குநர் தான் முழுமையாக உருவாக்குகிறார் என்ற புரிதல் ஏற்பட்ட போது, சினிமாவிற்கு போக வேண்டும் என்ற ஆசை முளைவிட்டது. ஆசை மட்டும் தான் இருந்ததே தவிர, வேறு எந்த யோசனையும் இல்லை. படிப்பை முடித்து, சென்னைக்கு வந்ததும் மருத்துவப் பிரதிநிதியாக வேலை பார்த்தேன்.  தங்கியது சித்தி வீடு என்பதால் தங்குமிடத்திலும், சாப்பாட்டிலும் எந்த கஷ்டத்தையும் நான் அனுபவித்ததில்லை.

சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. கன்னிமாரா நூலகத்தில் உறுப்பினராக இருந்தேன். கி.ரா., அழகிரிசாமி, மு.வ, ஜெயகாந்தன் உள்ளிட்ட தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் ஆக்கங்களை வாசித்துள்ளேன். குறிப்பாக ஜெயகாந்தனுடைய எல்லா நூல்களையும் படித்துள்ளேன்.

மருத்துவப் பிரதிநிதி வேலை காலை மற்றும் மாலையில் தான் இருக்கும். மதியத்தில் இருக்காது. அந்த சமயத்தில் இயக்குநர்களைச் சந்திக்கச்  செல்வேன். மணிமேகலை பிரசுரம் வெளியிட்டிருந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் முகவரி அடங்கிய புத்தகத்திலிருந்து முகவரியை எழுதிக் கொண்டு சினிமா அலுவலகங்களுக்கு செல்வேன். சும்மா போய் பார்த்துவிட்டு வருவேன்.

எனக்கு முதன் முதலில் சினிமாவில் அறிமுகமான நபர் ராஜாபெருமாள் என்பவர். அவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் வாய்ப்புக் கேட்டு அவருடைய அலுவலகத்தில் காத்துக் கொண்டு இருப்பவர். அவர் அண்ணா நகரில் உள்ள டவர் பார்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அங்கு அக்கவுண்ட்ஸ் துறையில் வேலை வாங்கிக் கொடுத்தார். மாலை ஆறு மணிக்கு மேல் தான் வேலை என்பதால், பகல் முழுவதும் இயக்குநர்களை சந்திக்கச் செல்வேன். அப்போது வெங்கட் என்ற ஓவியர் அறிமுகமானார். அவர் மூலமாக ராதாமோகன் சாரிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்னுசாமி என்பவர் அறிமுகமானார். அவரின் உதவியால் ‘தசையினை தீ சுடிணும்' என்ற சுயாதீனப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் இயக்குநர் விஜய் பிரபாகரன் தான் எனக்கு சினிமாவில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் என்று சொல்லலாம். விஜய் சேதுபதி அண்ணன் அங்கு வாய்ப்பு தேடி வருவார். அட்டக்கத்தி தினேஷ், விதார்த், காளிவெங்கட் என நிறையப் பேர் வருவார்கள். அந்தப் படத்தில் ‘அட்டக்கத்தி' தினேஷ் நாயகனாக நடித்தார். படம் முழுமையாக முடிவடையாததால், அடுத்த வாய்ப்பை தேடி ஓட வேண்டியிருந்தது,' என்றவர் கார்த்திக் சுப்புராஜிடம் எப்படி உதவி இயக்குநராக சேர்ந்தேன் என்பதை சொல்லத் தொடங்கினார்.

‘மதுரையை சேர்ந்த கார்த்தி என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிற அனைவருக்கும் அந்த அறை வேடந்தாங்கல் மாதிரி. நான், விஜய் சேதுபதி அண்ணன், அட்டக்கத்தி தினேஷ், காளி வெங்கட், அருள் தாஸ் அண்ணன் இப்படி நிறையப் பேர் அந்த அறைக்கு செல்வோம். எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றாலும், நட்பு வட்டம் என்னை உற்சாகத்துடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் வைத்துக் கொண்டது. அச்சமயம் விஜய் சேதுபதி  ‘பீட்சா‘படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். காலையில் அறைக்கு வந்தார் என்றால், மதியத்திற்கு மேல் அவரை அழைத்து செல்ல கார் வரும். படப்பிடிப்பு தொடங்கி ஐந்து நாட்கள் கழித்து, ‘அசிஸ்டென்ட் தேவைப்படுது. நீ வந்து ஒர்க் பண்றீயாடா' என்றார். அப்போதுதான் இயக்குநர் ராம் சாரிடம் உதவி இயக்குநராக  சேர்வதற்கு சிறுகதை ஒன்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். ராம் சாரிடம் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் வருகின்ற வாய்ப்பை ஏன் தவறவிட வேண்டும் என நினைத்து, அவர் கூடவே வண்டியில் ஏறி படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். மாலை ஆறு மணிக்கு கார்த்திக் சுப்புராஜ் வந்தார். அவருடன் சிறிய அறிமுகத்துடன், ‘என்னனு பார்த்து நீங்க டேக் ஓவர் பண்ணிக்கோங்க'என்றார். அப்படித்தான் ‘பீட்சா'படத்திற்குள் வந்தேன்.

அதன் பின்னர், நண்பர் ஒருவரின் மூலம் பிரெஞ்சு படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதன் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றது. மூன்று மாதங்கள் அந்தப் படத்தில் வேலை பார்த்தேன். அதற்குள், கார்த்திக் சுப்புராஜ் ‘ஜிகர்தண்டா'படத்தைத் தொடங்கினார். அந்தப் படத்திலேயும் பணிபுரிந்தேன். அந்தப் படத்தின் வெற்றி எனக்கு மிகப் பெரிய மனநிறைவைக் கொடுத்தது.

மீண்டும் மற்றொரு பிரெஞ்சு படமான தீபனில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் ‘கான்ஸ்'விருது வென்றது. பின்னர், ‘இறைவி' படத்தின் முன்தயாரிப்பு பணிகளை கார்த்திக் சுப்பராஜ் தொடங்கியபோது, ‘சொந்த திரைப்படத்திற்காக கதை எழுதப் போகிறேன்'என்று சொன்னேன். அவரும் ‘தாராளமா டிரை பண்ணுங்க. ப்ரி புரடெக்‌ஷன் டீமை மட்டும் கொஞ்சம் செட் பண்ணிக் கொடுத்துப் போங்க'என்றார். எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிட்டு, வெளியே வந்தேன். ‘பபூன்'ஒருவரின் கதையை மனதில் அசைபோட்டுக் கொண்டு, நிறைய ஊர் சுற்றினேன். அது சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. வருடத்தின் ஆறு மாதம் தான் கூத்துக் கலைஞர்கள் கூத்துக் கட்ட முடியும் என்றும், நாடகம் இல்லாத நாட்களில் அவரவர் நிலப்பரப்பு சார்ந்த தொழிலில் தான் ஈடுபட முடியும்  எனவும் தெரிந்துகொண்டேன்.

ராமநாதபுரத்தின் குக்கிராமங்கள், கடற்கரையோர கிராமங்கள் என நிறைய ஊர்களுக்கு சென்றேன்.

சென்ற இடங்களில் கிடைத்த தகவல்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சேர்த்து ‘பபூன்'கதையை எழுதி முடித்தேன். கார்த்திக் சுப்பராஜிடம் என்னுடைய கதையைக் கொடுதேன். படித்தவர் சில மாற்றங்கள் மட்டும் செய்து கொண்டு வர சொன்னார். ‘நம்ம தயாரிப்பு நிறுவனத்திலேயே படத்தை தயாரிக்கலாம்' என்றார்.

 எங்களின் திட்டப்படி 2019இல் படப்பிடிப்பை ஆரம்பித்து, 2020 மே மாத விடுமுறையில் வெளியிடலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக 2020 மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தாமதமாகிவிட்டது. தற்பொழுது படம் வெளியாகி, நல்ல விமர்சனத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது. படம் பார்த்த பத்திரிகையாளர் படத்தைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். ‘பபூன்‘என்னுடைய பத்து வருட சினிமா பயணத்தின்  இன்னொரு தொடக்கம்,' என்று சொல்லி நேர்காணலை நிறைவு செய்தார் அசோக் வீரப்பன்.

அக்டோபர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com