ராசாவே ஏன் என்னைக் கைவிட்டீர்?

ராசாவே ஏன் என்னைக் கைவிட்டீர்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்... ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது விஜய்  சேதுபதியிடமிருந்து போன்... ‘யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்புல இளையராஜா சார், யுவன் மியூஸிக்ல நாம ஒரு படம் பண்ணப்போறோம்' என்றபோது திகைப்பின் உச்சிக்கே போய் அது காலம் எனக்குத் தந்த பரிசு என்று அளவிலா மகிழ்வடைந்தேன். ஆனால் அப்படத்தின் தொடக்கத்திற்குப் பின்னர் நான் அடைந்த வேதனைகள்...வேறு யாருக்கும் நடக்கவேண்டாம். அந்த ஆதங்கத்தைத்தான் நான் என் மேடையில் வெளிப்படுத்தினேன். ஆனால் அதுவும் மிகத்தவறாக சித்திரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது' என்று கவலையுடன் சீறுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

‘2007இல் எனது முதல் படமான ‘கூடல் நகர்' வெளியானது. அப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வசூல் சரியில்லை என்பதால் எனது இரண்டாவது படமான ‘தென்மேற்குப் பருவக்காற்றை'

சுவாசிக்க அடுத்து  மூன்று ஆண்டுகள் ஆனது. அது ஒரு மிகச்சிறிய பட்ஜெட் படம். நாயகன் விஜய் சேதுபதியின் முகம் யாருக்கும் தெரியாது. ‘கூடல் நகர்' இயக்குநரை மக்கள் மறந்துவிட்டார்கள். நாயகி, இசையமைப்பாளர் உட்பட யாருக்கும் மார்க்கெட் கிடையாது. ஆனால் கடுமையான உழைப்பின் காரணமாக தரமான படைப்பாக வந்ததால் தேசிய விருதுகள் வரை வென்று என்னையும் விஜய் சேதுபதியையும் தமிழ்த் திரையுலகில் காலூன்ற வைத்தது. அவர் அடுத்தடுத்த வெற்றிப்படங்களால் நல்ல உயரத்துக்குப் போனார்.

ஆனால் அந்த அளவுக்கு சுலபமான வெற்றி எனக்கு சாத்தியப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் வெறுமனே 7 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறேன். வழக்கமான மசாலாப்படங்கள் பண்ணும் மனநிலை எனக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். நாயகர்கள் ஆளும் இந்த சினிமாவில் என் கதைகளில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருப்பதுவும் இன்னொரு முக்கிய காரணம். எனவே எனக்கு எனது அடுத்த ஒவ்வொரு படம் கிடைப்பதும் முதல் படப்போராட்டம்தான்.

இந்த போராட்டத்துக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒரே ஆறுதல் தம்பி விஜய் சேதுபதிதான். அவரை நான் தான் அறிமுகப்படுத்திவைத்தேன் என்பதை உறுதியாக நம்பிக்கொண்டு அடுத்தடுத்து மூன்று படங்களில் என்னை நம்பி நடித்தார். ‘மாமனிதன்' நாங்கள் இணைந்து செய்திருக்கும் நான்காவது படம். இப்படி நாங்கள் இணைந்து பணியாற்றுவதற்கு அத்தனை முறையும் முயற்சி எடுத்தவர் அவர்தான்.

‘மாமனிதன்' படத்தை இசைஞானி இளையராஜா-யுவன் இசையில் அதுவும் யுவன் தயாரிப்பிலேயே செய்யப்போகிறோம் என்று சேது சொன்னபோது அவ்வளவு மகிழ்ந்தேன். அதுவும் ஒரு தந்தை மகனின் பாசக்கதை... ஒரு மகன் தன்னை தந்தையாக உணர்கிற கதை... என்ன ஒரு அசாதாரணமான வாய்ப்பு என்று எண்ணி ராஜாவை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். அப்போது ஒரு படத்தின் இயக்குநராக, அவரை சந்திக்க ஒரே ஒரு வாய்ப்பு கூடக் கிடைக்காது என்று யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா? ஆனால் எனக்கு அப்படித்தான் நடந்தது.

பாடல் கம்போசிங்குக்காக சந்திக்க வாய்ப்புக் கேட்டபோது சந்திக்க மறுக்கப்பட்டேன். வேறு வழியில்லாமல் அவரது பழைய பாடல்களைப் போட்டு எனது காட்சிகளுக்கு ஷூட் செய்தேன். ஒரு வழியாகப் படம் முடிந்து பின்னணி இசையமைப்பின்போதாவது அழைப்பார்களா என்று பார்த்தால் எந்தத் தரப்பிலிருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லை. ஆர்.கே.செல்வமணி, பாரதிராஜா போன்றவர்கள் மூலம் நியாயம் கேட்டும் ராஜா என்னை ஒரு போதும் சந்திக்கவே இல்லை. என் படத்துக்கு யார் பாடல் எழுதுகிறார்கள் என்கிற விவரத்தைக் கூட வேற்று நபர்கள் மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள முடிந்தது.

ராஜா மீது இருக்கும் எனது அளவு கடந்த அன்பை, பற்றை எப்படியெல்லாம் வெளிப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன். ‘மாமனிதன்' கதைக்களம் நடப்பது நான் புண்ணிய பூமி என்று நினைக்கும் ராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில். படப்பிடிப்பு துவங்கிய முதல் நாள் ராஜா பிறந்த வீட்டின் முன் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்ட பின்பே படப்பிடிப்பைத் துவங்கினேன். அன்று முழு தினமும் நாயகன் விஜய்சேதுபதியிடம் ராஜா குறித்து, இவ்வளவு குட்டி கிராமத்தில் பிறந்த ஒருத்தர் விரல் அசைவுக்கு லண்டன் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா காத்திருந்த பெருமைகளை சொல்லிக்கொண்டே இருந்தேன்.

இவ்வளவு தூய்மையான பக்தி கொண்ட எனக்கு இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது.? நான் என் குரு பாலுமகேந்திரா போல் இன்னொரு குருவாய் நேசிக்கிற இளையராஜா ஏன் என்னை சந்திப்பதை இவ்வளவு பிடிவாதமாய்த் தவிர்க்கிறார் என்பதை அறிந்துகொள்ளக்கூட முடியாதவனாகிப்போயிருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் என்னை ராஜாவை சந்திக்கவிடாமல் தடுத்து வைத்துக்கொண்டிருந்தவர் அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜாதான் என்பது மட்டுமே தெரிந்தது.

‘மாமனிதன்' படத்தில் தொடக்கத்தில் இளையராஜா-கார்த்திக்ராஜா- யுவன் ஷங்கர் கூட்டணி இசையமைப்பதாக இருந்து அதில் கார்த்திக் ராஜா பெயர் இல்லாமல் போனதால் அவர் என்னை ராஜாவிடம் வைரமுத்துவுக்கு மிகவும் நெருக்கமானவர் அதனால் பக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று சொன்னதாலும் ராஜா என்னைச் சந்திப்பதைத் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது.

ஆக்சுவலாக இந்த மனக்குமுறல்களை நான் வெளியே சொல்வதாகவே இல்லை. பட ரிலீஸுக்கு முந்தைய வாரம் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பத்திரிகையாளர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு மேடையில் பார்க்கிறேன். ஒரு முப்பது பேர் வரை அமர்ந்திருக்கவேண்டிய ‘மாமனிதன்' மேடையில் அநாதைகளைப்போல் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே.சுரேஷ் என்று மூன்றே பேர் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியே மனம் பொங்கிவிட்டது. உணர்ச்சிவசப்பட்டுக் கொட்டித்தீர்த்துவிட்டேன்.

ஆனால் எனது ஆதங்கங்கள் அத்தனையும் ராஜா மீது நான் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடேயன்றி வேறொன்றுமில்லை. அதை சமூக வலைதளங்களில் மிகக் கேவலமாக திரித்து வெளியிட்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.மிக விரைவில் அவரது இசையில் நிச்சயம் நான் ஒரு படம் இயக்குவேன். ‘நீ எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இரு. ஆனால் என்றாவது ஒருநாள் ராஜாவின் இசையில் ஒரு படத்தை இயக்கிவிடு' என்பதாகத்தானே இங்கே இருக்கிற அத்தனை இயக்குநர்களின் கனவாகவும் இருக்கிறது?... அதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

 ராகதேவனே, ராகதேவனே... ஏன் சீனு ராமசாமி யைக் கைவிட்டீர்?''

ஜூலை, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com