வலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை!

வலியைக் கொடுத்த நிஜமான நிகழ்வில் இருந்து உருவான கதை!

ரோாட்டர்டம் திரைப்பட விழாவில் டைகர் விருது வாங்கியிருக்கிறது  கூழாங்கல் தமிழ் திரைப்படம். இந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த அதன் இயக்குநர் வினோத்ராஜிடம் அந்திமழைக்காக பேசியதிலிருந்து

‘‘எல்லோருக்குள்ளும் சினிமாவில் நுழைய வேண்டும்,  சாதிக்க வேண்டுமென்கிற ஆசை சிறு வயதில் இருந்தே இருக்கும். அந்த ஆசை ஒவ்வொருவருக்கும் ஒருமாதிரி  உருவாகியிருக்கும். எனக்கு

 சிறு வயதிலிருந்தே மதுரையை சுற்றி நடந்துகொண்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் அதன் மீது உள்ளூர ஈர்ப்பை ஏற்படுத்தின. கிரேனில் அமர்ந்து அங்குமிங்கும் நகர்ந்தபடியே படம்பிடித்துக் கொண்டிருந்த ஒளிப்பதிவாளரை பார்த்துவிட்டு நாமும் அதுபோல் ஒளிப்பதிவாராக வேண்டுமென எண்ணினேன். அதே விருப்பத்தோடு

சென்னை வந்தபிறகு, நாளைய இயக்குநரில் உதவிய இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. டிவிடி கடையில் வேலை பார்த்துக் கொண்டே தான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கிஷோர் இயக்கிய 8 குறும்படங்களில் வேலை செய்தேன். டிவிடி கடைக்கு வரும் சினிமா கலைஞர்களிடம் எனது சுயவிவரத்தை கொடுத்தபடியே இருந்தேன். அப்படிதான் சற்குணம் தயாரிப்பில் ‘மஞ்சப்பை‘ படத்தில் பணிபுரிந்தேன். அப்போது முருகபூபதியின் நவீன நாடகங்களால் ஈர்க்கப்பட்டு அவரோடு பயணப்பட வேண்டுமென விரும்பினேன். அதன்வழியே மணல்மகுடி நாடகக்குழுவில் இயங்கினேன்.

சினிமாவில் நாம் யார் என்பதை சுய

பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டுமென்ற யோசனையில் குறும்படம் ஒன்றையும் இயக்கினேன். அப்படி உருவானது தான் ‘சப்வே‘ என்கிற குறும்படம். அதற்கு பல திரைப்பட விழாக்களில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. குறும்படத்தில் இருந்து தான் நாமே ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டுமென்கிற உந்துதலை பெற்றேன். இதன் நீட்சியே இப்பொது கூழாங்கல்லில் வந்து நிற்கிறது.

உண்மையில் கூழாங்கல் திரைப்படத்தை சுயாதீனமாக, தொழில்முறை கலைஞர்கள் இல்லாமல் உருவாக்க வேண்டுமென்றெல்லாம் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. தயாரிப்பாளர்களை அணுகி, சில நடிகர்களை வைத்து பண்ண வேண்டுமென்றுதான் நானும் முயற்சித்தேன். இந்த கதை என் தங்கைக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த நிகழ்வு என்பதால் அது எனக்கு பெரும் வலியை கொடுத்தது. பிற கதைகளை சொல்வதைவிட என் வலியை முதலில் பதிவு செய்யலாம் என தோன்றியது. அதுமட்டுமன்றி என் தங்கைக்கு நடந்தவை பொதுவாக இங்கு பல பெண்களுக்கு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிற கதைகளை உருவாக்கும்போது அர்த்தமுள்ள காட்சிகளை வைக்கலாம், அர்த்தமுள்ள கேமரா கோணங்களை நிகழ்த்தலாம். ஆனால், அதனையும் தாண்டி நாம் சொல்லும் கதைக்கு ஓர் அர்த்தமிருக்க வேண்டும் அல்லவா? கூழாங்கல் கதையில் அப்படியொரு அர்த்தம் இருப்பதாக நான் உணர்ந்தேன்.

கூழாங்கல் திரைப்படத்திற்காக தொழில்முறை நடிகர்களை தேர்வு செய்தபோதெல்லாம், எதோ ஓர் உள்ளுணர்வு நம் படத்திற்கானவர்கள் இவர்கள் இல்லை என சொல்லிக்கொண்டே இருந்தது. எந்த ஒரு கலையும் தனக்கானவற்றை அதுவே கிரகித்துக்கொள்ளும் என்ற விதியின்படி இக்கதைக்குள் நிஜமான மனிதர்கள் வாழும் சூழல் கூடி வந்தது. மணல்மகுடிக்கு செல்லாமல் இருந்திருந்தால் கறுத்தடையான் இந்த படத்திற்குள் வந்திருக்கமாட்டார். ஒவ்வொரு மனிதர்களும் இப்படத்தின் பாத்திரங்களாக வந்து பொருந்தினார்கள்.

திரைப்படத்தை முழுமைப்படுத்திவிட்ட பிறகு அதனை மக்களிடம் கொண்டு செல்வதில் தான் போராட்டமே தொடங்குகிறது. எந்த படமாக இருந்தாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், விமர்சனங்களும் திறனாய்வும் எழ வேண்டுமென்பது தான் படைப்பாளனின் விருப்பமாக இருக்கும். இது மிகவும் சவாலான விஷயம். ஆனால், நம் படத்திற்குள் ஆரம்பத்திலேயே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வந்துவிட்டதால் அந்த பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.

கூழாங்கல் திரையிடலுக்கு தயாரானவுடன் யாரெல்லாம் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என நான் எண்ணினேனோ அவர்கள் யாரிடமிருந்தும் எனக்கு எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. ஆனால், யார் மீதெல்லாம் நமக்கு விமர்சனம் இருந்ததோ, வெகுஜன சினிமாகாரர்கள் நம்மை கண்டுக்கொள்ள மாட்டார்கள் என எண்ணினோமோ அவர்கள் தான் இன்றைக்கு கூழாங்கல் படத்தை தங்கள் தோளில் சுமந்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களால் செய்ய முடியாததை நீ செய்திருக்கிறாய் எனக் கூறி என் கையைப் பிடித்து அழைத்து செல்கிறார்கள்.

கோவா திரைப்பட விழாவில் அகதிகளைபோல் சுற்றிக்கொண்டிருந்தபோது இயக்குநர் ராமை சந்தித்தோம். படத்தின் சில காட்சிகளை அவரிடம் காண்பித்தோம். பின்பு படத்தை முழுமையாக பார்த்தவர் இதுவரை எங்களுக்கு எல்லாமுமாக இருந்துகொண்டிருக்கிறார். அவர் பார்க்கும், பேசும் ஒவ்வொருவரிடமும் கூழாங்கல் பற்றிச் சொல்லி, அவர்களையும் பார்க்க வைத்தார். யுவன் சங்கர் ராஜாவிடம் படத்தை திரையிட்டு காண்பித்ததன் விளைவாக அவரது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது. நான்கு இடங்களில் இசை சேர்க்க வேண்டுமென்ற யுவன், அதனை கூழங்கல்லுக்காக பணம் பெற்றுக்கொள்ளாமல் செய்துகொடுத்தார். மணிரத்னம், வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன், சூரி என பலரும் படத்தை பார்த்து எங்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

ரோட்டர்டம் திரைப்பட விழாவில் டைகர் விருது வாங்கியிருக்கிறது என்பது கூழாங்கல் திரைப்படத்திற்கு மிக முக்கியமான அங்கீகாரம். எனினும் இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள், அவை தரும் அங்கீகாரம் குறித்து இன்னும் நிறைய படிப்பினைகள் நமக்கு தேவைப்படுகிறது. கூழாங்கல் மட்டுமல்ல நம்மை போன்றவர்கள் படம் எடுக்கும்போது அதனை சந்தைப்படுத்துவதற்கும், அங்கீகரிப்பதற்கும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் நல்ல படங்களை எடுத்தால் இப்படியான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை இனி வரும் படைப்பாளர்களுக்கு கிடைக்கும்.

திரைப்பட இயக்கங்களை முன்னெடுப்பவர்கள் பலரும் கூழாங்கல் படத்தை திரையிட வேண்டுமென கேட்கிறார்கள். நம்மால் இப்போது கொடுக்க முடியாது என்கிற நிலையை சொல்லும் போது வருத்தப்படுகிறார்கள். ஆனால் படம் திரையரங்கிலோ, ஓடிடி-யிலோ வெளியாகும் வரை அப்படி செய்ய முடியாதல்லவா? திரைப்பட விழாக்கள், விருதுகள் என அங்கீகாரம் கிடைத்தாலும் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களது தொகையும் திரும்ப வர வேண்டியது முக்கியம். அதுமட்டுமன்றி இதுப்போன்ற மாற்று சினிமாக்கான பார்வையாளர்கள் மிகக் குறைவு. அவர்களுக்கும் இவ்வாறு திரையிடல்களை செய்துவிட்டால் திரையரங்கில், ஓடிடி-யில் பார்க்க யாரும் எஞ்சமாட்டார்கள். மாற்று சினிமாவுக்கு பார்வையாளர்கள் உண்டு, திரையிட்டால், ஓடிடி-யில் வெளியிட்டால் லாபம் இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு கிடைத்தால் நம்மைபோல் அடுத்து படம் எடுப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால், இப்படியான படங்களை பார்க்க யாரும் இல்லை எனக் கூறி பின்வாங்குவார்கள். இனிவரும் படைப்பாளிகளுக்குதான் இதன் விளைவு பெரும் துயரமாக மாறும்.

கூழாங்கல் படம் திரையரங்கள், ஓ.டி.டி தளம் என நிச்சயம் வெகுஜென வெளியில் பார்வைக்கு வரும். அடுத்தகட்ட படங்கள் எதையும் இப்போதைக்கு தொடங்கவில்லை. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டால், மதுரைப்பக்கம் நண்பர்களோடு மரத்தில் இருந்து கீழே விழுந்த முந்திரி கொட்டையை உடைத்து தின்றுக்கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் வேறெந்த திட்டமும் இல்லை!

மார்ச் 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com