வாழ்கிறார் அருண்!

வாழ்கிறார் அருண்!

கலை என்பதே அன்பை விதைப்பதற்காகத்தான் என்று தனது இரண்டு படங்களின் மூலம் உணர்த்தியிருப்பவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். 2016&இல் ‘அருவி', 2021-இல் ‘வாழ்' என இரண்டு படங்களை இயக்கி தனக்கென  தனித்த திரை-மொழியைக் கொண்டிருக்கும் அருணிடம் அந்திமழைக்காக பேசினோம்:

‘‘எனது அப்பா புருஷோத்தமன். ரொம்ப மூர்க்கமான மனிதாபிமானி. தாத்தா வைரக்கண்ணு சித்த மருத்துவர் & பாட்டி ஜெயலட்சுமி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியர்.  அப்பாவும் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அப்பா அவருடைய இளவயதிலிருந்தே ஒரு திடகாத்திரமான பெரியாரிஸ்ட்டாக இருந்து வந்தவர். யாரிடமும் போலியாகவோ பாசாங்காகவோ பழகத் தெரியாதவர். தன் மனதில் இருப்பதைப் பட்டவர்த்தனமாகப் பேசக்கூடியவர். தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்திலேயும் பணிபுரிந்ததால் ஒவ்வொரு பகுதி மக்களுடைய மண், குணநலன்கள், பண்புகள், கதைகள் என அளவிட முடியாத அனுபவக் கிடங்கு, அப்பா.

அம்மா புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான்கள் திருவீழிமிழலை பிரதர்ஸ் மற்றும் தவில் மாமேதை நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் அவர்கள் வழி வந்தவர். அம்மா, வாழ் திரைப்பட பணி முடிவு பெறும் தருவாயில் தவறிட்டாங்க. அம்மா குழந்தைமை மாறா மௌனி. அவங்க பேசியது, பாடியது, உறவாடியது, சிலாகித்தது எல்லாமே அன்பு மட்டும் தான். அளவில்லா அன்பைத் தாண்டி வாழ்வில் எதையுமே கணக்கிலெடுக்காத அரிய பிறப்பு தான் அம்மாவினுடையது.

நான்காம் வகுப்பு வரை எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் படித்தேன். பிறகு சென்னைக்கு குடியேறிவிட்டோம். ஆறாம் வகுப்பிலிருந்து முழுநேர குழந்தை நடிகரானதால் பெரிதாக பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. பத்தாவது வரை சும்மா பேருக்காகத்தான் பள்ளிக் கூடத்திற்குச் சென்றேன். தேர்வு எழுதினால் போதும் என்ற மனநிலை தான் இருந்தது.

என்னுடைய அப்பா, தந்தையர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரது வேலை பசியை கிளப்புவது மட்டுமே. இன்னது தான் நீ சாப்பிட வேண்டும் என்று ஒரு நாளும் அவர் சொல்லியது கிடையாது. பத்தாவது முடித்துவிட்டு, பதினோராவது வகுப்பில் எந்த குரூப் எடுக்க வேண்டும் என்று கேட்ட போது, ‘‘உன்னுடைய விருப்பம் சினிமா எடுப்பது தானே! பிறகு எதற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும்...சினிமாவே படி!. பள்ளிக்கு போக வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை'' என்றார் தடாலடியாக. அக்காக்களுடைய வற்புறுத்தலால் தனியாக (கணூடிதிச்tஞு) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினேன். பள்ளிக்குச் செல்லாமலேயே. பதினோரு வயதிலேயே சம்பாதிக்கத் தொடங்கியதால் என்னுடைய பால்யமே அதிரி புதிரியாகத் தான் இருந்தது. குழந்தை நடிகராகப் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தேன். டப்பிங் ஆர்டிஸ்டாக பல படங்களுக்கு பிட் வாய்ஸ் கொடுத்திருக்கிறேன். அபஸ்வரம் ராம்ஜி சாரோட இன்னிசை மழலைகள் என்ற ஆர்க்கெஸ்ட்ரா இருந்தது. அதில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகவும் இருந்துள்ளேன். இது தவிர களரி, யோகா, கராத்தே பயிற்சி என பால்ய காலம் வீரியத்தோடு இருந்தது.

அதற்குப் பின்னரான காலம், என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமலேயே இருந்த காலமது. என்ன செய்யப் பிடிக்கின்றதோ அதை நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆழமாக இருந்தது. என்னுடைய போக்கில், என்னுடைய நாட்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான பொறுப்பை, சிறிய வயதிலேயே அப்பா எனக்குக் கொடுத்திருந்தார். எந்த ஒரு குழந்தையும் நினைத்துப் பாக்க முடியாத ஒரு மாற்று வாழ்வு எனக்கு அமைந்தது ஒரு வரம் தான் என்பேன்.

சித்தி தொடருக்குப் பிறகு எடுக்கப்பட்ட அண்ணாமலை தொடரில் சிவக்குமார் சாரின் மகனாக நடித்தேன். சிவா என்கிற கதாப்பாத்திரம் அது. அந்த கதாபாத்திரம் ஹிட்டானதால் அடுத்தடுத்து நிறைய நடிக்க ஆரம்பித்தேன். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.பாலசந்தர், சி.ஜே.பாஸ்கர், சுந்தர் கே. விஜயன், சமுத்திரக்கனி, கே.ராஜேஸ்வர் என்று பல முக்கிய இயக்குநர்களின் படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய ஆறேழு வருடங்கள் கழிந்தன. அந்த அனுபவங்களும் ஆச்சரியங்களும் தான் எனக்கு இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

எழுதும் பழக்கம் சிறிய வயதிலிருந்தே இருக்கிறது என்பதால், என்னுடைய முதல் குறும்படத்திற்கான கதையை பதினோராம் வகுப்பு படிக்கும் போதே எழுதிவிட்டேன். லயோலா கல்லூரியில் விஸ்காம் சேர்ந்த பிறகு அந்த கதையை  ‘ஆடடா களத்தே' என்ற குறும்படமாக எடுத்தேன். அப்பொழுதெல்லாம் குறும்படம் என்பதே இங்கு அறிமுகமாகவில்லை. அந்தக் குறும்படம் ஈழத்துப் போராளி ஒருவரைப் பற்றிய படம். வசனங்கள் எதுவும் இருக்காது. அந்த குறும்படத்தை நிறைய இயக்குநர்களுக்கு டிவிடியில் கொடுத்தேன். அதில் இயக்குநர் பாலுமகேந்திரா சார் மட்டும் தான் அழைத்து பேசினார். முதல் சந்திப்பிலேயே நிறைய விஷயங்கள் குறித்துப் பேசினார். படிப்பதற்கு நிறையப் புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார். நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்தார்.

அதேபோல், பேராசிரியர் தந்தை

ச. ராஜநாயகம் , என்னை இரண்டாயிரத்து ஆறிலிருந்து இன்று வரை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய வகுப்புக்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கான களமாக இருந்தன. கல்லூரி முடித்த பிறகு உதவி இயக்குநராக

சேர்வதற்கு அவர் தான் உதவினார். பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரில் ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்றார். அதன் பிறகு கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவரிடம் மன்மதன் அம்பு, ராணா, கோச்சடையான் மற்றும் போலிஸ்கிரி (ஹிந்தி) படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். சினிமா ஓர் வணிகம். அந்த வணிகம் லாபகரமாக நடக்கும் வரை தான் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு நாம் செய்யும் தொழிலில் நமக்கு அடிப்படையாகத் தேவைப்படும் பொறுப்புணர்வு, கவனம், நேர்மை பற்றிய பால பாடங்களை கே.எஸ்.ரவிக்குமாரிடம் கற்றுக் கொண்டேன். இந்த வணிகத்தில் லாபம் பெற மக்களை முன்னிறுத்தி மக்களுக்காக இயங்க வேண்டும். அப்போது தான் ஜனரஞ்சகமான வசூல் சாத்தியப்படும் என ஒவ்வொரு நாளும் பொறுமையுடன்  சொல்லிக் கொடுத்தது எங்கள் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தான்.

முதல் படமான அருவி எடுப்பதற்கு முன்பாகவே நான்கு கதைகளை எழுதி வைத்திருந்தேன். அதில் கடைசிக் கதை தான் வாழ். நான், எனது இணை இயக்குநர்கள் யெஷ்வந்த், பாக்கியராஜ் கோதை, ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத்தொகுப்பாளர் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா என எங்கள் குழு 2011 காலகட்டத்திலேயே வாழ் திரைப்படத்தை முதல் படமாக எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் இரண்டு வருடம் கழித்தே வாழ் போன்ற ஒரு படத்தை முதல் பட வாய்ப்பாக்க முடியாது, வாழ் பட வாய்ப்பிற்காக நாம் வேறொரு சிறிய படம் எடுக்க வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தோம். அதன் பிறகு, அடுத்த ஒரு வாரத்தில் எழுதி முடிக்கப்பட்ட கதை தான் அருவி. இதை எழுதி முடித்து மூன்று நான்கு வாரங்களில், எதேச்சையாக நான் அனுப்பிய கதைசுருக்கத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு பரிந்துரைத்த ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் அண்ணாவினால் தான் அருவி நிகழ்ந்தது. சட்டென எல்லாம் சரியாக அமைந்தது, எங்கள் பாக்கியம் தான் அது.

படம் வெளியானபோது மக்கள் அருவியை தங்களது படமாக எடுத்து உறவாடியது பெரும் நிறைவைக் கொடுத்தது. பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகளுக்கு அருவி என பெயரிட்டதும், அவர்கள் தொடர்ந்து குழந்தை அருவிகளின் புகைப்படங்களையும் பேச்சுக்களையும் எனக்கு அனுப்புவதும் அலாதியாக இருக்கிறது. அருவிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, முதல் படமாக எடுக்க விரும்பிய வாழ் கதையைப் படமாக எடுக்க நினைத்தேன்.

நம்ம அறிவுக்கு, நம்ம போடுகிற திட்டத்தை எல்லாம் தோற்கடித்து, நம்ம முடிவையும் தாண்டி, நம்ம வாழ்க்கையில் நடக்கின்ற விசயங்கள், நம்மை ஒரு பயணத்தில் ஈடுபடவைத்தால்? நம்ம சந்திக்கின்ற மனிதர்கள் நம்மை மாற்றினால்? அந்த பயணத்தில் இயற்கையுடைய தரிசனம் கிடைத்தால்? நமக்கு ஒரு சின்ன பக்குவம் கிடைத்தால்? அந்த மாதிரி கேள்விகளோடு / எண்ணங்களோடு தான் ‘வாழ்' எழுதியது. சரியான நேரத்தில் அண்ணன் சிவகார்த்திகேயன் வாழ் படத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பளித்தார். அவர் இல்லையென்றால் வாழ் ஏப்ரல் மாதத்திலேயே நின்றிருக்கும்.

நாங்கள் இடத்தேர்வுக்காக சென்றபோது, நாங்கள் பார்த்த இடங்களின் அழகு / எழில் நூறு மடங்கு கூடி இருந்தது. நாம் எதை நோக்கி போகிறோமோ அது நம்மை நோக்கி வரும் என்பது மாதிரி, அழகு பூத்துக் குலுங்கியது. நாங்கள் போன இடங்களுடைய அழகும் பிரம்மாண்டமும் எளிமையும் தான் எங்கள் குழுவில் இருந்த எல்லாருக்கும் இதைப் படம் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காக எந்த உடல் நோயையும் தாங்கிக் கொள்ளலாம் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. அதேபோல், படத்தில் வரும் யசோதா என்கிற புறாவின் கதை, மீளாத் துயரம் என்ற கட்டுரைப் பத்தியில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதியுள்ள கதையே அது.  இதைப்பயன்படுத்த விருப்பப்பட்டு, அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அதை அவர் பெருந்தன்மையுடன் வரவேற்றார். இன்று படத்தைப் பார்த்த பலர், அந்தக் கதையின் சாரத்தில் இணைந்து, உணர்வு வயப்பட்டு அதை குறிப்பிடும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றி இருக்கும் ஷெல்லி, ரேமண்ட், பிரதீப், நான் என நாங்கள் நால்வருமே ஸ்கிரிப்டில் இருப்பதைப் படமாக மாற்றுவதற்கு எவ்வித சோதனைகளையும் செய்யத் தயாரானவர்களாகவே இருந்தோம்.  இது இப்படி தான் வர வேண்டும் என ரொம்ப கட்டம் கட்டியெல்லாம் வேலை செய்வது இல்லை.

வாழ்க்கையை பற்றி என்ன ஏதுன்னு கேள்வி கேக்குறதுக்குள்ளயே முப்பத்தி இரண்டு வயதாகிடுச்சு. பிறந்ததிலிருந்து என்னவெல்லாமோ நடந்திருக்கிறது.  இயல்பான அன்போடு இருப்பது மட்டும் தான் அர்த்தமுள்ள ஒரே விஷயமாக தோன்றுகிறது.'' என்று பேசி முடித்தார், ஒரு துறவியைப் போல.

ஆக்ஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com