தெய்வமச்சான் படத்தில் ஏமாற்றிய விமல், குலசாமியில் கரைசேர்ப்பார் என்று எதிர்பார்த்தால் அம்போதான். படத்தில் எதாவது சமூகம் சார்ந்த பிரச்னையை பேசினால் மக்கள் கொண்டாடி விடுவார்கள் என விமலும் இயக்குநரும் நினைத்திருப்பார் போல. நினைத்ததை கச்சிதமாக செய்திருக்கலாம். அப்படி செய்யத் தவறிய படம் தான் குலசாமி.
மதுரையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் விமல். தினமும் மதியம் ஒரு மணிக்கு, மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்ட தனது தங்கையின் உடலைப் பார்க்கச் செல்வார். அதே கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் வினோதி கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழைப் பெண்களை மூளை சலவை செய்து பணக்காரர் ஒருவரிடம் அனுப்பி வைப்பார். அப்படி செல்லும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இது நாயகனுக்குத் தெரியவருகிறது. அப்படித் தெரிந்தால் என்ன ஆகும்? அதை நீங்களே யூகித்துவிடலாம்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிர்மலா தேவி வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு என இரண்டையும் அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குநர் சரவணன் சக்தி. கதையும் களமும் எல்லோரும் கேள்விப்பட்டது என்பதால், திரைக்கதையிலாவது இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
தங்கை மீது பாசம் கொண்டவராகவும், முழு நேரக் குடிகாரராகவும் இருக்கும் விமல் நடிப்பில் வித்தியாசம் தெரிந்தாலும், அவரிடம் நாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் காமெடியைத்தான். படம் முழுவதும் சீரியசாகவே வருகிறார்.
படத்தின் கதாநாயகியாக தன்யா ஹோப் துணைக் கதாபாத்திரம் போல் வந்து செல்கிறார். கதாநாயகிக்கென கொடுக்கப்படும் ஒரு பாடல் கூட கிடையாது. விமல் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அழுத்தமான கதாபாத்திரம். மற்றபடி காவலராக வரும் முத்துப்பாண்டி, பேராசிரியராக நடித்திருக்கும் வினோதினி, வில்லன் ஜனனி பாலு நடிப்பைப் பாராட்டலாம்.
டைட்டில் கார்டில் படத்தின் வசனம் என்று விஜய் சேதுபதி பெயர் வருகிறது. அதோடு சரி அவரின் பணி. இசை, ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப ரீதியான விஷயங்களும் படத்திற்கு கைகொடுக்கவில்லை.
விமலுக்கு அடுத்தடுத்த படங்களாவது நல்லதாக அமைய வேண்டும். அதுவே நம்முடைய எதிர்பார்ப்பு.