சிறுவன் சாமுவேல்: திரைவிமர்சனம்!

சிறுவன் சாமுவேல்: திரைவிமர்சனம்!

சில்ரன் ஆப் ஹெவன், தி ஒயிட் பலூன், தாரே ஜமீன் பார் போன்ற பிரசித்திபெற்ற சிறார் திரைப்படங்களின் வரிசையில் தமிழில் வெளியாகியிருக்கிற திரைப்படம் ‘சிறுவன் சாமுவேல்’ .

எழுத்தாளர் சுந்தர் ராமசாமி எழுதிய ‘ஸ்டாம்பு ஆல்பம்' கதை ஏற்கெனவே குறும்படமாக வெளிவந்துள்ளது. அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் மாணவர்களின் மன ஓட்டத்தைப் பதிவு செய்யும் கதை அது. இந்த கதையே சிறுவன் சாமுவேல் திரைப்படம் உருவாக உத்வேகம் அளித்தது என்கிறார் அப்படத்தின் அறிமுக இயக்குநர் சாது.

படத்தின் முக்கிய பாத்திரமான சிறுவன் சாமுவேல், ஒரு கிரிக்கெட் பேட் வாங்க ஆசைப்படுகிறான். ஐந்நூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் கிடைக்குமெனக் கேள்விப்படுகிறான். அதனால், பல்வேறு வழிகளில் கார்டுகளைச் சேகரிக்க முயல்கிறான் சிறுவன் சாம். அவன் முயற்சிக்கு வெற்றி கிடைக்க, இறுதியில் அவனால் புது கிரிக்கெட் பேட்டை வாங்க முடிந்ததா? என்பதற்கு பதில் தான் படத்தின் மீதிக் கதை.

சுந்தர் ராமசாமி எழுதிய கதையில் இருந்து சிறுவர்களின் அக உலகை எடுத்துக் கொண்ட இயக்குநர் சாது, சின்ன சின்னக் கிளைக் கதைகளையும், ஓரிரு கூடுதல் கதாபாத்திரங்களையும், கதை நிகழும் களத்தையும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். சிறார்களின் அக உலகத்தைப் பிரதிபலிப்பதுதான் முழுத்திரைப்படம் என்றாலும், தொண்ணூறுகளின் பிற்பகுதி யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘முதல் கன்னியாகுமரி படம்’ என்று படத்தின் போஸ்டரில் இருக்க, அதை உறுதிப்படுத்தவே செய்கிறது படத்தின் வசனம். கதாபாத்திரங்கள் இயல்பாக பேசிக்கொள்வது தான் படத்தின் வசனமே. பார்வையாளர்களுக்கு நூறு சதவிகிதம் இது புரியுமா என்று தெரியாது? ஆனால் ரசிக்க வைக்கும்.

சிறுவன் சாமுவேலாக நடித்த அஜிதன் தவசிமுத்துவும், ராஜேஷாக நடித்த K.G.விஷ்ணுவும் படத்தின் தூண்கள். வளவளவென்று பேசாத, துணிச்சல் மிக்க பாத்திரத்தில் சிறுவன் அஜிதன் நம்மை பிரமிக்க வைக்கிறார். அதேபோல், ராஜேஷின் துடுக்குத்தனமான பேச்சும், கண்களில் தெரியும் குறும்புத்தனமும் படத்திற்குப் பேரழகைச் சேர்க்கிறது. படத்தில் நடித்துள்ள பெரியவர்களின் நடிப்பும் கனகச்சிதம்.

படம் முழுவதும் பசுமையும், ஈரமும் நிரம்பியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்திக்கு வாழ்த்துகள், அவரின் கேமரா கோணங்களில் ஈரானிய படங்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. இசையமைப்பாளர்கள் J. ஸ்டான்லி ஜான், சாம் எட்வின் மனோகர் ஆகியோர் பின்னணி இசையின் மூலமாகக் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளனர். 18 நாட்கள் எடுக்கப்பட்ட படத்தை 95 நிமிடங்கள் போகுமாறு தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் அஜித் ஸ்டீஃபன்.

அறிமுக இயக்குநர், புதிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த ஒரு தமிழ் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்கள், அதை சினிமா ரசிகர்கள் தூக்கி சுமக்க வேண்டும்!

logo
Andhimazhai
www.andhimazhai.com