தீர்க்கதரிசி: திரைவிமர்சனம்!

தீர்க்கதரிசி: திரைவிமர்சனம்!

தீங்கு இழைத்தவர்களைத் தீர்த்துக்கட்ட சாதாரண மனிதன் எடுக்கும் அவதாரமே தீர்க்கதரிசி படத்தின் ஒரு வரிக் கதை.


பெண் ஒருவர் உயிரிழக்கப்போவதாக மர்ம நபரிடமிருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வருகிறது. அதை காவல்துறையினர் உதாசீனப்படுத்த, அச்சம்பவம் உண்மையாகவே நடந்தேறுகிறது. உடனடியாக விசாரணை அதிகாரிகளாக ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் நியமிக்கப்பட, அடுத்ததாக விபத்தொன்று நிகழ்கிறது. இதனால், காவல்துறை உயரதிகாரியான அஜ்மலிடம் வழக்கு  ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவு விசாரணை செய்தும், மர்ம நபரால் முன்கூட்டியே சொல்லப்படும் அசம்பாவிதங்களை தடுக்க முடியாமல் திணறுகின்றனர். ஊடகங்களும், மக்களும் அந்த மர்ம நபரை தீர்க்கதரிசி என அழைக்க, உண்மையில் அந்த தீர்க்கதரிசி யார்? நடக்கும் குற்றங்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? என்பதற்கான விடை சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.


இந்தப் படத்தை பி.ஜி.மோகன்-  எல்.ஆர்.சுந்தரபாண்டி க்ரைம் த்ரில்லர் பாணியில்  எடுத்துள்ளனர். கதையில் க்ரைம் த்ரில்லருக்கு உண்டான திருப்பங்களோ, புதிர்களோ போதிய அளவுக்கு இல்லை.  தொடக்கத்திலிருந்தே மிதமான வேகத்தில் செல்லும் திரைப்படம், இறுதிக் காட்சியிலேயே கொஞ்சம் வேகம் எடுக்கிறது. ஏறக்குறைய முழுப் படமும் குற்றமும் விசாரணையுமாகவே இருக்கிறது. அது கொஞ்சம் சலிப்படையவே செய்கிறது.

படம் முழுவதும் நேர்மையான காவல் துறை அதிகாரியாக வரும் நடிகர் அஜ்மலின் மிரட்டலான பார்வையும் , உடலின் மிடுக்கும்  அவரைத்  தேர்ந்த நடிகராக காட்டுகிறது. இறுதிக் காட்சியில் வரும் சத்யராஜ் ‘என்னமா கண்ணு’ என்பது போல் நக்கலும் பழிவாங்கலும் கலந்த கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். இது தவிர ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


பார்த்துப் பழகிய சென்னையின் பல்வேறு இடங்களை அதேபோன்றே காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். கதையின் பரபரப்பிற்கு அவரின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். லட்சுமண குமாரின் பின்னணி இசை ஓகே.

 
சாதாரணமாகவே பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் ஆசாமிகளை அடுத்த ஒரு மணி நேரத்தில் கைது செய்துவிடும் காவல் துறை. அந்தளவிற்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் காவல் துறையை, சாதாரண எலக்ட்ரீசியன் ஒருவர் விரல் விட்டு ஆட்டுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை.  


படத்தில் புதுமைகள் இல்லையென்றாலும், பொறுமையானவராக இருந்தால் உங்களுக்கு தீர்க்கதரிசி பிடிக்கலாம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com