விரூபாக்ஷா: திரைவிமர்சனம்!
தெலுங்கில் வெளியான முதல் வாரத்திலேயே வசூல் வேட்டை நடத்திய விரூபாக்ஷா தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. பழிக்குப் பழி தான் படத்தின் மையக் கரு என்றாலும், அந்த பழிவாங்கல் எப்படி நடக்கிறது என்பது தான் ஒட்டுமொத்த திரைப்படமே.
நாயகன் சூர்யா (சாய் தரம் தேஜ்), தனது தாயின் சொந்த கிராமமான ருத்ரவனத்துக்கு செல்கிறார். அப்படி சென்றவர், அந்த ஊரின் தலைவர் மகளான நந்தினியை (சம்யுக்தா மேனன்) பார்த்தவுடனே காதல் கொள்கிறார். பிறகு தான் நாயகனுக்கு தெரிகிறது, அந்த ஊரை அழிக்க அமானுஷ்ய சக்திகள் காத்திருக்கிறது என்று. இந்த அமானுஷ்ய சக்திகளை அழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
இயக்குநர் கார்த்திக் வர்மாவும், சுகுமாரும் இணைந்து, பரபரப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த திகிலான திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். இதற்காக இருவரையும் பாராட்டாலாம்.
1970 களில் தொடங்குகிறது படம். மூடநம்பிக்கையால் ஒரு கிராமம் எப்படி இறுக்கமாக இருக்கும் என்பதை ஓரளவு யதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். படத்தின் முதல் பாதி காதல் காட்சிகளால் நிரம்பியிருக்கின்றன. இரண்டாம் பாதியில் திகிலடையும் திருப்பங்கள் அடுத்தடுத்து வந்த நம்மை பயமுறுத்துகின்றன. படத்தின் சில காட்சிகள் மனதைவிட்டு அகல மறுக்ககின்றன. ரயில் விபத்து காட்சியை பார்த்துப் பயப்படாமல் இருந்தால் நீங்கள் தைரியசாலி!
காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜனீஸ் லோக்நாத்தே இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். பாடல்களை விட பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். அதேபோல், படத்திற்கு ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கூடுதல் பலம்.
படத்தில் நாயகன் கதாபாத்திரத்தை விட மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் வலுவாக எழுதப்பட்டுள்ளது. நாயகி சம்யுக்தா மேனன் அழகு பொம்மையாகவும், ஆக்ரோஷம் கொண்ட பேயாகவும் கதிகலங்க வைக்கிறார். அவரின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரும், நம்மை வாய் பிளக்க வைக்கிறார்.
வேதம், மந்திரம், மூடநம்பிக்கை என எல்லாவற்றையும் கோர்த்துத் திகிலூட்டும் திரைக்கதையை உருவாக்கிய இயக்குநர், படத்தின் இறுதிக் காட்சியை சப்பென்று முடித்துள்ளார். பேய் படம் என்பதால் சில லாஜிக் மிஸ்ஸிங் இருக்கவே செய்கிறது.
மற்ற மொழி அமானுஷ்ய படங்களின் வரிசையில் காந்தாரா போன்று விரூபாக்ஷா நம்மை மிரள வைக்க தயங்காது!