அக்யூஸ்ட்: திரைவிமர்சனம்!

அக்யூஸ்ட் திரைப்படம்
அக்யூஸ்ட் திரைப்படம்
Published on

உதயா, அஜ்மல், யோகி பாபு நடிப்பில் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகி உள்ளது ‘அக்யூஸ்ட்’ திரைப்படம்.

அரசியல் கட்சி ஒன்றின் மாவட்டத் தலைவர் கொலை வழக்கின் குற்றவாளியான உதயாவை, சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கும் அழைத்துச் செல்லும் பொறுப்பு கான்ஸ்டபிளான அஜ்மலுக்கு வந்து விழுகிறது. செல்லும் வழியிலேயே உதயாவை தீர்த்துக்கட்ட கூலிப்படையும் காவல் துறையும் முயற்சிக்கிறது. இதிலிருந்து உதயா காப்பாற்றப் பட்டாரா? அவரை கொலை செய்ய முயல்பவர்களின் நோக்கம் என்ன? என்பதற்கு விடை சொல்கிறது மீதிப்படம்.

கன்னடத்தில் பிரபல இயக்குநரான பிரபு ஸ்ரீநிவாஸ் தமிழில் இயக்கியுள்ள முதல் படம் இது. படத்தின் ஒன்லைன் வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதையும் நடிகர்கள் தேர்வும் நம்மை சோதிக்கிறது. படத்தில் அறிமுகமாகும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு கதை சொல்கிறார் இயக்குநர்.

கனகசுப்புரத்தினம் என்கிற கணக்கு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் உதயா. எல்லாவற்றிலும் தான் கணக்காக இருப்பதால் தன்னுடைய பெயரை கணக்கு என சுருக்கிக் கொண்டேன் என கூறுவார். படத்தில் எந்த காட்சியிலுமே அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. ’வழவழ கொழகொழா’ என பேசிக் கொண்டே இருக்கிறார். ஆக்சன் காட்சிகளை தவிர்த்து, காமெடி என நினைத்து அவர் செய்யும் காமெடிகள் நம்மை பேஜார்படுத்துகிறது.

படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உதயாவுக்கு இருக்கலாம். அதே சமயம், நடிப்புக்கான குறைந்தபட்ச முயற்சி என எதையாவது செய்திருக்கலாம். ஆக்‌ஷன், சென்டிமென்ட், கோபம், அழுகை, விரக்தி என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பதற்கான காட்சிகள் எழுத்திலும் இல்லை, அவர் நடிப்பிலும் இல்லை.

படத்தின் மற்றொரு நாயகனாக வருகிறார் அஜ்மல். இவரே படத்தை தாங்கிப்பிடிக்கிறார். வெள்ளந்தியான காவலர் போல் அறிமுகமாக போகப்போக ஆக்‌ஷனில் கலக்குகிறார். லாட்ஜ் ஓனராக நடித்துள்ள யோகி பாபு இரண்டாம் பாதியில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். நாயகியாக நடித்துள்ள ஜான்விகா நிறைய காட்சிகளில் வருகிறார். இருந்தாலும் என்ன பயன் என நினைக்க வைக்கிறது திரைக்கதை. படத்தின் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் நிறைய ஸ்கோர் செய்ய வேண்டுமென நினைத்து இஷ்டத்திற்கு வாசித்துத் தள்ளியிருக்கிறார். படமெங்கும் அது அநியாயத்திற்கு சோர்வடையச் செய்கிறது. பஸ் விபத்து காட்சியை கண்முன் காட்டிய ஒளிப்பதிவாளர் மருதநாயகம் இன்னும் உழைத்திருக்கலாம். ’மாநாடு’ படத்தின் எடிட்டர் கே.எல். பிரவீன் இந்த படத்துக்கு எப்படிப் படத்தொகுப்பு செய்ய ஒத்துக்கொண்டாரோ…

அதிகாரம் மிக்கவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க அப்பாவிகளை எப்படி பலிகடா ஆக்குகின்றனர் என்பதை சொல்லவந்த படம் எதை எதையோ பேசி சலிப்படைய செய்கிறது.

படத்தை சீரியஸாதான் எடுத்துருக்காங்க, ஆனா, நமக்குத்தான்...?!

logo
Andhimazhai
www.andhimazhai.com