‘இப்படியொரு படம் வந்திருக்கா…?’ என வாரத்துக்கு மூன்று படம் பார்ப்பவர்களே கேள்வி கேட்கும் அளவுக்கு சைலண்டாக வெளியாகி இருக்கிறது மக்கள் செல்வனின் ‘ஏஸ்’ திரைப்படம்.
ஒரு கமர்சியல் படத்துக்கான அத்தனை விஷயங்களையும் டிரெய்லரில் தூவி வைத்திருந்த படக்குழு, அதை படத்தில் கொண்டு வந்ததா?
பழைய வாழ்க்கையை மறந்து, புதிய வாழ்க்கையை வாழ மலேசியாவுக்கு வரும் விஜய் சேதுபதியை (போல்டு கண்ணன்) உறவினர் என்று நினைத்து அடைக்கலம் தருகிறார், யோகிபாபு. அங்கு எதிர்வீட்டில், வளர்ப்புத் தந்தையுடன் வசிக்கும் ருக்மணி வசந்தை காதலிக்க தொடங்கும் விஜய் சேதுபதி, அவருக்கு விலையுயர்ந்த உடையை பரிசளிக்க கடன் வாங்க செல்கிறார். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரிய தொகைக்கு கடனாளியாக சிக்குகிறார்.
அதேவேளை யோகிபாபுவும் அவரது தோழி திவ்யா பிள்ளையும் கடனில் சிக்கி தவிக்கிறார்கள். அனைத்து பிரச்னைகளை தீர்க்க வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த பணம் அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றியதா இல்லையா? இது படத்தின் கதை.
முதல் பாதி யோகி பாபுவின் நகைச்சுவை, இரண்டாம் பாதி விஜய் சேதிபதியின் மாஸ்டர் பிளான் என படம் நகர்கிறது. ஒரு ஃபீல் குட் படமாகவும் இல்லாமல், வங்கிக் கொள்ளையும் அதிரடி திருப்பங்களும் நிறைந்த சாகச படமாகவும் இல்லாமல் திரைக்கதை தடுமாறுகிறது.
எதற்காக விஜய் சேதுபதி தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு மலேசியாவுக்குப் போகிறார் என்பதை கடைசி வரை சொல்லவில்லை. இருந்தாலும் நானும் ரவுடிதான், காதலும் கடந்து போகும் விஜய் சேதுபதியை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம். கதைக்கு தேவையான கச்சிதமான நடிப்பால் அலங்கரிக்கிறார்.
எதார்த்த நடிப்பால் வசீகரிக்கிறார் நாயகி ருக்மணி வசந்த். கொஞ்சல் நடிப்பில் அவரது கோபமும் ரசிக்க வைக்கிறது. விஜய் சேதுபதியை அவர் முதன்முதலில் கட்டிப்பிடிக்கும் காட்சி சிலிர்ப்பு.
விஜய் சேதுபதியுடன் படம் முழுக்க பயணிக்கும் யோகிபாபு, தனது காமெடியால் கலகலப்பாக கதையை நகர்த்துகிறார். இருவரும் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு கியாரண்டி. திவ்யாபிள்ளை அழகான அறிமுகம்.
பி.எஸ்.அவினாசும், பப்லு பிரித்விராஜும் வில்லத்தனத்தில் போட்டிப்போட்டு மிரட்டியிருந்தாலும், அவினாஸ் கேரக்டர் அழுத்தமாக எழுதவில்லை. அவரின் முரட்டுத்தனத்துக்கு ஏற்ற வெயிட்டேஜ் இல்லை.
ஹீரோவின் ஸ்கெட்சுக்கு வில்லன்கள் மட்டுமில்லாமல் மலேசியா போலீசும் ஈசியாக ஏமாறுவது கதையின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது.
ரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில் மலேசியா ஜொலிக்கிறது. சாம் சி.எஸ். பின்னணி இசை வருடுகிறது. காதல் காட்சிகளின் பின்னணி இசை ரம்மியம். பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார்.
மலேசியா, விஜய் சேதுபதி நடிப்பு, யோகி பாபு காமெடி படத்துக்கு ப்ளஸ் என்றாலும் புதுமையற்ற திரைக்கதை, நடுரோட்டில் வங்கி கொள்ளை, படத்தின் நீளம் போன்ற பெரிய மைனஸ்.
படம் செம மாஸ்ணா… வெற லெவல் ப்ரோ… இப்படியெல்லாம் விமர்சனம் எழுத ஆசைதான்… ஆனால், ஏஸ் ஏமாத்திட்டாரே…!