மனிதர்களுக்கும் நாய்க்கும் இடையிலான மோதல் அதிகரித்திருக்கும் சூழலில் இருதரப்புக்குமான பாசப்போராட்டத்தை பேசுகிறது அலங்கு திரைப்படம்.
மலைக் கிராமம் ஒன்றில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் தருமன் (குணநிதி). அடகு வைக்கப்பட்ட தங்கள் குடும்ப சொத்து கைவிட்டுப் போகும் நிலை ஏற்பட, அதை மீட்பதற்காக கேரளாவுக்கு வேலைக்கு செல்கிறார். கூடவே, தான் வளர்க்கும் காளியையும் (வளர்ப்பு நாய்) அழைத்துச் செல்கிறார். அங்கு காளியின் உயிருக்கு விலை பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? அந்த ஆபத்திலிருந்து காளியை தருமன் காப்பாற்றினாரா? இல்லையா என்பதே படத்தின் கதை.
உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல், மனிதனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள உறவை கதைக்களமாகக் கொண்டு அலங்கு படத்தை உருவாக்கியுள்ளார்.
முதல் பாதி திரைப்படத்தில் காடும் அது சார்ந்த மக்களின் வாழ்வும், இரண்டாம் பாதியில், எதிரிகளிடமிருந்து நாயைக் காப்பற்ற தருமன் எதிர்கொள்ளும் சிரமமும் பேசப்பட்டுள்ளன.
படத்தின் கதை, கதைக்களம் ஈர்ப்பாக இருந்தாலும், ‘எப்போ இடைவேளை விடுவாங்க’ என பக்கத்தில் உள்ளவரைக் கேட்கும் அளவுக்கு மிக வீக்கான திரைக்கதை. எந்த உணர்ச்சியையும் படம் ஏற்படுத்தவில்லை.
பாத்திரங்கள் போகிற போக்கில் எழுதப்பட்டுள்ளன. பழங்குடிகளான நாயகனுக்கும் அவனின் நண்பர்களும் காட்டைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பது, பணமும் அதிகாரமும் கொண்ட வில்லன், தன் மகளுக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்காமல் இருக்க, வீட்டிற்குள் சத்தம் கேட்காமல் இருக்கும்படி செய்துவிட்டுப் போயிருக்கலாம். அதற்காக ஊரில் உள்ள நாய்களைத் தேடி தேடிக் கொல்கிறார். என்ன இது லாஜிக்கோ?
நாயகனாக நடித்திருக்கும் குணநிதிக்கு, பழங்குடி இளைஞருக்கான உடல்மொழியோ, வசன உச்சரிப்போ இல்லை. இவரின் நண்பர்களாக வரும் இருவர் நடிப்பில் அசத்தியுள்ளனர்.
வில்லனாக வரும் செம்பன் வினோத்துக்கு நடிப்பை வெளிப்படுத்தும் அளவுக்குக் காட்சிகள் இல்லை. அவரின் மனைவியாகக் கொற்றவை. பொம்மை மாதிரி வசனம் பேசிவிட்டுப் போகிறார். காளி வெங்கட் வழக்கம்போல் லுங்கி சட்டையில் வருகிறார். யதார்த்தமான நடிப்பு. நாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளவர், கடைசி காட்சியில் மாஸ் காட்டியிருக்கிறார்.
படத்தைப் பெரிதும் தாங்கிப் பிடிப்பது தொழில்நுட்ப குழுதான். ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் எல்லா காட்சிகளையும் ரசிக்கும்படி எடுத்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. இசையமைப்பாளர் அஜேஷ் க்ரைம் த்ரில்லருக்கு உண்டான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். மலைப்பகுதியில் நடக்கும் கதை என்பதால், சில இடங்களில் உருமி, முகவீணை ஒலிப்பதை கேட்க முடிகிறது. பாடல்களும் ஓகே ரகம்.
அலங்கு என்ற தலைப்பின் மீதான எதிர்பார்ப்பு, ரஜினிகாந்த் டிரெய்லரை வெளியிட்டது போன்றவை படத்துக்குக் கூடுதல் கவனத்தைக் கொடுத்தாலும், அதை படம் நிறைவேற்ற தவறியிருக்கிறது!