’அப்பா குட்டி’ விமர்சனம்

’அப்பா குட்டி’ விமர்சனம்

Published on: 
நம்ம ரேட்டிங்(2 / 5)

முந்தைய படத்தில் மம்மி சென்டிமென்டை வைத்து ’நூறு சாமி’ படம் கொடுத்த விஜய் ஆண்டனியின் மகள் சென்டிமென்ட் படம்தான் இந்த அப்பாகுட்டி..

மனைவியை இழந்தவராகக் காட்டப்படும் விஜய் ஆண்டனி தனது கைக்குழந்தையுடமன் ஊட்டிக்கு வருகிறார். மகள் ஐந்து வயது குழந்தையாக வளர்ந்து பள்ளிக்குச் செல்லத்துவங்க, குழ்ந்தையை பள்ளிக்கு டிராப் பண்ன வரும் ப்ரீத்தி அஷ்ராணிக்கு விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது. ஆனால் குழந்தைக்காக தியாகிவாழ நினைக்கும் வி.ஆ. அக்காதலை நிராகரித்து மகள் மீது நேசமாக இருக்கிறார்.

இந்நிலையில் அக்குழந்தைக்கு ஒரு விபரீதமான நோய் இருப்பது தெரிகிறது. அக்குழந்தையோடு பிறந்த இன்னொரு குழந்தையின் உயிரணுக்களை வைத்துதான் இக்குழந்தையின் உயிரக் காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொல்ல விஜய் ஆண்டனி அக்குழந்தைக்கு ஒரிஜினல் அப்பாவே இல்லை. அவரது அம்மா என்று சொல்லப்பட்டவரும் ஒரிஜினல் அம்மாவே இல்லை. ஒரிஜினல் அப்பாவும் அம்மாவும் காதலித்தபோது முறைகேடாக பிறந்த குழந்தை. இப்போது அவர்கள் இருவரும் தனித்தனி தம்பதிகளாக வாழ்கிறார்கள் என்று ஷாக் மேல் ஷாக் கொடுக்கிறார் டைரக்டர்.

இன்னொரு மனைவி, இன்னொரு கணவனோடு வாழ்ந்துவரும் அந்த முன்னாள் காதல் ஜோடி இணைந்து இன்னொரு குழந்தை பெற்றுக்கொடுத்தால் தான் இக்குழந்தையை காப்பாற்ற முடியும் என்கிற சூழலில் விஜய் ஆ. என்ன செய்து குழந்தையைக் காப்பாற்றினார் என்று திரைக்கதையில் பல மர்ம முடிச்சுகள் போட்டு கதையை நகர்த்துகிறார் இயக்குநர்.

நல்ல காதல், கள்ளக்காதல்களை வைத்தும் ஒரு 500 எபிசோடுகளுக்கும் மேல் தொலைக்காட்சித் தொடராக வந்திருக்கவேண்டிய கதையை எதற்கு அநியாயமாக ஒரு இரண்டே கால் மணி நேரமாக படமாக எடுத்தார்கள் என்று புரியவில்லை.

ஹீரோவாக மட்டுமின்றி இப்படத்தின் இசையமைப்பாளரும் வி.ஆவேதான். இரண்டிலுமே பாஸ்மார்க் கூட ஸ்கோர் பண்ணவில்லை என்பது பரிதாபம். அனிருத், சாய் அபயங்கர் போன்றவர்களின் அதிரடி இசையால் இசை என்றால் என்பது குறித்து ரொம்பவும்தான் குழப்பிப்போய்விட்டார்போல.

விஜய் ஆண்டனிக்காக சதா ஏங்கிக்கொண்டேயிருக்கும் கேரக்டர் ப்ரீத்தி அஷ்ராணிக்கு. படம் முழுக்க அவருக்காக பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

படத்தின் முதல் பாதி சோதனை என்றால் இரண்டாம் பாதி முழுக்க வேதனை. அதிலும் குழந்தையைக் காப்பாற்றூவதற்காக வி.ஆ. கோர்ட்டுக்குப் போவதெல்லாம் கொடுமையின் உச்சம்.

பட த்தின் இயக்குநர் மு. மாறன் இந்தக் காலத்திலும் பாக்கெட் நாவல் படிக்கிற வழக்கம் கொண்டவர் போல. ஏற்கனவே அவர் இயக்கியுள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே , பிளாக் மெயில் ஆகிய சுமாரான படங்களின் வரிசையில் மிக மிக சுமாரான படம் இந்த அப்பா குட்டி.

மொத்தத்தில் கதையில் ஏகப்பட்ட முடிச்சுகள் போட்டு தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஜய் ஆண்டனியை முடிச்சி வைத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram