
பாகுபலி இரண்டு பாகத்தையும் எத்தனை முறை பார்த்திருந்தாலும் அதே கம்பீரத்துடனும் அதே பிரம்மாண்டத்துடனும் ‘பாகுபலி: தி எபிக்’கும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைத்து ஒரே திரைப்படமாக 'பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் கால அளவு 3 மணிநேரம் 44 நிமிடம்.
2015ஆம் ஆண்டு பாகுபலி முதல் பாகம் வெளியானது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, நாசர், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படம் 600 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது.
கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை யோசிக்கச் செய்த ‘பாகுபலி’ முதல் பாகத்தால் இரண்டாம் பாகமும் ரூ. 1,000 கோடி வரை வசூலைக் குவித்து மாபெரும் வணிக வெற்றிப்படமானது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு பாகங்களையும் இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் இன்று வெளியிட்டுள்ளனர்.
படத்தின் முதல் பாதியில், பாகுபலி முதல் பாகத்தில் பார்த்த அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், தமன்னா - பிரபாஸ் இடையேயான காதல் காட்சிகளுக்கும் பாடலுக்கும் கத்தரி போட்டுள்ளனர். அதை வாய்ஸ் ஓவர் மூலம் சொல்லியிருக்கின்றனர்.
படத்தின் இரண்டாம் பாதி, பாகுபலி 2: தி கன்க்ளூஷனில் பார்த்ததைப் போலவே உள்ளது. இங்கும், படத்தை சுருக்கமாக மாற்ற பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டுள்ளன.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், இதை பெரிய திரையில் பார்க்கும்போது, படம் புதிது போல் உணர வைக்கிறது. பிரபாஸ் ‘அமரேந்திர பாகுபலி ஆகிய நான்’ என்று வசனம் பேசும்போது, இன்றும் கைதட்டத் தோன்றுகிறது. ரம்யா கிருஷ்ணன் குழந்தையை கையில் ஏந்தி ‘மகேந்திர பாகுபலி’ என்று கத்தும்போதும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பாகுபலியின் போர் காட்சிகளை பின்னுக்குத்தள்ளும் அளவுக்கான சண்டைக்காட்சிகள் இதுவரை இந்திய சினிமாவில் வரவில்லை என்றே சொல்லலாம்.
அதேபோல், செண்டிமெண்ட் காட்சிகளும் சிலிர்க்க வைக்கின்றன. தனது கணவனும் மகனும் செய்த துரோகத்தை நினைத்து உடைந்துபோகும் ரம்யா கிருஷ்ணனின் முகம் மனதில் அப்படியே பதிந்துவிடுகிறது.
பாகுபலியின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அனைத்து நடிகர்களுமே மெச்ச தகுந்த நடிப்பை கொடுத்திருந்து தெரியும். எனவே, 'பாகுபலி: தி எபிக்'கில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா மற்றும் ராணா ரசிகர்களுக்கு ஒரு பரிசாகும். இருப்பினும், தமன்னா ரசிகர்கள் ஏமாற்றமடையலாம். அவரது காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. படத்தில் அவர் ஒரு கேமியோ கதாபாத்திரம் போல் தோன்றுகிறார்.
சாபு சிரிலின் கலை இயக்கமும், கமலக்கண்ணனின் கணினி வரைகலையும் ஹாலிவுட் தரம். அருவி முதல்... அரண்மனை வரை மலைப்பை ஏற்படுத்துகிறது. கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். வீரமும் காதலுமாக உரையாடுகின்றன மதன்கார்க்கியின் அழகான வசனங்கள்.
எம்.எம்.கீரவாணியின் இசை மீண்டும் சிலிர்ப்பூட்டுகிறது. இருப்பினும், படத்தின் பெரும்பாலான பாடல்கள் எடிட் செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
ரீ எடிட் இன்னும் நேர்த்தியாக செய்திருக்கலாமோ என்று நினைக்கும் அளவுக்கு காட்சிகளுக்கு இடையேயான இணைப்பு சரியாக இல்லை.
மொத்தத்தில், 'பாகுபலி: தி எபிக்' அதன் கம்பீரத்தை மீண்டும் திரையில் தாங்கிப் பிடித்திருக்கிறது.
