குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர், மது என்னும் எமனுக்கு அடிமையாகி தன் குடும்பத்தினரின் வாழ்வை சின்னாபின்னமாக்குவதை சொல்கிறது ‘பாட்டல் ராதா’ திரைப்படம்.
மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய குடும்ப தலைவனான ராதா (குருசோமசுந்தரம்) நேரம் காலம் பார்க்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறார். இதனால், பொறுமை இழக்கும் அவரின் மனைவி அஞ்சலை (சஞ்சனா), ராதாவை போதை மறுவாழ்வு மையத்துக்கு பிடித்துக் கொடுக்கிறார். இந்த இடம் தரும் நெருக்கடியும் மனைவியின் செயலும் அவரை அலைக்கழிக்க, மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்கிறார். வெளியே வந்தவர் மீண்டும் குடிக்கத்தொடங்க, குடி எப்படியெல்லாம் குடியை கெடுக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
குடிக்கு அடிமையான தன் கணவனை, தந்தையை, மகனை மீட்டெடுக்க ஒவ்வொரு தாயும் மனைவியும் சகோதரியும் படும் துயரத்தை நாம் ஒவ்வொருவரும் பார்த்திருப்போம். இதை அப்படியே திரைப்படமாக எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.
புதிய கதைக்களம், கச்சிதமான நடிகர் தேர்வு, நேர்த்தியான திரைக்கதை, இசை, வசனம் என எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர். ஏறக்குறைய மூன்று மணி நேரத்திரைப்படமும் மனதைக் கனக்கச் செய்கிறது.
ராதா கதாபாத்திரத்துக்கு குருசோமசுந்தரத்தின் தேர்வு ஏக பொருத்தம். சூழலுக்கு ஏற்ற உணர்ச்சிகளை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். குடிகாரராகவே வாழ்ந்துள்ளார். தமிழில் ஆரண்ய காண்டம், ஜோக்கர் படங்களுக்குப் பிறகு, குருவுக்கு பெயர் செல்லும் கேரக்டர் பாட்டல் ராதா. குருவுக்கு இணையாக நடித்துள்ளார் சஞ்சனா. ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரமாகவே வாழ்த்துள்ளார். தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார். ஜான்விஜய் கதாபாத்திரத்துக்கான எழுத்து படத்துக்கு பெரிய ப்ளஸ். ஜமாவில் முத்திரை பதித்த பாரி இளவழகன் இந்த படத்தில் முழுநேர குடிகாரராகவே வாழ்ந்துள்ளார். வழக்கம்போல் மாறன் காமெடியில் அதகளம் செய்கிறார். மற்ற நடிகர்களும் கவனிக்க வைக்கின்றனர்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடலும் அற்புதம். ‘யோவ் பாட்டலு’, ‘என் வானம்’, ‘நா... நா… குடிக்கிறேன்’ ஆகிய மூன்று பாடல்களும் அசைபோட வைக்கின்றன. போதை மறுவாழ்வு மையம், ஏரிக்கரை ஒட்டிய வீடு, பார் போன்ற இடங்களை ஒளிப்பதிவாளர் ரூபேஸ் அப்படியே கண்முன் காட்டியுள்ளார். க்ளைமாக்ஸில் வரும் ஏரிக்கரை காட்சி அவரின் ரசனையைக் காட்டுகிறது. சங்கத்தமிழனின் படத்தொகுப்பும் அட்டகாசம். ஜான்விஜய் – குருசோமசுந்தரம் பேசுவதுதான் இறுதிக்காட்சி என்று நினைத்தால், படம் மேலும் பத்து நிமிடத்துக்கு மேல் ஓடுகிறது. ஆனாலும், இந்த காட்சிகள் தேவையற்றதாக தோன்றவில்லை.
குருசோமசுந்தரம் – சஞ்சனா இடையேயான காதலை, மனவிலகலை படம் நுட்பமாக பதிவு செய்துள்ளது. மறுவாழ்வு மையத்திலிருக்கும் கணவன் திருந்திவிடுவான் என்ற ஆசையில், அவனை பார்க்க வரும்போது, அவனுக்கு பிடித்த உணவை செய்து எடுத்து வருவார் சஞ்சனா. ஆனால், அவளின் அன்பை, அக்கறையைப் புரிந்து கொள்ளாத குரு, அவளைப் பழிவாங்கக் காத்திருப்பதோடு, நடத்தை கெட்டவள் என்ற பட்டத்தையும் கொடுப்பான். இப்படி, கணவன் – மனைவிக்கு இடையிலெழும் முரணை படம் அற்புதமாக பதிவு செய்துள்ளது.
போதை மறுவாழ்வு மையத்தில் என்ன நடக்கும் என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம் என்பதை தவிர பெரிய மைனஸ் என்று எதுவும் படத்தில் தெரியவில்லை.
கதையோட்டத்துக்கு ஏற்ற வசனம். காமெடிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இல்லாமல், போகிற போக்கில் வருகின்றன. மறுவாழ்வு மையத்துக்கு புத்தர் பெயர் வைத்திருப்பது, சஞ்சனா குடியேறும் வீடு இஸ்லாமியர் வீடாக இருப்பது, இறுதிக்காட்சியில் மூன்று மதங்களையும் சேர்த்து காட்டுவதன் மூலம் இயக்குநர் வேறு ஒரு அரசியலையும் சேர்த்து பேசுகிறார்.
வீட்டுக்கு ஒரு குடிகாரர் இருக்கும் இந்த காலத்தில், பாட்டல் ராதா சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.