டிராகன்: திரைவிமர்சனம்!

டிராகன் திரைப்படம்
டிராகன் திரைப்படம்
Published on

ரக்கர்ட் பாய்ஸை விரும்பும் ஸ்கூல் காதலியும் வாழ்க்கையில் ஜெயித்தவனை திருமணம் செய்யும் காலேஜ் காதலியும் கழட்டிவிட்ட 2கே கிட் ஒன்றின் கதையே டிராகன் திரைப்படம்.

இன்ஜினியரிங் கல்லூரியில் டானாக வலம் வருகிறார் டிராகன் என்கிற டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்). இவருக்கு கல்லூரி முதல்வருடன் (மிஷ்கின்) பிரச்னை ஏற்பட கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிடுகிறார், 48 அரியர்களுடன். பின்னர், வேலை வெட்டிக்கு போகாமல் நண்பர்களிடம் பணம் வாங்கி பெற்றோரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இவரின் பொறுப்பற்ற தனத்தால் அவரது காதலி (அனுபமா பரமேஸ்வரன்) பிரேக்கப் செய்கிறார். இந்த அவமானத்தை போக்க, வாழ்க்கையில் ஜெயிக்க நினைக்கிறார். என்ன செய்தார்? அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் என்ன என்பதை ஜாலியாகவும் எமோஷனலாகவும் சொல்லியிருக்கிறது டிராகன்.

படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது ’இது டான் படம் போல உள்ளதே’ என முனுமுனுத்தார்கள். ஆனால், அதையெல்லாம் அடித்து நொறுக்கியிருக்கிறது டிராகன். படத்தின் தொடக்கம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், ஹீரோ கல்லூரிக்கு கால் வைத்ததும் கதை சூடு பிடிக்கிறது. டிராகனின் கல்லூரி சேட்டைகள், நண்பர்களுடன் செய்யும் லூட்டிகள், குடும்ப பின்னணி, காதல் தோல்வி என வழக்கமான அம்சங்களுடன் முதல் பாதி நகர்ந்தாலும் சுவாரஸ்யமான திரைமொழியால் விசிலடிக்க வைக்கிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இரண்டாம் பாதி ஹீரோ படும்பாட்டைச் சொல்கிறது.

கதாபாத்திர அமைப்பும் திரைக்கதையும்தான் படத்தின் பலமே. ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் பதியும்படி எழுதப்பட்டுள்ளன. கலகலப்பான விறுவிறுப்பான திரைக்கதை. குறிப்பாக பிரதீப் ரங்கநாதனின் பெற்றோர் தொடர்பான காட்சிகள், அனுபமாவின் பிரேக்கப் காட்சிகளும் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல பிரதீப் ரங்கநாதன், கவுதம் மேனனுடன் ஆன்லைன் இன்டர்வியூவில் கலந்து கொள்ளும் காட்சி அட்டகாசம்.

பிரதீப் ரங்கநாதன் 2கே கிட்ஸ்களின் மேனரிசங்களை அப்படியே நடிப்பில் கொண்டுவந்துள்ளார். கெத்தாக சுத்தும் கல்லூரி மாணவனாகவும், செய்த தவறுக்கு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் இளைஞனாகவும் மிரட்டியிருக்கிறார். துடிப்பான காதலி, பொறுப்பான முன்னாள் காதலி என இரண்டு மீட்டரிலும், கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். மற்றொரு நாயகியாக கயடு லோஹர் இரண்டாம் பாதியில் மனதைக் கொள்ளை கொள்கிறார்.

டான் எஸ்.ஜே .சூர்யாவை நினைவுபடுத்தும் கதாபாத்திரம் மிஷ்கினுடையது. ஆனாலும் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து, பக்குவமான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார் மிஷ்கின். அவரின் பாத்திரப் படைப்பும் வில்லனிசத்துக்குள் நுழையாமல் நியாயத்தின் பக்கம் நிற்பது முதிர்ச்சியானதொரு எழுத்து.

ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. கௌதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் வந்து போகிறார்கள். விஜே சித்து, ஹர்ஷத் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.

நிகேத் பொம்மியின் கேமரா, பிரதீப் இ.ராகவ்வின் படத்தொகுப்பு படத்தின் திரைமொழிக்கு மைலேஜைக் கூட்டியிருக்கிறது. லியோன் ஜேம்ஸ் இசையில் 'வழித்துணையே', 'ரைஸ் ஆஃப் டிராகன்' ஆகியவை மட்டும் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையில் பின்னியிருக்கிறார்.

படத்தின் மைனஸாக க்ளைமேக்ஸ் காட்சியின் நீளமும், ஒரே பாடலில் ஹீரோ உச்சிக்கு செல்வதும் பழைய டெம்ப்ளேட். இருந்தாலும், 2கே கிட்ஸ்களிடம் ‘பொறுப்பா இருக்கணும் ப்ரோ’ என்பதை ஃபயராக சொல்லியிருக்கிறது இந்த டிராகன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com