லவ் டுடே, டிராகன் படங்களின் மூலம் இளம் தலைமுறையினரின் வரவேற்பை பெற்ற பிரதீப், டியூட் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்தாரா என்பதைப் பார்ப்போம்.
சென்னையில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வரும் அகன் (பிரதீப் ரங்கநாதன்), காதல் தோல்வியில் உழன்று கொண்டிருக்கிறார். அவரின் மாமாவும் அமைச்சருமான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) மகள் குறள் (மமிதா பைஜூ), அகனைத் தேற்றுவதோடு, தன் காதலையும் சொல்கிறார்.
அதை ஏற்க மறுக்கும் அகன், குறள் மீது நட்பு மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார். அதனால், மன விரக்தியில் குறள் வேறு ஊருக்குச் செல்கிறார். குறளின் பிரிவால், அவர் மீதான காதலை உணரும் அகன், அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.
ஆனால், இப்போது அகனின் காதலைக் குறள் ஏற்க மறுக்கிறார். இதற்கு அடுத்து நடக்கும் சம்பவங்களே அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கும் டியூட் திரைப்படம்.
முதல் பாதி பிரதீப் ரங்கநாதனின் காதல், காமெடி, கோபம், சேட்டை என அதகளமாக சென்றாலும் இடைவெளியின் போது வரும் ட்வீஸ்ட் கதைக்கு வேறு முகம் கொடுக்கிறது.
இரண்டாம் பாதி முழுக்க நிறைய சிக்கலான விஷயங்கள் இருந்தாலும், அது படத்துக்கு நெகட்டிவ் ஆகாமல் பார்த்துக் கொண்டதில் தான் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஜெயித்திருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதனின் ஸ்டைல், மேனரிஸத்துக்கு ஏற்ற வகையில் அவரின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது. முதல் இருபது நிமிடம் அவரின் பாத்திரம் கடுப்பேற்றினாலும் போகப்போக சூடு பிடித்துவிடுகிறது. படம் முழுவதும் கலாட்டா பண்ணியிருக்கிறார். முந்தையப் படங்களைப் போல் இதிலும் காமெடி, எமோஷன் சீன்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார் பிரதீப்.
முதற்பாதியில் விளையாட்டுப் பிள்ளையாகவும், இரண்டாம் பாதியில் எமோஷன்களைக் கையாளும் பெண்ணாகவும் தேவையான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் மமிதா பைஜூ.
காமெடி, வில்லனிஸம், சென்டிமென்ட் என முப்பரிமாணத்தில் தன் அனுபவ நடிப்பால் மிளிர்கிறார் சரத்குமார். சம்பிரதாய கதாபாத்திரமாக மாற வேண்டிய கதாபாத்திரத்தை, சின்ன சின்ன முகபாவனைகளால் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஹ்ருது ஹரூன். ரோகிணிக்கு நிறைய சீன்கள் இல்லையென்றாலும் கவனிக்க வைக்கிறார்.
சாய் அபயங்கர் பின்னணி இசையில் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். பாடல்கள் தான் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் இருவரின் உழைப்பும் கவனிக்க வைக்கிறன.
இளம் தலைமுறையினரின் தலைசுற்ற வைக்கும் காதல் கதைக்குள் தாலி செண்டிமெண்டை காலி பண்ணியதோடு, ஆணவக் கொலைக்கு எதிராக பேசியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் லாஜிக் மீறல், நம்பத்தன்மை இல்லாத திருப்பங்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன. தன் வாழ்க்கையையே பணயம் வைத்து நாயகிக்காக நாயகன் ரிஸ்க் எடுக்க போதுமான காரணம் இறுதி வரை சொல்லப்படவில்லை. ’காதலுக்கு கண் இல்லையென்றாலும்’ அதுக்காக இப்படியா?
பிரதீப்பின் இந்தப் படத்திலும் பெண்கள் மீதான பகடி, ஏளனம், இரட்டை அர்த்தம் கொண்ட ஜோக்குகள் சாதாரணமாக வந்துப் போகின்றன.
இருந்தாலும், கலகலப்பான முக்கோண காதல் கதைக்குள் ஆணவக்கொலைக்கு எதிராக பேசுவதால் டியூட் நம்பிக்கையளிக்கிறது.