என்ன விலை - விமர்சனம்
நம்ம ரேட்டிங்(3 / 5)
நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சமும் பொருந்தாது. இதில் நடைபெறும் சம்பவங்கள், குறிப்பாக சாமான்ய மனிதனுக்கு ஆதரவாக கோர்ட்டில் கிடைக்கும் தீர்ப்பு முற்றிலும் கற்பனையாவது என்று டைட்டில் கார்டில் போட்டிருக்கவேண்டிய படம்.
தொண்டிமுதலும் த்ரிக்ஷாத்தியும் உள்ளிட்ட சில மலையாளப் படங்களுக்கு திரைக்கதை எழுதி தேசிய விருதும் பெற்ற சஜீவ் பழூரின் முதல் திரைப்படம் இது.
’கேரளக்காரனாக இருந்தாலும் என்னோட முதல் படத்தைத் தமிழ்லதான் இயக்கணும்னு ஆசை‘ என்று ஆச்சர்யப்படுத்துகிறார். மலையாளத்தில் எடுத்து டப்பிங் செய்யப்படாத ஒரிஜினல் தமிழ்ப்படமேதான்.
இந்த என்ன விலை…என்ன கதை?
ராமேஸ்வரம் பகுதியில் தன் சிறிய குடும்பத்தோடு வாழும் எளிய மனிதர் கருணாஸ். மீனவர். ராமேஸ்வரம் கடற்கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுத்து சில்லறையை வீசிச்செல்வது ஒரு வழக்கம். அப்படி திதி கொடுப்பவர்கள் வீசிச்செல்லும் சில்லறைகளை எடுத்தும் ஜீவனம் நடத்துகிறார் கருணாஸ்.
இப்படியான சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒருமுறை விலை உயர்ந்த தங்க ஆபரணம் கிடைக்கிறது. சூதுவாது தெரியாத அவர் நல்லபிள்ளையாக அதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்கிறார். ஆனால் அங்கு வேறோர் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அப்பாவியான அவர் திருடராக சித்தரிக்கப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்படுகிறார். மீடியாக்கள் செய்திப்பசிக்காக அவர் குடும்பத்தை வேட்டையாடுகின்றன.
நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு பல விசாரணைக்களுக்குப் பின் உண்மை வெளியே வர, ‘இதுவரை பறிபோன என் மானத்துக்கு என்ன விலை?’ என்று கேள்வி எழுப்ப, சினிமாவுலயாவது சந்தோஷமா போங்க’ என்று, கற்பனையின் உச்சமாக, ஆறுதலான தீர்ப்பு அளித்து நம்மை அனுப்பி வைக்கிறார்கள்.
படம் முழுக்கவே கமர்சியல் அம்சங்கள் எதுவுமின்றி நேர்மையான ஒரு படம் எடுத்ததற்காகவே இயக்குநர் சஜீவ் பழூருக்கு ஒரு வார்ம் வெல்கம்.
விறுவிறுப்பான முதல்பாதியில் படம் நம்மை ஈர்க்கும் அதேவேளை இரண்டாவது பாதி கோர்ட் காட்சிகள் கொஞ்சம் சோதிக்கின்றன. அதுவும் ஒரு சாமான்ய மனிதனின் தன்மானத்துக்கு என்ன விலை என்று எத்தனை காட்சிகள்?
’போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்துக்குப் பிறகு கருணாஸுக்கு அமைந்திருக்கும் இன்னொரு முக்கியமான படம் இந்த ‘என்ன விலை’. நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். அவரது மனைவி பாலம்மாவாக நடித்திருக்கும் விஜயலக்ஷ்மி வீரமணி அட்டகாச தேர்வு. வழக்கறிஞராக வரும் நிமிஷா சஜயனும் தேர்ந்த நடிப்பு.
இவர்கள் போக பூர்ணிமா பாக்கியராஜ் ஒரு நீதிபதி பாத்திரத்திலும் நடிகர் பிரபு தமிழக முதல்வர் பாத்திரத்திலும் வந்து ஷாக் கொடுக்கிறார்கள். கோர்ட்டு காட்சிகள் இருக்கிற படமென்றால் ஒய்.ஜி. மகேந்திரன் இல்லாவிட்டால் தீட்டு ஆகிவிடுமே என்பதால் அவரும் இருக்கிறார்.
ஒளிப்பதிவு ஆல்பி ஆண்டனி. ஓ.கே.ரகம்.
இசை சாம்.சி. எஸ். அவரால் என்ன முடியுமோ அதைச் செய்ய முயற்சித்திருக்கிறார்.
மற்றபடி டிக்கெட் என்னவிலை என்று யோசிக்காமல் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.
