முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின்னர் நடந்த விசாரணையையும் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஈழத்தமிழர்களின் வலிகளையும் பேசுகிறது இந்த ப்ரீடம்.
இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக கணவன் (சசிகுமார்), மனைவி (லிஜிமோல்) இருவரும் தனித்தனியாக ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் தஞ்சமடைகின்றனர். அப்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்படுகிறார். இதனால், சந்தேகத்தின் பேரில் மண்டபம் முகாமில் உள்ள சசிகுமார் உட்படப் பலரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்துகிறது காவல் துறை. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் சுதீர் நாயர் இனவெறுப்போடு செயல்பட, அவர் நிச்சயம் நம்மை விடுவிக்க மாட்டார் என நினைக்கும் சசிகுமார் தன் சகாக்களுடன் வேலூர் கோட்டையிலிருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார். இந்த திட்டம் அவர்களின் வாழ்க்கையில் சுதந்திரத்தை கொண்டு வந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
பற்றி எரியும் விவகாரங்களைத் திரைப்படமாக எடுக்கப்படும்போது அதீத கவனத்தோடும் சார்பற்ற தன்மையோடும் அணுகவேண்டும். அதை இயக்குநர் சத்ய சிவா சரியாகவே கையாண்டிருக்கிறார் எனலாம்!
ஈழத்தமிழர்கள் வருகை, அதனைத் தொடர்ந்து நடைபெறும் ராஜீவ்காந்தி படுகொலை என முதல் ஒரு அரைமணி நேரம் ‘திக் திக்’ என செல்கிறது. பின்னர், காவல் துறையினர் ஈவிரக்கமற்ற விசாரணை, குடும்பத்தினரைப் பிரிந்த தவிப்பு என இரண்டாம் பாதி செல்கிறது. இறுதிக்காட்சிக்காக இயக்குநர் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ என நினைக்க வைத்துவிட்டார்.
சொந்த நாட்டில் வாழமுடியாமல் புலம்பெயர்வது மரண வேதனை என்றால், தஞ்சமடைந்த நாட்டில் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். சீரியசான கதையை கமர்சியல் படமாக எடுக்க நினைத்துள்ளார் இயக்குநர்.
டூரிஸ்ட் ஃபேமிலியைத் தொடர்ந்து, சசிகுமார் இந்த படத்திலும் ஈழத்தமிழராக நடித்துள்ளார். சொந்த நாட்டில் இருக்கும் போது போலீஸ் கையை வெட்டும் ’தில்’ உள்ளவராகவும், வேறு ஒருநாட்டில் இருக்கும்போது எதையோ இழந்த சோகத்தை வெளிக்காட்டுபவராகவும் சசிகுமார் நடிப்பில் அசத்தியுள்ளார். முழு படமும் அவரை சுற்றியே நகர்கிறது. சில இடங்களில் மதுரை ஸ்லாங்க் பேசுகிறார். சசிகுமாருக்கு மனைவியாக நடித்துள்ளார் லிஜிமோல். ”ராமாயணம் என்ற ஒன்று நடக்காமலிருந்திருந்தால்…நாம அகதியாக அலைஞ்சிருக்க மாட்டோம் இல்லையா…’ என அவர் அப்பாவித்தனமாகக் கேட்கும்போது நமக்கு மனசு பாரமாகிறது. இருந்தாலும் அவருக்கான காட்சிகள் படத்தில் மிகவும் குறைவே.
விசாரணை அதிகாரியாக வரும் சுதீர் நாயர், கதாபாத்திரமாகவே நடித்து நம்மை கோபம் கொள்ள வைக்கிறார். அவரின் வில்லத்தனம் படத்துக்குப் பெரிய ப்ளஸ். மனித உரிமை வழக்கறிஞராக வரும் கேஜிஎப் மாளவிகா, ஆளுமையான நடிப்பால் கவர்கிறார். வாய்பேச முடியாத இளைஞரான பாய்ஸ் மணிகண்டன், காவலராக போஸ் வெங்கட், மு.ராமசாமி, மேற்குத்தொடர்ச்சி மலை மணிகண்டன் என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் கவனிக்க வைக்கின்றனர்.
ஜிப்ரானின் பின்னணி இசை த்ரில்லர் தன்மையில் அமைந்துள்ளது. தாலாட்டு பாடல் ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ். உதயகுமாரன் சிறை காட்சிகளைத் தத்ரூபமாக கண்முன் காட்டியுள்ளார். பெரும்பாலான காட்சிகள் இரவிலும் மழையிலும் எடுத்திருப்பார்கள் போல.
91லிருந்து 95 வரை நடக்கும் கதைக்கு என்பதால் அந்த காலகட்டத்தை அப்படியே கொண்டுவந்துள்ளார் கலை இயக்குநர் உதயகுமார்.
“ஈழ அகதி ஒருத்தன் கிட்ட துப்பாக்கி இருக்குதேனு கேட்கிறீயே… இங்க காஷ்மீரில் துப்பாக்கி சர்வ சாதாரணமாக புழங்குதே…” , “உடனே தீர்வு கிடைக்காதும்மா…தமிழ்நாடு தனி நாடு இல்லை… இங்கேயும் சட்ட திட்டம் இருக்கு” என கதைக்கேற்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் 43 பேர் சிறைக்குள்ளிருந்து சுரங்கம் தோண்டி 1995-இல் தப்பிச்சென்றது உண்மையான நிகழ்வு. அதைப் படமாக்கி இருக்கிறார்கள்.
கவனத்தை ஈர்க்கும் கதைக்களத்தை கச்சிதமான திரைக்கதையில் செதுக்கி இருந்தால் ‘ப்ரீடம்’ நங்கூரமிட்டிருக்கும்!