ஹபீபி… பட விமர்சனம் அவர் பெயர் மீரா கதிரவன்!
அவர் பெயர் மீரா கதிரவன்(3.5 / 5)
’அவள் பெயர் தமிழரசி’, ‘ விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் மூன்றாவது படம் இந்த ‘ஹபீபி’. இந்த ஹபீபி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கூகுளில் தேட வேண்டாம். இக்கதையில் வரும் அத்தனை பேருமே ஹபீபிக்கள்தான்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர் என்கிற நகரமாக வளர்ந்துகொண்டிருக்கும் கிராமத்தில் நடக்கிறது கதை.
தறி நெசவை நம்பி வாழும் யூசுப் பாய். கூட்டுக்குடும்பம். தறி நெசவு மெல்ல அழிந்துவரும் நிலையில் யூசுப்பின் சகோதரர் திருமணம் முடித்த கையோடு மனைவியை தனது ஊரில் விட்டுவிட்டு பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கிறார். அதைக் காணும் சிறுவனான கதாநாயகன் ஈசா, வாலிபன் ஆனபிறகு ஒரு வாழ்க்கையை விற்றுவிட்டு இன்னொரு வாழ்க்கையை வாழவேண்டுமா என்கிற கேள்வியோடு வெளிநாடு செல்வதை மறுத்து உள்ளூரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். இவன் பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாததால் அக்காதல் தோல்வியுறுகிறது. வேறு வழியின்றி அவனும் வெளிநாடு செல்ல முடிவெடுக்க அடுத்தடுத்து அவன் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகள் என்ன என்பது ரத்தமும் சதையுமாக சொல்லப்பட்டுருக்கிறது.
குடும்பத்தலைவன் யூசுப் பாயாக இயக்குநர் கஸ்தூரி ராஜா நடித்திருக்கிறார். முதல் ஓரிரு காட்சிகளிலேயே கஸ்தூரி ராஜா காணாமல் போய் யூசுப் பாய் வந்துவிடுகிறார். அறிமுக நாயகன் ஈசா பலவித தோற்றங்களுக்காக உடலை வருத்தி மெனக்கெட்டிருக்கிறார். நடிப்பில் குறிப்பிடப்பட இன்னொருவர் நாயகி மாளவிகா . படத்தில் அவருக்கு வசனமேயில்லை. ஆனால் கண்களால் அவ்வளவையும் கடத்திவிடுகிறார்.
மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு கதையின் கணத்தை இன்னும் இன்னும் கூட்டுகிறது. இசையமைப்பாளர் சாம்.சி.யின் தேர்வு படத்துக்கு சற்று மைனஸ்தான். ஆனால் அழுத்தமான காட்சிகள் அதைக் காப்பாற்றிக்கொள்கின்றன.
ஒரு இயக்குநராக முதல் இரு படங்களைத் தாண்டி மிக உயரம் எட்டிருக்கிறார் மீரா கதிரவன். நாயகனின் இரண்டாவது காதல் முறிகிறபோது நூலக ப்ளாக்போர்டில் நாயகி எழுதி வைத்திருந்த … ஆனால் இறுதியில் நம் எதிரிகளின் வார்த்தைகளை விட நம் நண்பர்களின் மவுனத்தையே நினவில் கொள்வோம்’ என்கிற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வாசகங்களே சாட்சி.
அதே போல் படத்தின் இறுதிக்காட்சியில் சற்றும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒனறை வைத்து ’ பயணம் செய்வர்களுக்கு மட்டுமல்ல, வழியனுப்புவர்களுக்கும், காத்திருப்பவர்களுக்கும்” என்று ஒரு கார்டு வரும். அத்தோடு படம் பார்க்கிற ரசிகர்களுக்கும் என்று நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம்.
ஹபீபி ஒரு அச்சு அசலான இஸ்லாமிய வாழ்வனுபவம்.

