ஹவுஸ் மேட்ஸ்: திரைவிமர்சனம்!

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம்
ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம்
Published on

ஒரே வீட்டில் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்பவர்களின் கதையை சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் சொல்ல வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜவேல்.

காதலி அர்ஷா சாந்தினி பைஜூவை (அனு) கரம் பிடிக்க, லோன் வாங்கி பழைய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்குகிறார் தர்ஷன் (கார்த்தி). புதுமண தம்பதிகளாக இருவரும் அந்த வீட்டில் குடியேற, அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் பைஜூவை கதி கலங்க வைக்கின்றன. தானாக லைட் எரிவது, குழாய் திறப்பது, ஃபேன் சுற்றுவது என பல சம்பவங்கள் நிகழ்கின்றன. 2022 இல் இவர்கள் வீட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் 2012இல், அதே வீட்டில் வாழும் காளி வெங்கட் – வினோதினி வைத்தியநாதன் வீட்டிலும் நிகழ்கிறது. இது எப்படி சாத்தியம் என்பதற்கான பதிலை சொல்கிறது மீதிப்படம்.

படத்தின் கதை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கிறது. காதல் படம் போன்று தொடங்கினாலும் அமானுஷ்ய கதையாக மாறி, பிறகு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக மாற்றம் பெற்று, இறுதியில் மகனின் பாசத்தை பேசும் படமாக முடிகிறது.

அறிமுக இயக்குநர் ராஜவேலின் திரைக்கதை யூகிக்க முடியாத திருப்பங்களாலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளாலும் கவனம் சிதறாமல் கட்டிப்போடுகிறது. அதோடு ‘பேர்லல் யூனிவர்ஸ்’ போன்ற நுட்பமான விஷயத்தை மக்களுக்குப் புரியும்படி எடுத்ததோடு மட்டுமில்லாமல், அதை நகைச்சுவை கலந்து சொன்ன விதம் சிறப்பு.

தங்கள் வீட்டில் பேய் இருப்பதாக நினைத்து காளி வெங்கட்டும் அவருடைய மனைவி வினோதினியும் செய்யும் அலப்பறைகளுக்கு மத்தியில் அவர்களது மகன் மாஸ்டர் ஹென்ரிக் பேயை விரட்ட தி அண்டர்டேக்கர் போட்டோவை எடுத்துக் காட்டும் காட்சி அதகளம்.

கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தர்ஷன். தொடக்கக் காட்சிகளில் தர்ஷனின் நடிப்பு ஈர்த்தாலும், மனைவியிடம் கோபித்துக் கொள்ளும் காட்சிகளிலும், சீரியசான காட்சிகளிலும் அவரின் முகபாவனைகள் ஈர்க்கவே இல்லை.

அனுவாக நடித்துள்ள பைஜூ தான் படத்தை தாங்கிப்பிடிக்கிறார். பயத்தில் மிரண்டு போகும் காட்சிகளாகட்டும், தர்ஷனிடம் கோபித்துக் கொண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகும் காட்சிகளாகட்டும் அவரின் நடிப்பு அசத்தல்.

இந்த வருடம் காளி வெங்கட் வருடம் என்று சொல்லும் அளவுக்கு ஏறுமுகத்தில் உள்ளார். படத்தின் நாயகன் என்றே சொல்லுமளவிற்கு மிக அற்புதமாக நடித்துள்ளார். கண்ணுக்குப் புலப்படாத குடும்பத்திற்காக ஏங்குவதாகட்டும், கண்ணுக்கு முன் உதவி எனக் கேட்டு இறைஞ்சுபவனுக்கு இரக்கப்படுவதாகட்டும், பேயை விரட்ட முயற்சிப்பதாகட்டும், காளி வெங்கட் கலக்கியுள்ளார். அவருக்கும், அவர் மனைவியாக நடித்துள்ள வினோதினியுடனான கெமிஸ்ட்ரி இயல்பாய்ப் பொருந்திப் போகிறது. படத்தின் எமோஷ்னல் கன்டென்ட்டை அழகாக நகர்த்திச் செல்ல இருவரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். காளி வெங்கட் தானொரு அபாரமான கலைஞன் எனக் கிடைக்கும் வாய்ப்புகளிலும் எல்லாம் அழுத்தமாகப் பதிந்து வருகிறார்.

ஏறக்குறைய முழுக்கதையும் ஒரே வீட்டுக்குள் நடந்தாலும் அதை ஒளிப்பதிவாளர் சதிஷூம் கலை இயக்குநர் ராகுலும் தங்களின் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையை குழப்பம் இல்லாமல் புரியும்படி காட்சிப்படுத்தியுள்ளனர்.

படத்தொகுப்பாளர் நிஷார் ஷரோஃபின் பங்களிப்பும் பாராட்டிற்குரியது. ராஜேஷ் முருகேஷின் பின்னணி இசை கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. பாடல் தனித்து சொல்லும்படி இல்லை.

யாரும் இல்லாத அனாதையான ஹீரோவை நம்பி மகள் சென்றாலும் அவரின் பெற்றோர்கள் அவரை தேடாமல் இருப்பது எதனால்? தர்ஷன் – அனு குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்கெனவே குடியிருந்தவர்கள் குடும்பத்தோடு உயிரிழந்துவிட்டதாக சொல்வது ஏன்? என்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

இன்றுவரை கருத்தளவில் மட்டுமே நம்பப்படுகின்ற ‘பேரலல் யுனிவர்ஸ்’ போன்ற விஷயத்தை தர்ஷனுக்கும் காளிவெங்கட்டுக்கும் விஞ்ஞானிகளோ, அறிவியலில் கை தேர்ந்தவர்களோ விளக்கவில்லை. மாறாக, அவர்களுடைய நண்பர்கள் வாய்மொழியாக விளக்குகின்றனர். இது கதையின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. இருந்தாலும் குடும்பங்களுக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான இணைப்பை பேசுவதால், ஹவுஸ் ‘மேட்ஸ்’ முழு நிறைவை அளிக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com