கார்ப்பரேட் வாழ்க்கையை விட, தன் அப்பா வாழ்ந்த ’மண் மணக்கும் வாழ்க்கையே உயர்ந்தது’ என நினைக்கும் இளைஞரின் கதையே இந்த இட்லி கடை.
தனுஷே இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படம் சுவையிலும் தரத்திலும் எப்படி உள்ளதென்று பார்ப்போம்…!
தேனி அருகேயுள்ள சங்கராபுரத்தில், ஒரு இட்லி கடை வைத்து, தனது கைப்பக்குவத்தால் கொடிகட்டிப் பறக்கிறார் சிவநேசன் (ராஜ்கிரண்). அவர், நவீனத்தை விரும்பாத காந்தியவாதி. தன் தந்தையைப் போலவே சமையலில் ஆர்வமாக இருக்கும் மகன் முருகன் (தனுஷ்), இந்த கிராமத்திற்குள்ளேயே தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ள விரும்பாமல் வெளிநாடுவரை சென்று பெரிய நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிறார். அந்த பொறுப்புகளோடு சேர்ந்து சில உறவுகளையும் உருவாக்கிக்கொள்கிறார். ஆனால் கிராமத்தில் வசிக்கும் அவரது அம்மா, அப்பாவோ ஊரை விட்டு வர விரும்பாத ஜோடி.
தனக்குப் பிறகு இந்த இட்லிக்கடையை யார் பார்த்துக்கொள்வது என சிவநேசன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முருகன் வெளிநாட்டிலிருந்து மீண்டும் கிராமத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்படி வருபவர் தந்தை ஆசைப்படி கடையை எடுத்து நடத்துகிறாரா? அல்லது தனது வெளிநாட்டு பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா என்பதுதான் இந்த இட்லிக்கடை.
முதல் அரை மணி நேரம் படம் நம்மை கட்டிப்போடுகிறது. சிவநேசன் எப்படியானவர் என்பதை விவரித்த விதமும், அவருக்கும் முருகனுக்கும் இடையேயான முரணை நச்சென்று சொன்ன விதம் அற்புதம். அதோடு படத்தில் ஆவி பறந்துவிடுகிறது. இடைவேளையும் இறுதிக்காட்சியும் ஆறிய இட்லி!.
வில்லனை தீர்த்துக்கட்டும் நாயகனாக இல்லாமல், அவனை மனம் திருந்த செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். மனப்போராட்டத்துடனே வாழும் நபராக வருகிறார் படம் முழுக்க. அவர் மெனக்கெட்டு நடிப்பதற்கான காட்சிகள் படத்தில் மிகவும் குறைவு. அருண் விஜய்க்கு திரையில் தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரின் கதாபாத்திரம் கதையோடு ஒட்டவே இல்லை. நித்யா மேனன் கிராமத்துப் பெண்ணாக, வெகுளியாக வந்து கவர்கிறார். சிவநேசன் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் இயல்பான நடிப்பால் கவர்கிறார். அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் நல்ல நடிப்பால் மனதில் நிற்கிறார்.
சமுத்திரக்கனி, இளவரசு, பார்த்திபன் ஆகியோரெல்லாம் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களின் கதாபாத்திரங்கள் அழுத்தமாக எழுதப்படவில்லை.
இயக்குநராக நடிகர் தனுஷ் ஓரளவு கவனிக்கவே வைக்கிறார். ஒரு சாதாரண கதையைக் கிராமத்துப் பின்னணியில் உணர்வுப்பூர்வமாக எடுக்க முயன்றிருக்கிறார். "அப்பாவின் தொழிலை நான் செய்வேன்! எனது மகன் பேரன்களுக்கும் கற்றுத்தருவேன்" என்பது மாதிரியான வசனங்கள் கொஞ்சம் நெருடலாகத் தெரிந்தாலும், கதையின் போக்கு சொல்லவரும் கதை வேறு என்பதைப் பல இடங்களில் உணர்த்திவிடுகிறது.
ஜி.வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஒகே ரகம். ஆனால், பின்னணி இசையில், இதற்கு முன் தனுஷ்- ஜிவி பிரகாஷ் ஒன்று சேர்ந்த பல படங்களின் சாயல் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. படத்தில் இடம்பெறும் சமையல் காட்சிகள், சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கிரண் கெளஷிக் கண்ணுக்கு குளுமை சேர்த்துள்ளார். படத்தின் கலை வடிவமைப்பும் கவனம் பெறுகின்றன.
ஒட்டுமொத்தத்தில் இந்த ‘இட்லி கடை’ சுவையிலும் தரத்திலும் சுமார்தான்!