'ஒரு நொடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணியில் உருவாகியுள்ள 'ஜென்ம நட்சத்திரம்' கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
சினிமாவில் இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் நாயகன் அஜய் (தமன்). இவர் தயாரிப்பாளர் ஒருவருக்கு கதை சொல்ல கோவைக்கு செல்கிறார். இதனால், அவரது மனைவியான மால்வி மல்ஹோத்ரா (பிரியா) வீட்டில் தனியாக இருக்கிறார். அப்போது பார்த்து, ரத்தக்கறையுடன் உள்ள கைகள் அவர் வீட்டின் ஜன்னலைத் தட்டுகிறது.பயந்து போகும் அவர், பக்கத்து அறையில் உள்ள நண்பர்களை அழைத்துக் கொண்டு வெளியே போய் பார்க்கிறார். அங்கு, சரமாரியாக வெட்டப்பட்டு கிடக்கும் காளி வெங்கட், தன்னுடைய மகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், அதற்காக 57 கோடி ரூபாயை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை வைத்து தன்னுடைய மகளை காப்பாற்றுங்கள் என கூறிவிட்டு இறந்து போகிறார்.
இவ்வளவு பணம் இருந்தால் தங்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என நினைக்கும் அவர்கள், வெளியூர் சென்ற அஜய்யையும் இணங்க வைத்து, மறுநாளே அனைவரும் அந்த தொழிற்சாலைக்கு செல்கின்றனர். அங்கு எதிர்பாராத சில அசம்பாவிதங்கள் நடக்க, அவர்களுக்கு 57 கோடி ரூபாய் கிடைத்ததா? காளி வெங்கட் குழந்தை உயிர் என்ன ஆனது? அவரை வெட்டியது யார்? என்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலை சொல்கிறது படத்தின் மீதிக் கதை.
இயக்குநராக முயற்சிக்கும் நாயகன், பேய்க் கனவு மட்டுமே காணும் அவரின் மனைவி, குழந்தையைக் காப்பாற்ற எம்.எல்.ஏ.வின் பணத்தை திருடும் காளி வெங்கட் என முதல் பாதியின் தொடக்கம் விறுவிறுப்பாகச் செல்கிறது. இனிதான் கதையில் திருப்பமே என நினைக்கும் போது, இடைவேளையும் இரண்டாம் பாதியும் ஜல்லியடிக்கின்றன.
படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் பைபிளில் வரும் சாத்தான் என்று சொல்லப்படும் லூசிபர் கதையை கொஞ்சம் தூவியிருக்கிறார்கள். இதனால் படத்தின் மையக்கதை என்ன என்ற கேள்வி எழுகிறது. அஜய் இயக்குநராவது நோக்கமா? அல்லது லூசிபர் பூமியை ஆண்டால் என்ன நடக்கும் என்பதை சொல்வது நோக்கமா?. இதற்கு விடை தெரிய நாம் இரண்டாம் பாகம் வரும் வரை காத்திருக்க வேண்டும் போல!
திகில் படத்துக்கு உண்டான பாழடைந்த தொழிற்சாலை, ஆளரவமற்ற இரவு, பேய்க் கனவு மட்டும் வரும் நாயகி போன்ற சில விஷயங்கள் மட்டுமே படத்தின் ப்ளஸ்.
ஒரே ஒரு கனெக்சன் கொடுப்பதன் மூலம் தொழிற்சாலை முழுக்க லைட் எரிவது, கூட வந்த நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்தாலும் எச்சரிக்கை ஆகாத நாயகன், தொழிற்சாலையில் உள்ள பணத்தை நாய் ஒன்று பாதுகாப்பது, மூன்று மாத கர்ப்பிணிப் பெண்ணை பணம் கொள்ளையடிக்க அழைத்துச் செல்வது, ஏளனப்படுத்துகிறார்கள் என்பதற்காக பணத்துக்காக நண்பர்களைக் கொலை செய்வது என முழுப்படமும் நம்பகமற்ற காட்சிகளால் நிரம்பியுள்ளது.
‘பேய்ப் படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா’ என புலம்ப வைக்கிறார் இயக்குநர் மணிவர்மா.
நாயகனாக நடித்துள்ள தமனுக்கு இந்த கதை தீனிபோடவில்லை என்றே சொல்ல வேண்டும். நாலு நடை, நாலு ஓட்டம் ஓடியதோடு அவரின் நடிப்பு சரி. அவரின் மனைவியாக நடித்துள்ள மால்வி மல்ஹோத்ரா தூக்கத்தில் திடுக்கிட்டு எழும் காட்சிகளாகட்டும் பேய் பயத்தில் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் அவரிடம் உள்ள பதட்டம் நம்மிடம் தொற்றிக் கொள்கிறது. காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஸ்காந்த் போன்ற சீனியர் நடிகர்கள் நடித்திருந்தாலும், அந்தளவுக்கு அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டவில்லை. சில புதுமுக நடிகர்களுக்கும் மனதில் நிற்கவில்லை.
காமிரா, கலை இயக்கம் கவனிக்க வைத்தாலும் கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தொகுப்பு, வசனம் ஓகே ரகம்.
பணம், பேய், லூசிபர் என வெவ்வேறு விஷயங்களை ஒரே கதைக்குள் கொண்டு வந்திருந்தாலும் அழுத்தமற்ற திரைக்கதையால் கடைசியில் நம்மீது சாத்தானை ஏவி விட்டுவிட்டார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது!