John Doe Film review
ஜான் டோ – விமர்சனம்

ஜான் டோ – விமர்சனம்

Published on: 
நம்ம ரேட்டிங்(2 / 5)

தமிழ் சினிமாவில் கொஞ்சகாலமாகவே படத்தின் தலைப்பு அர்த்தம் புரியாமல் தலைசுற்ற வைப்பதை ஒரு ட்ரெண்டாக வைத்திருக்கிறார்கள்.

இந்த ஜான் டோவும் அவ்வாறான சிக்கலான ஒரு தலைப்புதான்.

திருவாளர் சாட்ஜிபிடியை தொடர்புகொண்டபோது அடையாளம் தெரியாத கொலை செய்யப்பட்ட ஆண் நபரைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது என்கிறார். இதுவே பெண் சடலம் என்றால் ஜேன் டோ. குழந்தை என்றால் பேபி டோ.

வைரமுத்துவின் கணக்குப்படியே போனால் கூட தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் இருக்க இப்படி ஜான் டோ என்று தலைப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள் என்பது புரியவில்லை.

சூர்யாவின் சீன் ரிலீஸான அடுத்த வாரத்திலேயே தமிழக கேரளா பார்டரில் நடக்கும் இன்னொரு கதை.

கதாநாயகன் அர்ஜூன் போலீஸ்காரத் தந்தையால் தொடர்ந்து அவமானப்பட்டு வந்தவர். அந்த அவமானத்தை துடைத்தெறிவதற்காக காவல்துறையில் சேர்ந்தவர். அவர் கண்ணெதிரிலேயே ஒரு சிறுவனின் கொலை நடக்கிறது. அதைத் துப்பறிய முயலும் சமயம் இன்னொரு சிறுவனும் காணாமல் போக இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா என கண்டுபிடிக்க படம் முழுக்க படாதபாடுபட்டு நம்மையும் படுத்துகிறார்.

John Doe Film review
ஜான் டோ – விமர்சனம்

வல்லமை தாராயோ, கொலைகொலையா முந்திரிகா, மூணே மூணு வார்த்தை, கே.டி படங்களை இயக்கிய மதுமிதாவின் 5 வது படம். முதல் சுமாரான 3 படங்களுக்கு கே.டி.யில் நல்ல பெயர் மதுமிதாவுக்கு. ஆனால் அந்தப் பெயரை இந்த ஜான் டோவில் பறிகொடுத்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் பயணிக்கும் இக்கதையில் கொலையாளி எதற்காக அடுத்தடுத்து இத்தனை குழந்தைகளைக் கொல்கிறார் என்று சொல்லும் ஃப்ளாஷ்பேக் கதை சகித்துக்கொள்ளக்கூடியதாக இல்லை. கதை நகர்விலும் சுவாரசியம் இல்லை.

காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் தாஸ். வழக்கம் போல் தனது கரகர குரலில் புரியாமல் பேசுவது போக ஒரு ராப் பாடலையும் பாடி நம்மையும் ஜான் டோ ஆக்க முயல்கிறார்.

கதாநாயகி சஞ்சனா நடராஜன், அர்ஜூன் தாஸுக்கு உதவும் பக்கத்து மாநில காவல்துறை அதிகாரி. இருவருக்கும் நடுவில் கொஞ்சம் ரொமான்ஸ் வைத்திருந்தால் டைரக்டருக்கு என்ன நஷ்டம் என்பது புரியவில்லை.

ரம்மியமான கேரள லொகேஷன்களை காட்சிபடுத்திய வகையில் ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு படத்தில் முக்கியமான ஆறுதல் அம்சம்.

இசை முஜித் மஜீப். இவரைத்தேடி கேரளா வரை பயணிக்க வேண்டிய அவசியம் பாடல்களிலோ பின்னணி இசையிலோ கண்டுபிடிக்க முடியவில்லை.

மொத்தத்தில் ஜான் டோ, இயக்கிய 5 படங்களில் 4 சுமார் என்கிற டைரக்டர் மதுமிதாவின் க்ரைம்ரேட் தான் கூடுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram