காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: திரைவிமர்சனம்!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: திரைவிமர்சனம்!

மதம், குடும்பம், சாதி, உறவு. இவைகளுக்கு இடையில் ஏற்படும் விரோதத்திற்கும் வெட்டுக்குத்தும் பெண்கள் தான் காரணம் என்பதை புராண மற்றும் வரலாற்றுக் குறிப்புகளுடன் சொன்னால் அது தான் ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’திரைப்படம்.

உறவுக்காரர்களுக்கு மணம் முடிக்கப்பட்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் குடும்பத்தினரின் கொடுமையால் வெவ்வேறு சூழலில் இறந்து போகின்றனர். இதனால், அவர்களின் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார் நாயகி தமிழ்ச்செல்வி (சித்தி இத்னானி). அவரிடம் இருக்கும் சொத்திற்காக, அதே கொலைகார குடும்பத்தினர், அவரை மணமுடிக்க நினைக்கின்றனர். இதற்கு சம்மதிக்க மறுக்கும் அவர், சிறையில் இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கத்தை (ஆர்யா) சந்திக்கச் செல்கிறார். இந்த சந்திப்பு எதற்கு? காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் யார்? என்ற கேள்விகளுக்குப் பதில்தான் படத்தின் திரைக்கதை.

இயக்குநர் முத்தையா தனக்கான அதே பாணியில் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். பேர் புகழ் அந்தஸ்துக்காக ஒரே சாதியை சேர்ந்த, வெவ்வேறு மதத்தினரின் மோதிக்கொள்வது நல்ல திரைக்கதையாக வரவில்லை. அதேபோல், யாருக்கு யார் என்ன உறவு? என்பதைப் புரிந்து கொள்ள, படத்தை இன்னொரு முறை தான் பார்க்க வேண்டும்.

படத்தின் தொடக்கம் கவனத்தை ஈர்த்தாலும், மீதிப் படத்தில் ஆர்யா போடும் சண்டையாலும், ஃப்ளாஷ்பேக் மற்றும் காதல் காட்சியாலும் சலிப்பே ஏற்படுகிறது. ஒரே ஆறுதலான ஒரே விஷயம், ‘ஜமாத்தும் - சபையும் சமம் என்று சொன்ன விதம். இதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமாக ஆர்யா நடித்துள்ளார். முத்தையாவின் சண்டியர் கதாபாத்திரத்திற்கு ஆர்யா உயிரூட்டவில்லை. சண்டைக் காட்சிகளில் வேட்டியை அவிழ்வித்துவிட்டு டவுசருடன் இருக்கும் காட்சியைப் பார்த்தால்…எதுக்கு இந்த சீனு? என கேட்கத் தோன்றுகிறது. சித்தி இத்னானிக்கு துணிச்சல் மிக்க கிராமத்துப் பெண் கதாபாத்திரம். அந்த பாத்திரத்திரத்துக்கு சில இடங்களில் பொருந்தினாலும், சில இடங்களில் இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என்று தோன்ற வைக்கிறது.

மீசை மழித்து முகத்துடன் பழிவாங்கும் வெறியுடன் திரியும் வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார் தமிழ். இராவண கோட்டம் படத்தில் பார்த்த அதே பிரபு, இதில் குல்லாவுடன் வருகிறார். இதுதவிர பாக்யராஜ், ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதுசூதனன் ராவ், அவினாஷ் என ஒவ்வொருவரும் தென்மாவட்டத்துக்காரர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்கு ஏற்றப்படி இருந்தாலும், அதிகப்படியான சத்தம் காதை பிளக்கிறது. பாடல்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சண்டைக் காட்சிகளையும், மண்ணையும், மக்களையும் ரசிக்கும்படி படம் பிடித்துள்ளார்.

‘சண்டியருக்கும் சவடால்காரிக்கும் வாக்குப்பட்டால் என்னவாகும்’, கூடி கூடி ‘பேசி என்ன பலன்; குல புத்திய காட்டலேயே’, ‘இங்கிருக்கவங்க மார்க்கத்தைத்தான் மாத்தியிருக்காங்க; மண்ணை இல்லை’ என்பது போன்ற வசனங்கள் கதைக்கு ஏற்ற நியாயத்தை வழங்குகின்றன.

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ வழக்கமான முத்தையாவின் படம் என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் இல்லை!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com