எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வெளியாகும் பல படங்கள் சத்தமில்லாமல் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அப்படியாக, கடந்த 2022 ஆம் வெளியான கன்னடப் படமான ‘காந்தாரா’ அமைந்தது. கன்னட சினிமாவுக்கு புத்துயிர் ஊட்டி உலகளவில் கன்னட சினிமா மீது வெளிச்சம் பாய முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது இந்தப் படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர்1’ வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தைப் பார்க்கலாம்.
தீமையும் அதிகாரமும் ஒன்றிணைந்து தெய்வத்தை எதிர்க்க நினைத்தால் என்னவாகும் என்பதுதான் ‘காந்தாரா சாப்டர்1’ படத்தின் ஒன்லைன். ‘காந்தாரா’ முடிந்த இடத்தில் இருந்து இந்த படத்தின் முன்கதை தொடங்குகிறது.
கர்நாடகாவின் தெற்கு பகுதியில் உள்ள அடர்வனம் ஒன்றில் வாழும் காந்தாரா பழங்குடியினர், தங்கள் குலதெய்வமான சிவனைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களின் தலைவன் பெர்மே (ரிஷப் ஷெட்டி). காந்தாரா குடியின் தெய்வத்தையும் காட்டையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பிஞ்சர்லா பழங்குடியினர். இன்னொரு பக்கம் முன்பகை காரணமாகவும் காந்தாராவின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கும் பாங்க்ரா அரச வம்சம். இந்தத் தடைகளை காந்தாரா தலைவன் பெர்மே எப்படி முறியடிக்கிறான்? அவன் பிறப்பின் ரகசியம் என்ன என்பதுதான் ‘காந்தாரா சாப்டர்1’ படத்தின் கதை.
’காந்தாரா’ படத்தை விட தற்போது வெளியாகியுள்ள முன்கதையில் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் விரிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் விஎஃப்எக்ஸூம் ஒளிப்பதிவும் போட்டிப் போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது.
பெர்மேவாக வரும் ரிஷப் ஷெட்டி இயக்குநர்- நடிகர் என்ற இரட்டை குதிரை சவாரியில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். பெர்மேவாக உடலை முறுக்கேற்றி ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்துவதாகட்டும், தன் இன மக்களுடன் அன்பில் உருகுவதாகட்டும், முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவரது அவதாரம் நிச்சயம் சிலிர்ப்பூட்டக்கூடியது. கனகவதியாக வரும் ருக்மிணி, பாங்க்ரா அரசனாக ஜெயராம், அவரது மகனாக நடித்திருப்பவர், காந்தாரா மக்களாக நடித்திருப்பவர்கள் என பெரும்பாலான கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும்படியாக அவர்களுக்கான முக்கியத்துவம் தரப்பட்டு எழுதப்பட்டிருப்பது சிறப்பு.
இருந்தாலும் முதல் பாதியில் கதை ஆங்காங்கே நாயக வழிபாட்டில் சிக்கிக் கொண்டதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஏனெனில், முன்பு வெளியான ’காந்தாரா’ கதையில் வராஹ தெய்வம், பஞ்சுருளி விழா என தெய்வத்தின் கதைகளும் அதற்கான பாடல்களும் காட்சிகளும் படம் நெடுக சிலிர்ப்பைக் கொடுத்தன. அதேபோன்ற சிலிர்பான தருணங்கள் இதில் இடைவேளையிலும் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே இருக்கிறது.
அதேபோல், கிட்டத்தட்ட 2.50 மணி நேரம் என நீளும் படத்தின் முதல் பாதியில் பல காட்சிகளை யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம். அவை நேரத்தை வீணடிப்பதோடு கதையின் மையத்தை நோக்கி நகர்வதையும் தாமதப்படுத்துகிறது. பாங்க்ரா மன்னர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயராம் மற்றும் அவரது மகனாக வருபவர்கள் பேசிக்கொள்ளும் பல வசனங்கள் முகம் சுழிக்க வைப்பவையாகவும் ’மன்னர் காலத்து தமிழா இது?’ என பார்வையாளர்களை யோசிக்க வைப்பதாகவும் இருக்கிறது.
நடிகர்களின் நடிப்பிற்கு பிறகு படத்தின் மிகப்பெரும் பலம் அதன் தொழில்நுட்பக் குழுதான். முதல் பாகத்தை போலவே அதன் முன்கதைக்கும் சிலிர்ப்பான இசையைக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் அஜனீஷ். ஆக்ஷன், ஆடை வடிவமைப்பு, கலை, ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என அனைத்தும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு உழைத்திருப்பதை பார்க்க முடிகிறது. கதாநாயகி ருக்மிணி மற்றும் ஜெயராம் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதமும் நிச்சயம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்தான். கிளைமாக்ஸின் ஒரு காட்சியில் ‘புஷ்பா’ அல்லு அர்ஜூன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஆக மொத்தத்தில் முன்பு வெளியான ‘காந்தாரா’ திரைப்படமும் அதன் முன்கதையும் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் அமைந்தாலும் அதைச் சொன்ன விதத்தில் இன்னும் பிரம்மாண்டமாக சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கிறது இந்த ‘காந்தாரா: சாப்டர்1’.
பொறுமையை சோதிக்கும் முன்பாதியின் நீளம் குறைத்து இரண்டாம் பாதியில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம் என்பதைத் தவிர்த்து குறை எதுவுமில்லை. நிச்சயம் திரையரங்கில் சென்று ‘காந்தரா: சாப்டர் 1’ படம் பார்க்கலாம்.