லெனின் பாண்டியன் -விமர்சனம் -கண்ணுபடப்போகுதையா கங்கை அமரனே !

லெனின் பாண்டியன் -விமர்சனம் -கண்ணுபடப்போகுதையா கங்கை அமரனே !

Published on
நம்ம ரேட்டிங்(3 / 5)

தமிழ் சினிமா குறித்த நமது நம்பிக்கைகளின் மீது பிரபல முன்னணி இயக்குநர்கள் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசிவரும் நிலையில் அவ்வப்போது சில அறிமுக இயக்குநர்கள் வழி நெடுக காட்டுமல்லி வாசத்தோடு வருகை தருகிறார்கள்.

அப்படி கடைசியாய் வந்தவர் ‘மொத ராத்திரி’ இயக்குநர் ராஜா கருப்பசாமி. அவர் வழியில் இந்த வாரம் இன்னொரு நம்பிக்கை வரவு டி.டி. பாலசந்திரன். படம் ‘லெனின் பாண்டியன்’.

இன்றைய கமர்ஷியல் சினிமா ரேஸில் கிராமியப்படங்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை என்னும் நிலையில் இந்த லெனின் பாண்டியன் மண் வாசனை வீசும் அச்சு அசலான கிராமியப்படம் என்பதுவும் இன்னொரு ஆறுதல்.

சூதுவாது தெரியாத வெள்ளந்தி மனிதரான கங்கை அமரனின் மீனாட்சி என்கிற ஆட்டை மணல் மாஃபியா கும்பலின் லாரி ஒன்று அலட்சியமாகக்கொன்று விடுகிறது. இதற்கு நீதி கேட்டு காவல் நிலையம் செல்லும் அமரை காவல் நிலைய அதிகாரிகள் அடித்து உதைத்து அவமானப்படுத்தி விடுகிறார்கள்.

கங்கை அமரன் நீதிமன்ற உதவியை நாடி மணல் மாஃபியாக்களால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பாதுகாப்பு கேட்கிறார்.

இன்னொரு டிராக்கில் அப்பாவி காவலர் தர்ஷன் தனது மேல் அதிகாரிகளால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு, டீ வாங்குவது, காவல் நிலையத்தை கூட்டிப் பெருக்குவது, கழிவறையை சுத்தம் செய்வது என எடுபிடி வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்.

நீதிமன்ற உதவியை நாடும் கங்கை அமரனுக்கு இந்த அப்பாவி காவலர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட அடுத்து என்ன நடக்கிறது என்கிற பதைபதைப்புடன் கதை நகருகிறது.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்றாலும் அறிமுக இயக்குநரின் படம் என்பதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி மிக நேர்த்தியாக கதை சொல்லியிருக்கிறார் பாலசந்திரன்.

குறிப்பாக ஜார்ஜ் மரியான் ஏற்று நடித்திருக்கிற நீதிபதி பாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத அற்புதம். மணல் மாஃபியாக்களின் டெர்ரர் உலகத்தை அப்படியே ரத்தமும் சதையுமாய் சொன்ன விதமும் சபாஷ்.

வயதான பெரியவராக வயதான பெரியவரான கங்கை அமரன் கனகச்சித தேர்வு. மனிதர் அப்படியே வாழ்ந்திருக்கிறார்.

’கண்ணுபடப்போகுதய்யா கங்கை அமரனே’ என்று அண்ணனை வைத்து ஒரு ரீமிக்ஸ் போட்டாலும் தப்பில்லை.

ஆனால் உன் வயசுக்கு ரோஜா ஜோடியா என்று லைட்டாக பொறாமைப்பட்டாரோ என்னவோ… அமர், ரோஜா ரொமான்ஸ் காட்சிகளுக்கெல்லாம் முதல் மரியாதை பின்னணி இசையைப்போட்டு கலாய்த்திருக்கிறார் ராஜா.

நடிகர் திலகம் குடும்பத்திலிருந்து இன்னொரு வரவு அவரது பேரன் தர்ஷன். மிக இயல்பாக நடித்திருக்கிறார். ரோஜாவை இனி அம்மா வேடங்களில் அடிக்கடி பார்க்க முடியும். வெங்கட் போஸ் வில்லத்தனத்தின் உச்சம். இன்னொரு பக்கம் ஆடுகளம் நரேனும், யுகேந்திரனும் மணல் மாஃபியாக்களாக மிரட்டுகிறார்கள்.

ராஜாவின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத்தொகுப்பு என மிக நேர்த்தியான தொழில் நுட்பப்பணிகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

லெனின் பாண்டியன்… வெல்ல வேண்டியவன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com