தாய்மாமன் உறவு தங்கமான உறவு என்கிறது சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ’மாமன்’ திரைப்படம்.
கொட்டுக்காளி, விடுதலை படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து வெளியாகியுள்ள ‘மாமன்’ திரைப்படம் சூரிக்கு மணிமகுடம் சூட்டுமா என்று பார்ப்போம்.
திருச்சியில் ஃபேக்டரி நடத்தும் சூரி, தன்னுடைய அக்கா (சுவாசிகா) மீது அளவற்ற பாசம் கொண்டவராக இருக்கிறார். இந்த நிலையில், சுவாசிகாவுக்கு நீண்ட காலம் கழித்து பிறக்கும் ஆண் குழந்தையை பொத்திப் பொத்தி வளர்த்துவருகிறார் சூரி. இதனால், மாமன் – மச்சான் உறவு அழகாகவும் ஆழமாகவும் மாறுகிறது. இது, சூரியின் திருமண வாழ்க்கையிலும் குடும்ப உறவுகளுக்கு இடையேயும் விரிசலையும் மனக்கசப்பையும் ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் சூரி எப்படி சமாளித்து சரிகட்டினார் என்பதுதான் இந்த மாமனின் கதை.
சூரி கொடுத்த ஒரு பக்காவான ஃபேமிலி சென்டிமெண்ட் கதையை, நல்ல திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். குட்டி மருமகனுக்கும் – தாய்மாமனுக்குமான உறவைப் பற்றிப் பேசும் படங்கள் சமீபத்தில் வந்ததில்லை என்பதால், படத்தின் கதைக்களம் ரசிக்கும்படியே உள்ளது.
முதல் பாதி ஃபேமிலி ஆடியன்சை கவரக்கூடிய அக்கா - தம்பி, மாமன் - மச்சான், கணவன் - மனைவி இடையேயான பாச மழை காட்சிகளால் நிரம்பி உள்ளது. காமெடிகளுக்கும் பஞ்சமில்லை. இருந்தாலும் ஓரிரு காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸாக இருப்பதையும், சூரிக்கு கொடுத்திருக்கும் ஹீரோ பில்டப்பையும் குறைத்திருக்கலாம்.
இரண்டாம், பாதியின் திரைக்கதை மெதுவாக நகைச்சுவை தன்மையிலிருந்து சீரியசான தன்மைக்கு மாறுகிறது. அப்போது ஏற்படும் தொய்வை ராஜ்கிரண் – கீதா கைலாசம் இடையேயான காதல் போக்கிவிடுகிறது. க்ளைமாக்ஸ் மூச்சுமுட்டும் அளவுக்கு உணர்வுப் பூர்வமான காட்சிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
மருமகனுக்கு பாசக்கார மாமனாகவும் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத கணவனாகவும் வரும் சூரி நடிப்பில் அசத்தியுள்ளார். எளிதாக உணர்ச்சிவசப்படக்கூடிய சூரி கேரக்டர் பலருக்கும் அவர்களின் மாமன்களை நினைவுபடுத்தலாம். சூரி தன்னால் குணச்சித்திர பாத்திரங்களை சிறப்பாக செய்யமுடியும் என்பதை விடுதலை படத்திலேயே நிரூபித்திருந்தாலும், இதில் கமர்சியல் நாயகனாக ஜொலிக்கிறார்.
இந்த படத்தில் கச்சிதமாக எழுதப்பட்டுள்ள கேரக்டர் என்றால், அது ஐஸ்வர்யா லட்சுமியுடையதுதான். இந்த கால பெண்களின் குணத்தை வெளிப்படுத்தும் கேரக்டர். அழகாலும் நடிப்பாலும் மனதில் நிற்கிறார் அவர். அடுத்ததாக ராஜ்கிரண். இயல்பான நடிப்பால் கவர்கிறார். அவருடைய காதல் கதை படத்தில் முக்கியமான ஒன்றாக இருப்பது, அவரது கேரக்டரை தூக்கி நிறுத்துகிறது.
படத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கியமான கேரக்டரில் சுவாசிகா நடித்துள்ளார். படம் முழுக்க கடுகடுவென இருப்பவர், இறுதிக்காட்சியில் மனம் மாறி, எல்லோரிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நம்மைக் கலங்க வைக்கிறார்.
படத்தின் பெரும் பலம் வசனம். குழந்தை மாலை சுத்தி பிறந்திருப்பதால் தாய்மாமன் குழந்தையை வாங்கக்கூடாது என உறவினர்கள் கூறிவிட, தவித்துக் கொண்டிருக்கும் சூரியை பார்த்து, “மாலை சுத்தி பிறந்தா மாமனுக்குதானே ஆகாது… அதுக்கு ஏன் நீங்க கவலைப்படனும்… நான் தானே கவலைப்படனும்’ என ஐஸ்வர்யா லட்சுமி தன் காதலை வெளிப்படுத்த பேசும் வசனம் புதுசு.
“தனியா வாழும்போது சேர்ந்து வாழ ஆசைப்படுறீங்க... சேர்ந்து வாழும்போது தனித்தனியா வாழ்ந்துட்டு இருக்கீங்க…” என்ற வசனமும் சமகால தம்பதிகளின் மன ஓட்டத்தை பிரதிலிப்பதாக எழுதப்பட்டுள்ளது. வசனகர்த்தாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.
படத்திற்கு இசையமைத்துள்ள ஹெசாம் அப்துல் வஹாப் மனதில் நிற்கக்கூடிய பாடல்களையும், படத்தோடு ஒன்றக்கூடிய பின்னணி இசையையும் கொடுத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் கதைக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.
படத்தின் மைனஸாக நீளத்தையும், அதீத உணர்ச்சிகள் அடங்கிய காட்சிகளையும் சொல்லலாம். தொடக்கக் காட்சிகளையும், இடைவெளிக்கு பிறகான காட்சிகளை கொஞ்சம் வெட்டியிருக்கலாம்.
தாய்மாமன் பாசத்தையும் உறவுகளின் தேவையையும் கொஞ்சம் தூக்கலாக சொல்லியிருக்கும் இந்த மாமனை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்!