பணத்துக்காக திருடனும் மறதிநோயாளியான முதியவரும் ஏதேச்சையாக சேர்ந்து பயணித்தலில் நிகழும் சுவாரஸ்ய சம்பவங்களே இந்த ‘மாரீசன்.’
ராமாயணத்தில் வரும் மாரீசன் என்ற அழகிய மான் எப்படி ராமனை மதி மயக்குகிறதோ, அப்படி வேலாயுதம் பிள்ளையை (வடிவேலு) ஏமாற்றி அவரது பணத்தை ஆட்டையை போட நினைக்கும் தயாளனின் (பகத் பாசில்) முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை!
கூண்டிலிருந்து உயிர் தப்பும் எலி பாம்பை நோக்கி ஓடுவது, சிறையிலிருந்து விடுதலையாகும் பகத் பாசில் வடிவேலுவை சந்திப்பது என்ற உருவகத்துடன் படம் தொடங்குகிறது. தீவிரமான ஏதோ ஒன்றை படம் பேசப்போகிறது என நிமிர்ந்து உட்கார்ந்தால், அந்த தீவிரம் இறுதிக்காட்சியில்தான் வருகிறது. இதற்கிடையே, பகத் பாசில் - வடிவேலுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான உரையாடல்கள், இரவு நேர குடி, குளக்கரை, தொடர் கொலைகள் என கொஞ்சம் தளர்வுடனே படம் சொல்கிறது.
கதையின் நாயகன் வேலாயுதம் பிள்ளையாக நடித்துள்ள வடிவேலுதான். மாமன்னனில் பார்த்து வியந்த அதே வடிவேலுவை இதிலும் பார்த்து பிரமிக்கலாம். அப்பாவியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் அவரைப் பார்க்கும் போது, “யாருக்கும் இப்படியொரு நிலை வந்துவிடவே கூடாது” என நினைக்கும் வைக்கும் அளவுக்கு நடித்துள்ளார்.
வழக்கம்போல் பகத் பாசில் கலக்கியிருக்கிறார். “ஆகாயத்தில் பறக்கும் கொக்குக்கு... தண்ணீல இருக்கும் மீன் எப்படி இரையாச்சு?” என எல்லாவற்றையும் லாஜிக்காக பார்க்கும் தயாளன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலுவை அவர் எப்படி டீல் செய்கிறார் என்பதை இயக்குநர் சுதிஷ் சங்கர் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். இவர்களுடன் நடித்துள்ள கோவை சரளா, விவேக் பிரசன்னா, தேனப்பன், ஹரிதா முத்தரசன் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர்.
யுவன் சங்கர் இசையில் ‘மாரீசா’, ‘ஊருக்குள்ள யாருக்கும் நேரம் இல்லையே’ என்ற பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. இளையராஜாவின் ’நேத்து ஒருத்தரை ஒருத்தர பாத்தோம்’, மாயா பஜார் படத்தில் வரும் ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ பாடலின் இடையே வரும் ’ஆடிடுதே விளையாடிடுதே’ போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்ட இடம் கச்சிதம்.
பாளையங்கோட்டை தொடங்கி மதுரை, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு கோவை மாவட்டங்களின் நிலவியலை படம் கண்முன் நிறுத்துகிறது. சாலைவழி பயணக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. “ஞாபகங்கள் தான் வாழ்க்கை”, “நல்ல வேஷம் போட்டால் நல்லா ஏமாத்துலாம்ல” என்பது போன்ற அற்புதமான வசனங்கள் காட்சியாக மாறாமல் வசனமாக மட்டுமே கரைந்துபோகிறது.
மறதி நோயால் பாதிக்கப்பட்டவரது வாழ்க்கையும் அவருக்கு துணையாக இருப்பவரின் மனநிலையையும் ஃபளாஷ்-பேக் கதையை சொல்ல மட்டுமே பயன்பட்டுள்ளது. அதேபோல், இறுதிக் காட்சி வரை படத்தின் கதை ஒன்றாக இருக்க, அது இறுதியில் வேறு ஒரு வடிவம் எடுப்பது திரைக்கதையின் பெரும் பலவீனம்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றம், குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து கார்கி போன்ற படங்கள் பேசியிருந்தாலும், இந்தபடம் முன்வைக்கும் தீர்வு விவாதத்துக்குரியது.
மாரீசனில் குறைகள் இருந்தாலும், அவற்றை மறக்கடிக்கிறது வடிவேலு – பகத் பாசிலின் நடிப்பு!