’மதராஸி’ பட விமர்சனம்: ‘துப்பாக்கி’, ‘கஜினி’ போல தாக்கம் ஏற்படுத்தியதா ‘மதராஸி’?

மதராஸி திரைவிமர்சனம்
மதராஸி திரைவிமர்சனம்
Published on

‘மதராஸி’ பட இசை வெளியீட்டு விழாவில் ‘கஜினி’ படம் போலவும் ‘துப்பாக்கி’ படம் போலவும் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக வேண்டும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் கோரிக்கை வைத்ததாக சொன்னார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘சிக்கந்தர்’ படம் மூலம் பாலிவுட்டில் அடிவாங்கி கோலிவுட் திரும்பி இருக்கும் முருகதாஸூக்கு கம்பேக்காகவும் ‘அமரன்’ படத்தில் கோடி வசூலை தொட்ட சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமாகவும் ‘மதராஸி’ கைக்கொடுத்திருக்கிறதா இல்லை அடிகொடுத்திருக்கிறதா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

தமிழகத்திற்குள் முறைகேடாக துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர முயற்சிக்கிறது ஒரு கும்பல். இந்தத் தகவல் என்ஐஏ அதிகாரியான பிஜூ மேனனுக்குத் தெரிய வர அந்தக் கும்பலை தனது டீமுடன் சேர்ந்து தடுக்கும் ஆப்ரேஷனை முன்னெடுக்கிறார். அது தோல்வியில் முடிய, துப்பாக்கி கண்டெய்னர் லாரி இருக்கும் தொழிற்சாலையை ’தற்கொலை மிஷன்’ மூலம் தகர்க்கும் முடிவுக்கு வருகிறார் பிஜூ மேனன். அதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் நபர்தான் சிவகார்த்திகேயன். காதல் தோல்வியில் தற்கொலைதான் ஒரே தீர்வு என விடாப்பிடியாக இருக்கும் சிவகார்த்திகேயனும் பிஜூ மேனனின் முடிவுக்கு சம்மதிக்கிறார். இந்த ஆப்ரேஷன் வெற்றியடைந்ததா அல்லது பார்வையாளர்களுக்கு சோதனை கொடுத்ததா என்பதே ‘மதராஸி’ படத்தின் மீதி கதை!

’ரகு’ கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் சிவகார்த்திகேயன். உறவுகளுக்கு ஏங்குவது, அநியாயத்தைக் கண்டு பொங்குவது, காதலில் உருகுவது, ஆக்‌ஷனில் பெடலெடுப்பது என ஆல் ஏரியாவிலும் அண்ணன் கில்லியாக மிரட்டியிருக்கிறார். அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பிலும் ஆக்‌ஷனிலும் அதகளப்படுத்தியிருக்கிறார் வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால். ருக்மிணி, ஷபீர், தலைவாசல் விஜய், லிவிங்க்ஸ்டன் என மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சியோடு தொடங்கும் கதை டைட்டில் கார்டு போட்ட இடத்தில் இருந்து தடுமாறத் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி முடிவதற்குள்ளேயே மூன்று பாடல்கள் போட்டு பார்வையாளர்களை ’உச்’ கொட்ட வைக்கிறது. பொதுவாக கதையும் காட்சிகளும் சுமாராக இருந்தாலும் மாஸ் ஹீரோக்களுக்கு பின்னணி இசையில் பின்னி பெடலெடுக்கும் அனிருத் ’மதராஸி’ படத்தில் போனால் போகிறதென்று வேலை பார்த்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் சுத்தமாக மனதில் ஒட்டவில்லை. அனிருத் இசையில் விட்டதை, ஆக்‌ஷனில் எட்டிப் பிடித்திருக்கிறார் ஆக்‌ஷன் கொரியோகிராஃபர் கெவின். வித்யூத் ஜம்வாலின் ஹாஸ்பிடல் சண்டையும் ஹீரோ vs வில்லன் கிளைமாக்ஸ் சண்டையும் அடிபொலி மோனே! அதேபோல, ஒளிப்பதிவாளர் சுதீப் இளமோனின் ஒளிப்பதிவும் அட்டகாசம்!

இறக்க ஒருவன் தயாராக இருக்கிறான் என்ற ஒரு காரணத்தை வைத்தே எப்படி பிஜூ மேனன் சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுக்கிறார்? சிவகார்த்திகேயன் உடல்நிலை குறித்து தெரிந்தும் அவர் அக்கறை படாமல் அவரை என்ஐஏ ஆப்ரேஷனுக்கு அனுப்புவது ஏன்? சிவகார்த்திகேயனை விட்டு செல்ல ருக்மிணி சொல்லும் காரணமும், அதே காரணத்திற்காக சிவகார்த்திகேயன் சண்டை போடும்போது அவர் பதட்டமாவது, அவரது குடும்பப் பின்னணி என்ன என அவரது கதாபாத்திரமும் முழுமையடையாமல் இருக்கிறது. அதேபோல, வில்லன்களுக்கு என்ன வலுவான பின்னணி இருக்கிறது என்பதும் சரியாக திரைமொழியாக்கப்படவில்லை என படத்தின் நீளத்தை போலவே பதில் தெரியாத கேள்விகளும் அதிகம்.

ஸ்டண்ட் காட்சியிலும் ஒளிப்பதிவிலும் கொடுத்திருந்த அக்கறையை திரைக்கதையை செதுக்குவதிலும் செலவிட்டிருந்தால் ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போலவும் ‘மதராஸி’யும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com