கஷ்டப்பட்டு சம்பாதித்தால் எதிர்காலம் மாறிவிடும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் போராட்டத்தை மனதுக்கு நெருக்கமாகப் பேசுகிறது இந்த மெட்ராஸ் மேட்னி!
ஆட்டோ ஓட்டும் தொழிலாளியான காளி வெங்கட்டுக்கு (கண்ணன்) இரண்டு பிள்ளைகள். அவர்கள்தான் உலகம் என நினைக்கும் அவர், பிறரின் தயவோடு காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருக்கிறார். இதை பிள்ளைகள் கெளரவக் குறைச்சலாக பார்க்க, அவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு இடைவெளி எழுகிறது. இறுதியில் இந்த இடைவெளி என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு நடுத்தர குடும்பத்தின் கால் நூற்றாண்டுக்கும் சற்று குறைவான வாழ்க்கை போராட்டம் தான் படத்தின் கதை என்றாலும், நெகிழ்ச்சியான காட்சித் தொகுப்புகளால் ஒரு மென்னுணர்வைத் தருகிறது படம். பரபரப்பு, விறுவிறுப்பு, திருப்பங்கள் போன்ற அதிர்ச்சி வைத்தியங்கள் எதுவும் இல்லாமல் நேர்கோடான திரைக்கதையை எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி.
ஏறக்குறைய முழுப்படமும் சத்தியராஜின் பின்னணி குரலில்தான் சொல்லப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் என்ன அட்வெஞ்சர் இருக்கப்போகிறது என சலித்துக் கொள்வார். பின் அவரே, நடுத்தர வர்க்கத்தின் வாழ்வே பெரும் அட்வெஞ்சர் தான் என உணர்வார். படம் சொல்லியிருப்பதும் இதைத்தான்.
கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் காளி வெங்கட். எக்கி எக்கி நடப்பது, எப்போதும் கையறு மனநிலை, எதை சொன்னாலும் இரண்டு முறை சொல்லுவது என அவரின் கதாபாத்திரம் நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. இதை காளி வெங்கட் அழகாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார். ரீல் அப்பாவான காளி வெங்கட், நிச்சயம் ரியல் அப்பாக்களை நினைவுபடுத்துவார்.
மனைவி கேரக்டரில் வரும் ஷெல்லி நடிப்பும் பிரமாதம். இருந்தாலும் இவருக்கான காட்சிகள் குறைவு. மகளாக நடித்துள்ள ரோஷினி ஹரிபிரியன் ஏக்கத்தை, இயலாமையை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். மகனாக நடித்துள்ள விஷ்வா 2கே கிட்டாக பின்னியிருக்கிறார். வகுப்புத் தோழியோடு அவர் போடும் கடலை, மின்சார அலுவலகத்தில் அவர் செய்யும் சண்டை என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.
படத்தில் வரும் நிறைய சின்ன சின்ன கேரக்டர்களுக்கும் ஒரு பின்கதை வைத்துள்ளார் இயக்குநர். அதில் பொற்கொடி, சாம்ஸ் கேரக்டர் மட்டுமே படத்துக்கு உதவியிருக்கிறது. கேரக்டர்களுக்கு ஏற்ற வசனம் படத்தின் பெரும் பலம். சத்யராஜ் பேசும் வசனங்களில் மட்டுமே கொஞ்சம் செயற்கைத்தனம் தலைகாட்டுகிறது.
ஆனந்தின் ஒளிப்பதிவுதான் நம்மை கதைக்குள் ஈர்க்கிறது. விதவிதமான, வித்தியாசமான கேரா கோணங்கள் மூலம் படத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறார். வடிவேலு குரலில் வரும் ‘என்னடா பொழப்பு இது’ பாடல் கதைக்கு பலம். பாலசாரங்கனின் பின்னணி இசை நிச்சயம் கவனம் பெறலாம்.
சத்யராஜின் பின்னணி குரலில் கதை சொல்வதையும், அளவுக்கு அதிமான கிளைக் கதைகளையும், மெதுவாக நகரும் திரைக்கதையும் படத்தின் குறை எனலாம். அதேபோல், படத்தின் கதைக்களம் சென்னையில் நிகழ்வது போல் காட்டியிருந்தாலும், காளி வெங்கட் குடியிருக்கும் வீடு தொடர்பான காட்சிகள், டிரைவிங் கற்றுக் கொள்ளும் இடம் போன்றவை ஏதோ கிராமத்தில் நடப்பது போல் உள்ளது. இந்த கவனக்குறைவு ஏன் என்று தெரியவில்லை.
கத்தி, கபடா தூக்கி வரும் ஹீரோக்களின் படங்களுக்கு மத்தியில், நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையின் போராட்டத்தை அப்படியே கண்முன் காட்டியிருக்கும் மெட்ராஸ் மேட்னி, குறைகள் இருந்தாலும் கொண்டாடலாம்!