மகுடம் - விமர்சனம்
நம்ம ரேட்டிங்(2 / 5)
நியாயமாக ‘என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை’ என்று சுருக்கமாக முடித்திருக்க வேண்டிருக்கவேண்டிய படம்.
பட்… யாம் பெற்ற துன்பம் இவ்வையகமும் பெறவேண்டாமா ?
அப்பா மகன் என்று இரட்டை வேடங்கள் விஷாலுக்கு, மூன்றாவது வேடமாக இயக்குநர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்.
அப்பா வழக்கம்போல படுபயங்கர தாதா. கடத்தல் தொழில் செய்கிறார். அந்த கடத்தல் தொழிலில் ஏற்கனவே வந்த ஆயிரத்துச் சொச்ச படங்களில் வந்த காட்சிகள் அத்தனையும் இருப்பதால் பெருந்தன்மையுடன் அதைத் தவிர்க்கிறோம்.
நடிகர் விஷாலின் வண்டாவாளங்களை ஏற்கனவே பல படங்களில் அனுபவித்திருக்கிறோம் என்பதால் டைரக்டர் விஷாலுக்கு வருவோம்.
ஆக்ஷன் படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் படம் முழுக்க ஏகப்பட்ட காமெடிகள் பண்ணியிருக்கிறார் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் விஷால். குறிப்பாக மீனவப்பெண் அஞ்சலியை இவர் கவிதை சொல்லிக் காதலிக்கிற இடமெல்லாம் கருவாட்டு வாடை.
படத்தின் துவக்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி கார்டு போடுகிறார்கள். அந்த நன்றி கார்டு எதற்கு என்று பார்க்கும்போது நீங்கள் ராஜா ரசிகரென்றால் மைல்ட் ஹார்ட் அட்டாக் நிச்சயம்.
சின்னக்கவுண்டர் பட ‘முத்து மணி மாலை’ பாடலை நல்ல சவுண்டில் ஒலிக்க விட்டு அப்பாடல் ரைமிங்கில் சுமார் 100 வில்லன்களை சுட்டுப்பொசுக்குகிறார் விஷால். நடுநடுவே அந்தப் பாட்டுக்கு அவர் சில ஸ்டெப்களும் போடும்போது, நம்மையறியாமல் கர்த்தரே என்னைக் காப்பாற்றுங்கள் என்று ஜெப மூடுக்குப் போய்விடுகிறோம்.
மூனுமணி நேரம் 5 நிமிடம் ஓடுகிற படம் முழுக்க இப்படி முந்நூறுக்கும் மேற்பட்ட சோதனைகள்.
க்ளைமேக்ஸில் முக்கிய வில்லனை விஷால் கொல்லப்போகும்போது ஒரு மீனவ தாய்க்குலம் ‘தம்பி அந்த பாவத்தை நீ செய்ய வேண்டாம். கத்தியை என்கிட்ட கொடு’ என்று தான் வாங்கிக்கொள்கிறார்.
மகுடம் மாதிரி ஒரு படம் எடுத்த பாவமே இந்த ஜென்மத்துல விஷாலுக்குப் போதும் என்று அந்த மீனம்மா நினைத்திருப்பார் போல.
மகுடம் பிஞ்சுபோன பிளாஸ்டிக் குடம்.
