மண்டாடி - விமர்சனம்

மண்டாடி - விமர்சனம்

Published on
நம்ம ரேட்டிங்(2.5 / 5)

வெறும் ஹீரோ மட்டும் அல்ல, இனி ஆக்‌ஷன் ஹீரோவேதான் என்று முடிவெடுத்துவிட்டார் போல சூரி. ‘விடுதலை’, ‘மாமன்’ படங்களுக்கு அடுத்து அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் மூன்றாவது படம் இந்த ’மண்டாடி’.

மண்டையடி என்று முண்டியடித்து வாசிக்கவேண்டாம். இது சார்பட்டா, சப்போட்டா பரம்பரை வகையறாக்களைப் போல ஒரு மீனவ வகையறாவின் பெயர். ‘மண்டையைப்போடுற வரைக்கும் தான் கத்துக்கிட்ட வித்தையை மறக்க மாட்டான் மண்டாடி வகையறா’ என்றொரு டயலாக்கும் கூட படத்தில் இருக்கிறது.

’ஊரைவிட்டே ஓடிப்போ… என் மூஞ்சியிலேயே முழிக்காதே’ என்று காதலி மஹிமா நம்பியாரால் விரட்டியடிக்கப்பட்ட சூரி, அதே காதலியின் மகன் உயிருக்கு ஆபத்து என்றவுடன் சொந்த மீனவ கிராமத்துக்கு திரும்பி வருகிறார். அங்கே முன்னாள் நண்பனும் இந்நாள் எதிரியுமான சுஹாவுடன் இருந்த பகை இன்னும் தீப்பிடிக்கிறது. ஏனென்றால் சுஹா மஹிமாவின் மகனைக் கொன்று விடத்துடிக்கிறார்.

இந்த மோதலை ஒட்டி ஒரு மெகா பாய்மரப்போட்டி நடைபெறுகிறது. அப்போட்டியில் மண்டாடி வகையறாவைச் சேர்ந்த சூரி வென்றாரா, வில்லனைக் கொன்றாரா என்று போகிற கதை.

படிக்கிறபோது தோணுகிறதே அதே சுமார் ரகக்கதைதான். சூரி அணிக்கு சரியான போட்டியாளர்கள் இல்லாதது, அந்த அணியில் கலந்துகொள்ளாமல் பலர் ஒதுங்குவது, ஜெயிக்க வாய்ப்பேயில்லை என்பது போல் காட்சிகளை அமைத்து த்ரில்லிங்காக வெல்வது என்று பல சில்வர் ப்ளேட்களில் பார்த்துச் சலித்த அதே டெம்ப்ளேட்.

ஆனால் கதையின் ஊடாக வருகிற சூரி, மஹிமாவின் காதல் கதையும் அக்காதல் தோற்றபிறகு அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று போகிற காட்சிகளும் மனதைக் கொள்ளை கொள்கிற ரகம்.

அக்காட்சிகளில் சூரியும் மஹிமாவும் நிஜ காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். வில்லன் சுஹா அட்டகாசமான தேர்வு. ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் பொருந்திவரவேயில்லை.

சத்யராஜ் இடைவேளைக்குப் பிறகு ஒரு கெஸ்ட் ரோலில் வந்து போகிறார். ஃபைட் மாஸ்டர் ஸ்டன்ட் சிவாவை பக்கவாதம் வந்த ஒரு கேரக்டரில் சேரிலேயே உட்காரவைப்பதற்கெல்லாம் ஒரு கொடூர மனம் வேண்டும்.

பொதுவாக சாதாரண கடல் காட்சிகளே நம்மை சிலிர்க்கவைக்கும். ஆனால் படம் முழுவதுமே கடலில்தான் என்கிற நிலையிலும் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் ஒரு மந்த அலைதான் வீசுகிறது.

இசை ஜி.வி. பிரகாஷ். ஷூட்டிங்ல பிஸியா இருக்கேன். என்னத்தையாவது போட்டு அனுப்புங்க என்று உதவியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார் போல. பாடல்களும் பரிதாபம்.

அறிமுகம் மதிமாறன் புகழேந்தி எழுதி, இயக்கியிருக்கிறார். மெச்சிக்கொள்ளவும் முடியாத, குறை சொல்லவும் முடியாத ஒரு இயக்கம்.

மண்டாடி சூரிக்கு இன்னொரு ஜஸ்ட் எஸ்கேப்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com