மிஸ்யூ: திரைவிமர்சனம்!

Miss you Movie Review
மிஸ் யூ திரைப்பட விமர்சனம்
Published on

நடிகர் சித்தார்த் – ஆஷிகா ரங்கராத் நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'மிஸ் யூ'. இளசுகளைக் கவரும் வகையில் தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

முன்கோபியான வாசு (சித்தார்த்) இயக்குநராகும் கனவில் உள்ளார். அவர் விபத்தொன்றில் சிக்க, நினைவு இழப்பு ஏற்படுகிறது. உடல் தேறினாலும் நினைவு திரும்பாத நிலையில், திடீர் நண்பருடன் பெங்களூர் செல்கிறார். அங்கு சுப்புலட்சுமியை (ஆஷிகா) பார்க்கிறார். அவரின் அழகிலும் நேர்த்தியிலும் மயங்கும் அவர், தன் அம்மாவிடம் ஆஷிகாவின் போட்டோவைக் காண்பித்து, இவள்தான் உன் மருமகள் என்கிறார். போட்டோவை பார்த்த அவர் ஷாக்காகிறார். இந்த பேரதிர்ச்சிக்கு என்ன காரணம்? சித்தார்த் நினைவு இழப்பால் அவர் எதையெல்லாம் மறந்தார் என்பதற்கான பதிலை சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.

மிஸ் யூ காதல் படம்தான் என்றாலும், கதைக்களம் ரொம்ப புதுசு. முதல் பாதி கதை கொஞ்சம் போர் அடித்தாலும் இரண்டாம் பாதி உருக வைக்கிறது.

இந்தியன் 2 வில் பார்த்த அதே சித்தார்த். முதல் பாதியில் புயலாகவும் இரண்டாம் பாதியில் பூ-வாகவும் வருகிறார் சித்தார்த். காதல் காட்சிகளில் அசத்தியுள்ளார். இவருக்கு இணையாக நடித்துள்ளார் ஆஷிகா. பயந்த சுபாவமாக வருபவர், போகப்போக முதிர்ச்சியை வெளிக்காட்டக் கூடியவராக இருக்கிறார். உடல்மொழியிலும் பேச்சிலும் அவரின் மாற்றம் நல்லாவே தெரிகிறது.

நண்பர்களாக வரும் கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் செய்யும் காமெடிகள் அட்டகாசம். இதில் மாறன் தனித்து தெரிகிறார். அவரும் பேசும் ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் அப்படியொரு சிரிப்பலை. படத்தில் வில்லன் கேரக்டர் இருந்தாலும், அதற்கு பெரிய ஸ்கோப் இல்லை. நாயகியை மிரட்ட மட்டுமே வருகிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசை கைகொடுத்த அளவுக்கு பாடல்கள் எதுவும் ஒட்டவில்லை. ஒளிப்பதிவு கே.ஜி. வெங்கடேஷ் காதல் காட்சிகளை அழகாக காட்டியுள்ளார். எடிட்டிங் தினேஷ் பொன் ராஜ்.

காதலும் நகைச்சுவையும் கலந்து வந்திருக்கும் மிஸ் யூ இளசுகளை நிச்சயம் கவரும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com