நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராகவும் அவரது மகள் ஜோவிகா தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் எப்படி வந்துள்ளது என்று பார்ப்போம்.
நாற்பது வயது வனிதாவும் நாற்பத்து ஐந்து வயது ராபர்ட்டும் பாங்காக்கில் சந்தோஷமாக வாழ்கிறார்கள். "இப்ப, குழந்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் பின்னால் ரொம்பவே கஷ்டம்" என்று சிலர் வனிதாவை உசுப்பேற்ற, அவரும் உடனே அம்மாவாக நினைக்கிறார். ஆனால், குழந்தை வேண்டாம் என்கிறார் ராபர்ட். அம்மாவாகியே தீருவேன் என்று வனிதா பல ரொமான்ஸ் முயற்சிகள் செய்ய. அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடல்ட் கன்டன்ட்டில் சொல்லும் படம் 'மிஸஸ் அன்ட் மிஸ்டர்’.
முப்பதில் குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு குலைந்துவிடும் என்று நினைக்கும் பெண்கள், நாற்பதில் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தால் என்ன அகும் என்பதை கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் வனிதா விஜயகுமார்.
நாற்பது வயது பெண்ணின் குழந்தைக் கனவு, கரு உருவாக ஏற்படும் சிக்கல், கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்னைகள், சுற்றி இருப்பவர்களின் அட்வைஸ் போன்ற நல்ல நல்ல விஷயங்களை படம் கொண்டிருந்தாலும், அதில் அடல்ட் கன்டன்ட் கலந்து கொடுத்து இருப்பது நெருடலையே ஏற்படுத்துகிறது.
அம்மாவாகும் ஏக்கம், அதற்காக போடும் திட்டங்கள், கணவருடன் சண்டை, ரொமான்ஸ் காட்சிகளில் வனிதா நடிப்பும் ஒகே. நாயகியாக நடிப்பதால் வெயிட் குறைத்து, அதற்கேற்ப காஸ்ட்யூமுடன் நடித்து இருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். மகள் பணம் போட்டதால் செலவை குறைத்திருப்பார் போல வனிதா! பல சீன்களில் அவரின் கவர்ச்சி காஸ்ட்யூம் செட்டாகவில்லை. சில குளோசப் காட்சிகளில் பயமுறுத்துகிறார்.
ராபர்ட் தன் கேரக்டர் அறிந்து ஓரளவு நன்றாகவே நடித்து இருக்கிறார். அவர் நண்பராக வரும் கணேஷ், வனிதாவுக்கு ஐடியா கொடுக்கும் ஆர்த்தியும் மனதில் நிற்கிறார்கள். தெலுங்கு கலந்து பேசி ஓவர் ஆக்டிங் செய்து இருக்கிறார் அம்மாவாக வரும் ஷகிலா. அவர் டீமில் இருக்கும் ஆன்ட்டிகளின் அட்டகாசம் இன்னும் ஒவர். இவர்களுடன் கிரண், பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி என படத்துல பலர் நடித்துள்ளனர். பாங்காக், சித்துார் என 2 இடங்களில் கதை நடக்கிறது. பாங்காக் காட்சி ஆறுதல் என்றால், சித்துார் காட்சிகள் ரொம்பவே சுமார். வலிந்து திணிக்கப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள், சிரிக்க வைக்காத காமெடி காட்சிகள், தேய்வழக்கான வசனங்கள் என படம் ஜல்லியடிக்கிறது.
வனிதா, ராபர்ட்டிற்கு பதில் வேறு இளம் நடிகர்கள் நடித்து இருந்தால் வேறு மாதிரி இருந்து இருக்கலாம். இவர்களுக்கு இடையில் பவர் ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது வந்து இம்சை கொடுக்கிறார். அவரை நடிக்க வைத்தது ஏன் என்றே புரியவில்லை. கிளைமாக்ஸ் காட்சியும் நம்மை காப்பாற்றவில்லை.
கதை, திரைக்கதைதான் சுமார் என்றாலும் இயக்கத்தில் வனிதா பெயில். படத்தில் எடிட்டர் ஒருவர் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு தேவையில்லாத சீன்கள் நிறைய.
ஸ்ரீகாந்த்தேவாவின் பின்னணி இசை சோதிக்கிறது. காமெடி, ரொமான்ஸ் காட்சிகளில் அவர் போட்டிருக்கும் பின்னணி இசை சொதப்பல். படத்தில் சரியான இடத்தில் வரும் கிரணின் ‘ராத்திரி சிவராத்திரி’ ரீமிக்ஸ் பாடல், அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் ஓகே.
ஜாலியா ஒரு படம் எடுப்பார்கள் என்று பார்த்தால் ஜாலி பண்ணுவதற்கு ஒரு படம் எடுத்திருக்கிறார் வனிதா. அவருக்கு ஜாலி... நமக்கு?