'மொத ராத்திரி' - விமர்சனம்
நம்ம ரேட்டிங்(3 / 5)
தலைப்பு ‘மொத ராத்திரி’... அதுவும் ஒரே ராத்திரி நடக்கும் கதை என்றவுடன் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இருக்காது என்கிற சபல நினைப்புடன் படம் பார்க்க செல்பவர்களுக்கு முன்கூட்டியே ஒரு ஸ்பாயிலர் அலெர்ட்... இது அது அல்ல. சுருக்கமாகச் சொன்னால் முதல் ராத்திரியில் நடக்கவேண்டிய அந்த சமாச்சாரத்தைத் தவிர எல்லாம் நடக்கும் படம்.
கதை இதுதான். ஆறு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்க்கும் ரிஷிகாந்தை மருமகனுக்கு காதுகுத்து என்கிற பெயரில் உறவினர்கள் அவசர அவசரமாக சொந்த ஊருக்கு வரவழைக்கிறார்கள். வந்து இறங்கியவுடன்தான் தெரிகிறது காதுகுத்து நடக்கவிருப்பது மருமகனுக்கு அல்ல தனக்குத்தான் என்பது. அதாவது அவருக்கு சொல்லாமலே திருமண ஏற்பாடுகள் செய்து விமான நிலையத்திலிருந்து திருமண மண்டபத்துக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் மணப்பெண்ணோ எந்த நேரத்திலும் எஸ்கேப் ஆகிவிடும் எண்ணத்தில் தனது காதலனுக்காகக் காத்திருக்கிறார். ஒரு அக்மார்க் சோப்ளாங்கியான காதலன் நேரத்துக்கு வராததால் வேண்டாவெறுப்பாக காண்டா மிருகத்துக்கு வாக்கப்பட்டதுபோல் திருமணமும் நிகழ்ந்துவிடுகிறது.
அடுத்து நடக்கவேண்டிய மொத ராத்திரிக்காக மொத்த உறவுமுறையினரும் அறைக்கு வெளியே காத்திருக்க, மணமகனுக்கு காதலியின் எஸ்கேப் திட்டமும் தெரிந்துவிட, வந்து சேர்ந்த காதலனும் தலைதெறிக்க ஓடிவிட ‘யோவ் என்னவெல்லாம் பண்ணிவச்சிருக்க டைரக்டரே?’ என்று தடதடக்கிறது கதை.
சமீபகால சில படங்களில் கதாநாயகன்களை நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பமிடத் துவங்கியிருக்கிறார்கள் நாயகிகள். இந்த மொதராத்திரி நாயகி அஸ்மிதாவும் அதே ரகம்தான். ஒரு ஆர்வக்கோளாறு காதலனுக்கும், திடீர் கணவனுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு படுகிற பாடுகளை அனாயசாகச் செய்திருக்கிறார். நாயகன் ரிஷிகாந்தும் குறை வைக்கவில்லை. ஆணவக்கொலை செய்யப்பட்ட முன்னாள் காதலிக்காக நம்மையும் சேர்த்து உருக வைக்கிறார்.
இவர்களைத்தாண்டி அப்துல் லீ, பக்ஸ், ஏ.வெங்கடேஷ், சேத்தன் என்று நடிப்பில் ஸ்கோர் பண்னியிருக்கிற கேரக்டர்கள் டஜனுக்கும் மேல் தேறும். எல்லாபுகழுக்கும் காரணம் இயக்குநரே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
காதலன் பாத்திரத்தில் நடித்து எழுதி இயக்கியிருக்கும் ராஜா கருப்பசாமி தமிழ் சினிமாவுக்கு ஒரு சுவாரசிய வரவு. தலைப்பு தொடங்கி படத்தின் பல காட்சிகளில் ’தூறல் நின்னு போச்சு’ கால பாக்யராஜ் சாயல்.
உள்ளூர் அம்மனுடன் சதா உரையாடல் நடத்திக்கொண்டிருக்கும் சேட்டன் சாமி வந்து ஆடுகையில், ‘எங்களுக்கு சாமியை விட சம்பிரதாயம் முக்கியம் என்று பெண்கள் கட்டையைப்போடுவது செம நக்கல். அதே போல் கதையில் வருகிற காதலர்களின் இரு நண்பர்கள் விடாது கருப்பு ஸ்டைலில் அவரத் துரத்தித் துரத்தி டார்ச்சர் பண்ணுவது டெர்ரிபிள் தியேட்டர் மொமண்ட்.
ட்ரெண்டில் நாமும் இருக்கவேண்டுமே என்பதற்காக கதையின் ஒரு ஓரத்தில் ஆணவக்கொலை எதிர்ப்பும் பேச முயற்சித்திருக்கிறார் கருப்பசாமி. ஏ.வெங்கடேஷ் ஒரு தலித் தம்பியின் பைக்கில் தள்ளி உட்கார்ந்து வருவதெல்லாம் 80 களில் வந்திருக்கவேண்டிய காட்சி.
கதையின் முதல் பாதியில் இருந்த சுவாரசியம் இரண்டாவது பாதியில் கொஞ்சம் மிஸ்ஸிங்.
இசை பரத் சங்கர். கல்யாணக் கச்சேரியை சிறப்பாகவே செய்திருக்கிறார். சுரேந்தரின் ஒளிப்பதிவும் ஓ.கே.ரகம்தான்.
ஒரு திருமண வீட்டின் ரகளைகளை படு சுவாரசியமாக பதிவு செய்த வகையில் மொத ராத்திரி சுகராத்திரியேதான்.

