முஃபாசா: த லயன் கிங் - திரைவிமர்சனம்!

Mufasa: The Lion King
முஃபாசா: த கிங் லையன்
Published on

அரசாளும் தகுதி யாருக்கு உரியது…? ராஜவம்சத்தை சேர்ந்தவனுக்கா அல்லது தகுதியும் திறமையும் படைத்தவனுக்கா என்பதை வித்தியாசமாக சொல்லி அசத்தியிருக்கிறது முஃபாசா.

பெற்றோரின் அரவணைப்பில் வளரும் முஃபாசா, ஆற்று வெள்ளத்தில் சிக்கி வேறொரு நாட்டுக்கு அடித்துச் செல்கிறான். அங்கு அவனுக்கு உதவிக்கரம் நீட்டுகிறான் அந்நாட்டு இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி.

இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா. அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்குக் குறி வைக்கிறான் கீரோஸ். இவனின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை மீண்டும் கண்டடைந்தானா முஃபாசா என்பதே முஃபாசா: த லையன் கிங் (Mufasa: The Lion King) படத்தின் மீதிக்கதை.

முதல் பாகத்தை ஜான் ஃபேவ்ரி இயக்க, இந்தப் பாகத்தை இயக்கியிருக்கிறார் மூன்லைட் புகழ் பேரி ஜென்கின்ஸ்.

முஃபாசா, டாக்கா, நலா, ரஃபீக்கி(சிம்பன்சி) மற்றும் சசூ (ஹார்ன்பில் பறவை) ஆகிய ஐந்துபேரும் மிலேலே என்ற இடத்தை நோக்கி வருவதை சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்து எடுத்துள்ளார் இயக்குநர்.

முஃபாசாவின் முன்கதையுடன், டாக்காவின் முன்கதையும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. வில்லனாக வரும் கீரோஸூக்கு என்னதான் நோக்கம் என்று தெரியவில்லை. முரட்டு வில்லனாக மட்டுமே வருகிறது கீரோஸி.

ரஃபீக்கி, சசூ, டிமோன், பும்பா செய்யும் லூட்டி அட்டகாசம். படத்தில் யானைகளை, சிங்கங்களை, குதிரைகளை, புல்வெளியை தத்ரூபமாகக் காட்டியுள்ளனர். ஒவ்வொரு காட்சியையும் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம். காட்டில் உட்கார்ந்திருக்கும் உணர்வைக் கொடுக்கிறது படம்.

முஃபாசாவிற்கு அர்ஜுன் தாஸும், டாக்காவுக்கு அசோக் செல்வனும் குரலுதவி செய்திருக்கிறார்கள். ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, விடிவி கணேஷ் என நிறைய பழகிய குரல்கள்.

வழக்கமாக தமிழ் டப்பிங்கில் கதையைவிட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். ஆனால், முஃபாசாவில் தமிழ் டப்பிங் கொஞ்சம் சொதப்பல்தான்.

ரோபோ ஷங்கரும், சிங்கம்புலியும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். அர்ஜுன் தாஸிற்கு இயல்பாகவே கர்ஜிக்கும் குரல்தான் இருப்பதால், அவருக்கு அது சுலபமாகப் பொருந்திப்போகிறது. பல இடங்களில் அசோக் செல்வனின் குரல் நம்மை டாக்காவின் கதாபாத்திரத்துடன் ஒன்றிணைய வைக்கிறது.

முதல் பாகத்தின் கதாபாத்திரங்களின் தொடர்ச்சிதான் என்பதால், இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க முழுக்க டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிவிடுகிறது. கதாபாத்திரங்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை நம்மால் எளிதாக யூகிக்க முடியும் என்பதால் சுவாரஸ்யம் கொஞ்சம் மிஸ்ஸிங். பின்னணி இசை கைகொடுத்த அளவுக்கு, பாடல்கள் சோபிக்கவில்லை. பாடல் வரிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘வந்தேறி இல்லை; வழித்தவறி வந்தவன்.’ என்ற வசனம் கதைக்கு கனகச்சிதம்.

முதல் பாகத்தில் இருந்த உருக்கமும் நகைச்சுவையும் இதில் மிஸ்ஸிங் என்றாலும் ‘வாவ்’ போட வைக்கும் காட்சி அமைப்புகள் முஃபாசாவின் ஸ்பெஷல்.

logo
Andhimazhai
www.andhimazhai.com