’நூறு சாமி’  விமர்சனம்… தாய்ப்பாசத்துல  வடிவேலுவையே மிஞ்சிய சசிசாமி ?

’நூறு சாமி’ விமர்சனம்… தாய்ப்பாசத்துல வடிவேலுவையே மிஞ்சிய சசிசாமி ?

Published on
நம்ம ரேட்டிங்(3 / 5)

‘பூ’ மாதிரியான உலகத்தரமான ஒரு படத்தை அட்டர்ஃப்ளாப் ஆக்குன பாவத்துக்கு பரிகாரம் தேட இந்தப் படத்தையாவது தியேட்டர்ல போய்ப் பாருங்க… இப்படி ஒரு கருத்து நேற்று முதல் சோஷியல் மீடியாவில் வலம் வருகிறது.

திரும்பின திசையெல்லாம் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திரைபிரபலசாமிகள் இந்த நூறுசாமிக்கான புரமோஷன்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதற்கு மத்தியில் இப்படியும் ஒரு வெளம்பரம்.

இதற்கு பதில் ‘சரிங்க சாமியா… வெரி ஸாரிங்க சாமியா?

முதலில் கதையைப் பார்ப்போம்.

கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் சுவாசிகா. இளம் வயதில் கணவர் தவறிவிட, இரு பையன்களை படாதபாடுபட்டு வளர்க்கிறார். தனது நாற்பது வயதைத் தொடும் சமயத்தில் மறுமணம் செய்துகொள்ளும் ஆசை வருகிறது அவருக்கு. சிறுவனாக இருக்கும்போது அதை மூர்க்கமாக எதிருக்கும் அவரது மூத்த மகன் அஜய் , வாலிப வயதை எட்டியவுடன் தன் தவறுக்கு வருந்தி, தம்பியையும் சேர்த்துக்கொண்டு தாய்க்கு மறுமணம் புரிய முடிவெடுக்கிறான். அவனது அச்செயலை தாயே கூட ஏற்றுக்கொள்ளத் தயங்க, ஊரார், உறவினர் எதிர்க்க ஒரு வினோதமான க்ளைமேக்ஸுடன் படம் முடிகிறது.

‘98ல் சொல்லாமலே மூலம் அதிர்வான என்ட்ரி கொடுத்த சசிக்கு இது பத்தாவது படம். சில தோல்விகளை சந்தித்தபோதும், மசாலா சினிமா பக்கம் போய்விடாமல் நிதானமான சினிமாக்கள் செய்வதில் எப்போதும் கவனம் ஈர்ப்பவர். இந்த நூறு சாமியும் நிச்சயம் அவருக்கு பேரு சொல்லும் படம்தான்.

ஆனால் கதையில் செயற்கையாக வைக்கப்பட்ட சில திருப்பங்கள், குறிப்பாக யூடியூபர்களை வைத்துக்கொண்டு,படு அமெச்சூர்த்தனமாக வைக்கப்பட்ட காமெடி க்ளைமாக்ஸ் காட்சிகள் கதையின் நோக்கத்தை காவு கேட்கின்றன.

இன்னொரு பக்கம்… அம்மாவை அம்மாவாகப் பாருங்கள். அவரை சாமியாக்க வேண்டாம் என்று சொல்ல வந்துவிட்டு படத்தின் தலைப்பையே நூறு சாமி என்று வைத்ததை என்னன்னு சொல்றது சாமியோவ்.

படத்தின் இன்னொரு குறை. சுவாசிகாவின் காமத் தேவையை பூசிமெழுகிப் பேசுவது. இதைப் பேசுவதற்காக ஒரு கன்னியாஸ்திரியை கதையில் வைத்து, அவர் பயாலஜி படித்ததால் உடல் தேவை குறித்து கிளாஸ் எடுப்பது, ஆனால் அதே கன்னியாஸ்திரி மத உணர்வுக்காக உடல்தேவயை உதறி வாழ்வது என்ன கொடுமை சசி சார் இதெல்லாம் ?

படம் பார்த்து ஒரு வரி விமர்சனம் எழுதுகிறவர்கள் சுவாசிகாவுக்கு தேசிய விருது தந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி நாமும் வழிமொழிகிறோம்.

இடைவேளைக்குப் பின்னர் க்ளைமேக்ஸ் நெருங்கும் சமயம் நாலைந்து காட்சிகளில் மட்டுமே வருகிறார் விஜய் ஆன்டனி. மெருகேறிய நடிப்பு.

வெகு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்கள் எனினும் அருள்தாஸ், கருணாஸ், பாலாஜி சக்திவேல் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள்.

தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவு தரம்.

இசை பாலாஜி ஸ்ரீராம். பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.

‘பிச்சைக்காரன்’ அம்மா சென்டிமென்ட் மூலம் நன்கு கல்லா கட்டிய சசி மீண்டும் அதே மாவில் வேறு தோசை சுட்டிருக்கிறார்.

இந்தப் படத்துக்காக அல்ல.. ‘பூ’ மாதிரியான உலகத்தரமான ஒரு படத்தை அட்டர்ஃப்ளாப் ஆக்கிய பாவம் செய்தவர்களில் நீங்களும் ஒருவர் எனில் இப்படத்தை ஒருமுறை தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com