ஓம் - விமர்சனம்

ஓம் - விமர்சனம்

Published on: 
நம்ம ரேட்டிங்(2.5 / 5)

செம்மரக் கடத்தல்காரர்களை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாக சம்பாதித்த ‘புஷ்பா’ பார்ட் 1, 2களின் வழியில் இன்னொரு மசாலாப்படம். ஓம் என்றால் ஆபரேஷன் மோல் என்று அர்த்தம்.

2015ல் செம்மரக்கடத்தல் தொடர்பாக ஆந்திராவில் 20 அப்பாவித் தமிழர்கள் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு லேசில் மறந்திருக்க முடியாது. அந்த அப்பாவித்தமிழர்களுக்கு நீதி கேட்பது போன்ற பாவனையில் புஷ்பாக்கள் போல் அல்லாமல் தமிழர்கள் இன்னும் கொஞ்சம் கூடுதல் கருணை காட்டியிருக்கிறார்கள்.

கதை ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறுகிறது.

தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் சென்று செம்மரங்களை வெட்டிக் கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் மிகப்பெரிய கடத்தல் மாஃபியா செயல்படுகிறது. இந்தக் கும்பலின் முக்கியப் புள்ளியாக இருக்கிறார் மம்மூட்டி நடித்த பர்மா கார்த்திகேயன். அவருக்கும் மேலே சர்வதேச தாதாவாக வழக்கம்போல் ஒரு இஸ்லாமிய வில்லன் இருக்கிறார்.

இந்த கடத்தல் வலையமைப்புக்குள் ஊடுருவி உண்மைகளைக் கண்டறிய அண்டர்கவர் காவல்துறை அதிகாரியாகச் செல்கிறார் தனுஷ்.

அங்கு எதிர்பாராதவிதமாக தனது தந்தையையே பறிகொடுக்கிறார். அதனால் மிகவும் கொந்தளிப்பான மனநிலைக்கு ஆளாகி. தனது காவல்துறை கடமையையும் தனிப்பட்ட உணர்வுகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.

தனுஷின் நடிப்பில் குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் உள்நாட்டு தாதாவாக வரும் மம்முட்டி பாத்திரம் பரிதாபமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் நல்லவரா கெட்டவரா என்று நாயகன் கமலைவிட அதிகம் குழப்புகிறார்கள். அவரை கதையில் தனுஷ் நடத்தும் விதத்தைப் பார்த்தால் என்னை விட அதிக தேசிய விருதா வாங்கியிருக்கீஙக. உங்களை எப்பிடி டம்மியாக்குறேன் பாருங்க என்று தனுஷின் மைண்ட் வாய்ஸ் ரொம்ப சத்தமாகவே கேட்கிறது.

நித்யா ரெட்டி என்கிற பாத்திரத்தில் தனுஷின் பொறுப்பு அதிகாரியாக வரும் சாய் பல்லவி தனுஷின் மனைவியாக வரும் ஸ்ரீலீலா இருவருமே நல்ல தேர்வு. இவர்களுக்கு கிளாமர் காட்சிகள் பாடல்கள் எதுவும் வைக்காமல் இயக்குநர் நம்மைக் காப்பாற்றுகிறார். தனுஷின் தந்தையாக மலையாள குணச்சித்திர நடிகர் இந்திரன்ஸ். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

ஒளிப்பதிவு எழில் அரசு. பெயரில் இருக்கும் எழில் ஒளிப்பதிவிலும் இருக்கிறது.

இசை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் அபயம் தேடியிருக்கும் சாய் அபயங்கர். இந்த ஆண்டு தமிழ் சினிமா சந்தித்திருக்கும் முக்கிய சோதனைகளில் இவருக்கு முக்கிய இடமுண்டு.

அமரன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தில் ரொம்பவே சறுக்கியிருக்கிறார்,

உண்மைச் சம்பவத்தை ஒட்டி ஒரு கதை சொல்லும்போது இருக்கவேண்டிய நேர்மை இப்படத்தில் கொஞ்சம் கூட இல்லை. தனுஷுக்கு பில்ட் அப் கொடுப்பதற்காக கதை முழுக்க லாஜிக்குகளை காவு கொடுத்துக்கொண்டே வருகிறார். படத்தின் இன்னொரு துயரம் 3 மணி நேரம் ஓடுவது.

மொத்தத்தில் ஓம் கெட்டுப்போச்சி டைரக்டரோட நேம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram