மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போல், யானையை மீட்கும் படை இல்லாத தலைவனின் கதையே இந்த ‘படை தலைவன்’. விஜயகாந்தின் மகன் நாயகனாக நடிக்கிறார் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சேத்துமடை எனும் கிராமத்தில் நாயகன் வேலு (சண்முகபாண்டியன்) அவரது அப்பா (கஸ்தூரி ராஜா), தங்கை, வளர்ப்பு யானை (மணியன்) என எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். கடன் பிரச்னைகள் கைமீறும் வேளையில் உடன்பிறப்பாக நினைத்து வளர்க்கப்படும் யானையை வைத்து சம்பாதிக்க நினைக்கிறார்கள். அதனால் யானைக்கு உருவாகும் பிரச்னைகளிலிருந்து வேலு எப்படி யானையை காப்பாற்றுகிறார் என்பதே படைத்தலைவனின் கதைக்களம்.
தொலைந்த பொருளை தேடும் ஒருவனின் கதையை கமர்சியல் படமாக எடுக்க நினைத்த இயக்குநர் அன்பு, திரைக்கதையில் கோட்டைவிட்டாரா அல்லது திரைக்கதையே எழுதாமல் விட்டாரா என்று தெரியவில்லை. செயற்கையான காட்சி அமைப்பு, மேம்போக்கான கதாபாத்திர உருவாக்கம் என முழு படமும் ஜல்லியடிக்கிறது.
சண்முக பாண்டியனுக்கும் அவரின் குடும்பத்துக்கும் இடையேயான பாசப்பிணைப்பு அல்லது அந்த யானைக்கும் அந்தக் குடும்பத்திற்குமான உறவு, ஹீரோவிற்கும் யானைக்குமான உறவு என எதையுமே கதையின் போக்கு உணர்த்தவே இல்லை. ஹீரோ யார்? அவரது பலம், பலவீனம், அவர் எப்படிப்பட்ட ஆள், வறுமையில் இருக்கும் குடும்பத்திற்கு அவர் என்ன செய்கிறார்? என முக்கியமான விசயங்களுக்கு கவனம் கொடுத்திருக்கலாம்.
கஸ்தூரி ராஜா கேரக்டர் அளவுக்கு கூட சண்முகபாண்டியனின் கேரக்டர் எழுதப்படவில்லை. அவருக்காகவே பல காட்சிகள் வலிந்து உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, அவரை இந்தியாவில் உள்ள அனைத்து ரவுடிகளும் தேடுவது போன்று காட்டுவார்கள். அது ஏன் என்று கடைசி வரை சொல்லவே இல்லை. அதேபோல், ஏ.ஐ.இல் வந்த விஜயகாந்த், பொட்டு வச்ச தங்க குடம் பாடல் போன்ற முயற்சிகளும் புஸ்வானமாகிவிட்டது.
படத்தின் முக்கியமான அங்கமாக இருக்கும் அந்த மலைக்கிராமத்தின் காட்சிகளும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. அந்த கிராம மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் படும் கஷ்டங்களை கொஞ்சமேனும் தெளிவாகக் காட்டியிருக்கலாம். வில்லன் பற்றிய சித்தரிப்பு அபத்தம். 80களில் வரும் கொடூர வில்லன்களை இப்போது காட்டினால் யாராவது ஏற்பார்களா? படத்தின் வசனங்களும் ஒட்டவில்லை. வலிந்து திணிக்கப்பட்டுள்ளன.
படத்தின் ஓரே ஆறுதல் இளையராஜாவின் பாடல்கள் மட்டும். ஆனால், பின்னணி இசை ஏமாற்றம்தான். படத்தின் மேக்கிங் கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லை. படத்தின் தலைப்பை மட்டும் கெத்தாக வைத்தவர்கள் மற்றவற்றில் கோட்டை விட்டுவிட்டார்கள்.
படை தலைவன் என்று படத்தலைப்பில் ‘த்’ சேர்க்காமல் செய்த சந்திப்பிழை படத்திலும் மற்ற விஷயங்களில் தொடர்கிறது!