Ram Charan
Ram Charan Peddi Poster

பெத்தி… டைரக்டரே ஏன் இப்பிடிப் போகுது உங்க புத்தி?

Published on
நம்ம ரேட்டிங்(2 / 5)

டைரக்டர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ ஹீரோவாக தமிழ் ரசிகர்கர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர் என்பதால் ராம் சரணுக்கு தனி அறிமுகம் தேவையில்லை. அது கேம் சேஞ்சர் என்றால் இந்த பெத்தி கேம் டேஞ்சர்.

‘பெத்தி’ என்கிற தெலுங்கு வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கூகுளில் தேடி டயர்டாக வேண்டாம். இது கதாநாயகனின் பெயர். மலையடிவார கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெத்தி, ரயில் நின்று போகாத தனது கிராமத்துக்கு இந்திய அளவில் அடையாளம் தேடித்தந்து சாதிக்கும் கதை. படத்தில் கிரிக்கெட் இருக்கு.. மல்யுத்தம் இருக்கு, மல்யுத்த கிரிக்கெட் இருக்கு, மூனு சீன்ல ஸ்ரீதேவி பொண்ணு இருக்கு, ஒரு குத்துப்பாட்டுக்கு நம்ம கமல் பொண்ணு ஸ்ருதி இருக்கு…அதாவது இல்லாதது கதை மட்டுமே.

மூன்று மணி நேரம் 10 நிமிடம் ஓடும் கதையில் மூன்று மணி நேரத்தை கதாநாயகனுக்கு பில்ட் அப் கொடுப்பதிலும் சுமார் பத்து நிமிடம் கதை சொல்வதற்கும் செலவழித்திருக்கிறார்கள். ஒரு சில கோடிகளில் எடுத்திருக்க முடிகிற படத்துக்கு 300 கோடி வரை செலவழித்திருக்கிறார்கள் என்றால் புரிந்துகொள்ள முடியும்.

மலைஜாதி இளைஞன் ஒருவனின் விளையாட்டு சாகசம் என்று கதை போனாலும் ஒரு லவ் டிராக் வேண்டுமே என்பதற்காக ஜானவி கபூரை கதைக்குள்ளே கொண்டு வந்து வீணடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் ராம் சரண் ஜானவிக்கு தான் யாரென்றே காட்டிக்கொள்ளாமல் லிப்லாக் கொடுக்கிறார். அடுத்த காட்சியில் ராம்சரண் தான் தனக்கு முத்தம் கொடுத்தார் என்பதை ஜானவி தெரிந்துகொண்டு பதிலுக்கு முத்தம் கொடுக்கிறார். மூன்றாவது காட்சியில் ஸ்ருதியுடன் ராம் சரண் குத்தாட்டம் போடுவதை மோப்பம் பிடித்து தன் பங்குக்கு ரெண்டு குத்துக்குத்துகிறார். படத்தில் கதாநாயகின் சோலி அத்தோடு முடிந்தது.

நாலைந்து காட்சிகளில் வந்துபோகிற நம்ம ஜான் விஜய்யையும், ரெயிலுக்கு கொடி ஆட்டியே இடைவேளையில் இறந்துபோகிற ஜகபதி பாபுவும் ஓவர் ஆக்டிங்கில் நம்மை உருட்டிக்கட்டையால் அடிக்கிறார்கள்.

‘உப்பென்னா’ படம் இயக்கிய புஜ்ஜி பாபு சனாவா இது. கதாநாயகன் ராம் சரணை சாகச நாயகனாக காட்டுவதைத் தாண்டி வேறு எதிலும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. மலை கிராமியப்பகுதிகளை தனது ரம்மியமான ஒளிப்பதிவால் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார் ரத்னவேலு.

இசை ஏ.ஆர்.ரஹ்மான் . அடிச்சி ஆடுங்கன்னா முடிச்சி விட்டுட்டீங்களே பாய்.

குஸ்தி கற்றுக்கொள்ள வரும் ராம் சரணிடம் குஸ்தி வாத்தியார் ஷிவ் ராஜ்குமார் அடிக்கடி ‘டேய் இருக்கியா கிளம்புறியாடா ? என்று கேட்டுக்கொண்டேயிருப்பார்.

அது டைரக்டர் படம் பார்க்க வந்த நம்மை நோக்கிக் கேட்பது போலவே இருக்கிறது.

பெத்தி அடுத்த படத்துலயாவது டைரக்டருக்கு வரட்டும் நல்ல புத்தி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com