இவன் காட்டுத் தீயா!- புஷ்பா 2 விமர்சனம்!

pushpa 2 review
புஷ்பா 2 திரைவிமர்சனம்
Published on

புஷ்பா முதல் பாகத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது ’புஷ்பா 2’. தாடியை தடவிக்கொண்டு ஒற்றைத் தோள்பட்டையைத் தூக்கியவாறு நடக்கும் கிராமத்து Rugged boy பாத்திரத்தில் அல்லு அர்ஜுனை பான்இந்தியா நாயகனாக ஆக்கிய படம். தெலுங்குப் படமாக இருந்தாலும் கதைக்களம் ஆந்திரா பார்டர் என்பதால் தமிழகத்துடன் கனெக்ட் ஆனது முதல் பாகம்.

முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் புஷ்பராஜாவின் (அல்லு அர்ஜுன்) கொட்டத்தை அடக்க நினைக்கிறார் எஸ்.பி.யான ஷெகாவத் (ஃபஹத் ஃபாசில்). இதற்கிடையே, ஆந்திர முதலமைச்சரை (ஆடுகளம் நரேன்) சந்திக்க செல்லும் புஷ்பாவுக்கு அவராலேயே மிகப்பெரிய அவமானம் நேர்கிறது. இதனால் கோபமடையும் புஷ்பா காட்டுத் தீயாகவே மாறுவதே படத்தின் மீதிக் கதை.

ஆந்திராவில் அடித்து நொறுக்கியது போதாது என்று படம் தொடங்கும்போதே அல்லு அர்ஜுன் ஜப்பானில் எதிரிகளைப் பறந்து பறந்து பந்தாடுகிறார். கார்ட்டூன் படங்களில் வரும் சண்டைக் காட்சி கூட கொஞ்சம் நம்பும்படி இருக்கும். ஆனால் புஷ்பா அதையும் தாண்டிய படம் அல்லவா?

கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்த காட்சி ஆந்திராவில். மாஸான மேனரிசத்துடன் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன், பகத் பாசிலை சுத்தவிட்டு பந்தாடுகிறார். மனைவி ராஷ்மிகாவிடம் காதல் செய்கிறார். இப்படி முதல் பாதி செல்கிறது.

இரண்டாம் பாதியில் பிரமாண்ட சண்டைக் காட்சிகள் வரிசைக்கட்டி வருகின்றன. மூன்றாம் பாகத்திற்கு லீட் கொடுப்பதற்காக நாயகனுக்கு புது பிரச்னையை தலையில் கட்டி, கூடவே குடும்ப சென்டிமென்டை சேர்த்து படத்தை முடிக்கிறார் இயக்குநர். சாகாவரம் பெற்ற நாயகனின் நோக்கம்  என்ன  என்பது அடுத்த பாகத்தில்தான் தெரியும்போல!

கொஞ்ச நஞ்சமல்ல டன் டனாக உழைப்பைக் கொட்டி நடித்திருக்கிறார் அல்லு அர்ஜூன். யப்பா மனுஷனுக்கு என்னா எனர்ஜி! பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்குவது போல் நினைத்ததையெல்லாம் விலைக்கு வாங்கும் அல்லு அர்ஜூனுக்கு முதல் பாகத்தில் இருந்து தொடரும் பகத் பாசிலின் பகை!. சித்தூர் ஜில்லாவையே கட்டுக்குள் வைத்திருக்கும் அல்லு அர்ஜூனாவை முந்தானையில் முடிந்து வைத்திருக் கும் ராஷ்மிகாவின் நடிப்பு அசத்தல். இவர்கள் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் நெளிய வைக்கின்றன. முழுத்திரையையும் அல்லு அர்ஜூனே ஆக்கிரமிப்பதால், மற்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை. 

படத்தின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலு சேர்த்தாலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் வழக்கம் போல் அதிரடி, பழைய சமந்தாவின் ஆட்டத்துக்கு கிட்டே கிஸ்.. கிஸ்க் என்று ஆடும் ஸ்ரீலீலா வருகிறாரா என்ற வாலிப வயோதிக அன்பர்களின் விவாதம் முற்றுப்பெறப் போவதே இல்லை. அது இல்லாமல் ராஷ்மிகா வேறு கன்னாபின்னாவென்று குத்தாட்டம் ஆடுகிறார்.

கூடுதல் பின்னணி இசையில் சாம் சிஎஸ் கலக்கியிருக்கிறார். ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை உயர்த்திக்காட்டுகிறது. பீட்டர் ஹெய்ன், டிராகன் பிரகாஷ், நவகாந்த் ஆகியோர் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் இந்த படத்தின் தனித்துவம் எனலாம்.

படத்தின் நீளம் சுமார் 3.15 மணி நேரம். மாஸ் ஹீரோ படங்கள் மற்றும் தெலுங்குப் படங்கள் என்றால் லாஜிக் பார்க்கக் கூடாது போல. புராணங்களில் வரும் சண்டைக் காட்சிகளுக்கே சவால் விடுகிறார்கள். கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட அடுத்த நிமிடம் ராஷ்மிகா குத்தாட்டம் போடும்போது அடிவயிறு கலங்குகிறது... நமக்கு!

ஒரு செம்மரக் கடத்தல்காரனைக் கொண்டாடும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை மக்கள் மறு பேச்சு இல்லாமல் ரசிக்கிறார்கள். சட்டத்தை மீறி மரத்தை வெட்டிக் கோடி கோடியாகக் குவிக்கிறான். லஞ்சத்தால் எல்லோரையும் வாங்குகிறான். இன்னும் நிஜவாழ்க்கையிலும் நேர்மையான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடத்தல்காரர்கள் கம்பி எண்ணத்தான் செய்கிறார்கள். சினிமாவில் நீதியும் நாணயமும் வெல்லும் என்று காட்டிய ஒரு காலம் இருந்தது! இப்போது எல்லோருக்கும் நம்பிக்கை போய்விட்டதுபோல. புஷ்பா-2 காட்டுத்தீ.... ஆமாம் எல்லோரையும் அழித்துவிடும் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார் போலிருக்கிறது சுகுமார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com