ஆயுதங்களை விட மனிதர்களின் சிரிப்புதான் மிகப்பெரிய ஆயுதம் என்பதை வெட்டுக் குத்துடன் உணர்த்துகிறது இந்த ரெட்ரோ.
கங்குவா தோல்விக்குப் பிறகு வெளியாகியுள்ள ரெட்ரோ சூர்யாவுக்கு கம்பேக் கொடுக்குமா என்று பார்ப்போம்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) - சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், ஒரு சம்பத்துக்கு பிறகு அவரை தன் மகனாக ஏற்கிறார்.
தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை முன்னின்று செய்யும் பாரி, தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) கரம் பிடிக்க, அனைத்தையும் கைவிட்டு புது வாழ்க்கைக்குத் தயாராகிறார். ஆனால், ஒரு கடத்தல் விவகாரத்தில் தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் பாரிக்கும் திலகனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதனால், திருமணம் நிற்கிறது. காதலி கோபித்துக் கொண்டு வேறு நாட்டுக்கு செல்ல, சூர்யா சிறைக்கு போகிறார். அவரின் சண்டை போடும் திறனை கண்டு அவரை தங்களுடன் சேர்த்துக் கொள்ள விரும்புகிறது ஒரு கும்பல். இதற்காக அவரை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்கிறது. ஆனால், அந்த கும்பலை அடித்துவிட்டு தப்பிக்கிறார் பாரி. ஒரு பக்கம் அந்த கும்பல் தேட, இன்னொரு பக்கம் வளர்ப்பு தந்தையின் ஆட்கள் தேட, தன் காதலியை தேடி புறப்படுகிறார் பாரி. காதலியுடன் அவரால் சேர முடிந்ததா? பாரியை தேடிக் கொண்டிருக்கும் கும்பலின் பின்னணி என்ன என்பதே ‘ரெட்ரோ’ படத்தின் திரைக்கதை.
1960 இல் தொடங்கும் படத்தின் கதை, தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் மையம் கொள்கிறது. புயலாக வீசும் என எதிர்பார்த்த திரைக்கதை, அப்படியே வலுவிழந்து, இடைவேளை விடுவார்களா அல்லது நாமே எழுந்து கொள்ளலாமா என சோதிக்கிறது.
இரண்டாம் பாதி, பாரிக்கும் வில்லன்களுக்கும் நடக்கும் போராகத்தான் இருக்கப்போகிறது என யூகித்தால், அங்கு ஆரம்பிக்கும் கிளைக்கதை படத்துக்கு உயிரூட்டுகிறது. பிரிட்டிஷ் காலத்து அடிமை முறை, மிராசுதாரர் குடும்பம், ரப்பர் தொழிலாளர்கள், கல்ட், தீர்க்கதரிசனம் போன்ற சில விஷயங்கள் தமிழ் சினிமாவுக்கு புதுசு.
சூர்யா நடிப்பிலும் ஸ்டைலிலும் கலக்கியிருக்கிறார். வில்லன்களை பந்தாடும் ஆக்ரோஷ காட்சிகளிலும், பூஜா ஹெக்டேவின் காதலுக்கு ஏங்கும் காட்சிகளிலும் கவர்கிறார். ரத்த சரித்திரம், அஞ்சான், கங்குவா ஆகிய மூன்று படங்களின் சூர்யாவை இந்த ஒரே படத்தில் தரிசிக்கலாம்.
பூஜா ஹெக்டே அழகான கால்நடை மருத்துவராக நடித்திருக்கிறார். அவரின் டஸ்கி கலரும், கோபமும் கவர்ந்தாலும் அவருக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் ரொம்ப குறைவு. தாதாவாக வரும் ஜோஜு ஜார்ஜ் அசத்தியிருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சிங்கம் புலி ஆகியோர் அவர்களின் கேரக்டர்களுக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
வில்லன்களை கொடூரமாகக் காட்ட, சண்டை காட்சிகளை வலிந்து சீட்டுக்கட்டுபோல் திணித்திருக்கிறார்கள். சூர்யா - பூஜா ஹெக்டே இருவருக்குமான காதல் காட்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. ஆயுதங்களை விட மனிதர்களின் சிரிப்புதான் பவர்ஃபுல் என்பதை சொல்ல, தலையை சுத்தி வாயை தொடும் திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
படத்தின் மற்றொரு ஹீரோ சந்தேகமே இல்லாமல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். படம் முழுக்க பின்னணி இசையில் அதகளப்படுத்தி இருக்கிறார். கனிமா பாடலுடன் சேர்த்து வரும் ஒரு 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் ஒட்டுமொத்த படக்குழுவும் உழைப்பை கொட்டியிருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.
ஜானி படத்தின் செனோ ரீட்டா, மெளன கீதங்கள் படத்தின் டாடி டாடி பாடலை பொருத்தமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில், பார்த்தால் அங்கங்கே சில பளிச்சிடல்களைத் தாண்டி ரெட்ரோ- ஜவ்வு மிட்டாய்!