சிக்மா ‘நீங்க அரசியலுக்கு போயிடுங்க தம்பி - விமர்சனம்

சிக்மா ‘நீங்க அரசியலுக்கு போயிடுங்க தம்பி - விமர்சனம்

Published on: 
நம்ம ரேட்டிங்(2 / 5)

அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு அறிமுகம் தேவையில்லை.

அப்பாவின் வழியத் தேர்ந்தெடுக்காமல் தாத்தாவின் வழியைத் தேர்ந்தெடுத்த வகையில் அவரது முதல் படமான ‘சிக்மா’வுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது.

இயக்குநராக ஜேசன் என்னதான் சாதித்திருக்கிறார் என்று பார்ப்பதற்கு முன் ‘சிக்மா’வின் கதையை கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்க முயல்வோம்.

ஆந்திர ரெட்டிகாரு ஒருவர் தனது லாக்கரில் 1000 கோடி ரூபாயை வைத்து பூட்டி அதன் சாவிகளை சகலபாடிகளிடம் கொடுத்துவைக்கிறார். அந்த சகலபாடிகள் சபலபாடிகளாக மாறி அதைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் நூலகம் ஒன்றை நடத்திக்கொண்டு அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் தவிக்கிறார். அடுத்த தெருவில் ஆர்.ஜே.வாகப் பணிபுரியும் கதாநாயகி ஃபரியா அப்துல்லாவுடன் அவருக்கு ஒரு அது ஏற்படுகிறது. [எது என்று தெரிந்தால்தானே சொல்வதற்கு?]

பின்னர் இல்லாத கதையில் சில குழப்பங்கள் ஏற்பட்டு க்ளைமாக்ஸில் அந்த ஆயிரம் கோடி ரூபாய் கதாநாயகன் கையில் கிடைக்கிறது.

லைகா நிறுவனத்திடம் ஜேசன் இந்தக் கதையைச் சொல்லும்போது படத்தின் வசூல் ஆயிரம் கோடி என்று கேட்டிருக்கும் போல. அதனால் வேறு எதுகுறித்தும் யோசிக்காமல் இப்படி ஒரு மரண விளையாட்டு முயற்சியில் கண்ணை மூடிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.

மொத்தப்படத்திலுமே முதல் இயக்குநரின் முத்திரை என்று சொல்லும்படி ஒரு காட்சி கூட தேறவில்லை என்பது தொடங்கி மொத்தப் படமுமே ஒரு ஒரு ரெண்டரை மணி நேரத் துயரம்தான்.

இயக்குநரோடு ஒப்பிடும்போது ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தும் இசையமைப்பாளர் எஸ். தமனும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறார்கள்.

நாயகன் சந்தீப் கிஷன், நாயகி ஃபரியா அப்துல்லா இருவரும் ’தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள் தேவனே’ ரகம். டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரத்தை சம்பளம் தராமல் நடிக்கக் கூப்பிட்டிருப்பார்கள் போல…சோதனையின் உச்சம்.

படம் பார்த்து பதட்டம் அடைந்திருக்கும் பலரும், ‘பேசாம நீ அப்பா மாதிரி நடிக்கப்போயிடு சிவாஜி’ என்று மனசுக்குள் பிரார்த்திக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதையும் விட நல்லதொரு யோசனை நம்மிடம் இருக்கிறது. ‘நீ பேசாம துணை முதல்வராப் போயிடு சிவாஜி. தமிழ் சினிமா பொழைச்சிப் போகட்டும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com