எல்லாம் ஒரு அளவுக்குத்தான் தாத்தா...! |சிசு- ரோடு டூ ரிவெஞ்ச் பட விமர்சனம்! #Sisu: Road to Revenge

சிசு திரைப்படம்
சிசு திரைப்படம்
Published on

ஹாலிவுட்டின் அதிரடி ஆக்‌ஷன் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைத்த திரைப்படம் ‘சிசு’. இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கிறார். அப்போது சில தீய வீரர்களின் கையில் தன் புதையல் சிக்காமல் இருக்க அவர்களுடன் சண்டையிட்டு தப்பித்து விடுவதோடு முதல் பாகம் முடிவடையும். இப்போது, மூன்று வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகம் ’சிசு- ரோடு டூ ரிவெஞ்ச்’ படம் வெளியாகி இருக்கிறது. இதில் என்ன கதை, படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக, அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடித்துவிட்டு அதன் மரக்கட்டைகளை கொண்டு வேறொரு இடத்தில் புதுவீடு எழுப்பி தனிமையில் அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார் ஃபின்லாந்தின் முன்னாள் கமோண்டோ அடாமி கார்பி. ஆனால், அவரது நிம்மதியை குலைத்து, அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற வெறியுடன் அவரை தேடி வருகிறது எதிரணி. போர் வீரரான அடாமி என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர். தன் எதிராளியை சமாளித்து, மரணத்தை வென்று தான் நினைத்தபடி புதுவீடு கட்டி முடிக்கிறாரா என்பதுதான் ‘சிசு- ரோடு டூ ரிவெஞ்ச்’ படத்தின் கதை.

2022 இல் வெளிவந்த ’சிசு’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே அதன் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள்தான். இந்த சீக்வலிலும் அதில் குறையில்லாமல் கொடுத்திருக்கிறது படக்குழு. 66 வயதில் கார்பி கதாபாத்திரத்தை படம் முழுக்க தன் தோளில் சுமந்திருப்பதோடு ஆக்‌ஷன் காட்சிகளிலும் வாய் பிளக்க வைத்திருக்கிறார் ஜால்மரி டாமிலா.

சரசரவென நகரும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கார்பியின் உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தும் காட்சிகளிலும் தேவைப்படும் வேகத்தையும் நிதானத்தையும் ஒருசேர கொடுத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் மிகா ஒரசமா மற்றும் படத்தொகுப்பாளர் ஜூகோ விரோலைனன் கூட்டணி. கிளைமாக்ஸில் வரும் டிரையின் காட்சி நிச்சயம் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு ட்ரீட் என்பதில் சந்தேகம் இல்லை. பின்னணி இசை, சிஜி வேலைப்பாடுகள் என படத்தில் குறையில்லாத வேலை கொடுத்திருக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கு சிறப்பு பாராட்டுகள்.

படத்தின் பெரும் பலமாக பார்க்கப்படும் ஆக்‌ஷன் காட்சிகளே ஒருக்கட்டத்திற்கு மேல் படத்தின் பலவீனமாக மாறுவது சோகம். புல்லட்டை வாயில் இருந்து துப்புவது, பல டன் எடையுள்ள டேங்கரை அசால்டாக இழுப்பது என ‘எல்லாம் ஒரு அளவுதான் தாத்தா....’ என ரசிகர்களை சோதிக்கிறது. ‘சிசு’ என்றாலே அழிவில்லாதவன் என முதல் பாகத்தின் டைட்டில் கார்டிலேயே சொல்லி விடுகிறார். அப்படி இருக்கையில் கிளைமாக்ஸ் மற்றும் கதையோட்டத்தில் எந்த புதுமையும் இல்லாமல் நாம் எதிர்பார்த்தபடியே கதை நகருவது சோகம். கதை, லாஜிக் எல்லாம் நமக்கு வேண்டாம் அதிரடியாக ஒரு ஆக்‌ஷன் ரைட் போகலாம் என விரும்பும் சாகச விரும்பிகளுக்கு முதல் பாகத்தை போலவே அதன் சீக்வலான ‘சிசு- ரோடு டூ ரிவெஞ்ச்’ படம் திருப்தியாக்கும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com