சொர்க்கவாசல்: திரைவிமர்சனம்!

Sorgavaasal R.J. balaji
சொர்க்கவாசல் ஆர்.ஜே. பாலாஜி
Published on

“சொர்க்கத்தில் முட்டிபோடப்போறீயா… இல்ல நரகத்தில் ராஜாவாக இருக்கப்போறீயா…?” என்ற படத்தின் டயாலக்கில் இரண்டாவதைத் தேர்வுசெய்யும் விசாரணைக் கைதியின் கதையே சொர்க்கவாசல்.

வடசென்னையில் ரோட்டுக்கடை உணவகம் நடத்தி வரும் பார்த்திபன் (ஆர். ஜே. பாலாஜி) செய்யாத குற்றத்திற்காக சிறை செல்கிறார். அங்கு பெரிய ரவுடியாக இருக்கும் சிகா (செல்வராகவன்) தன் கூட்டத்தோடு திருந்தி வாழ ஆசைப்படுகிறார். அந்த சமயத்தில் டிரான்ஸ்பராகி வரும் துணை ஜெயிலர் சுனில் குமார் (ஷராஃபுதீன்) சிகாவுக்கு இருக்கும் கெத்தை காலி செய்ய நினைக்கிறார். ஜெயிலரின் ஈகோ, சிகாவின் கூட்டாளி உயிரைப் பறிக்கிறது. இதற்கு நீதி கேட்டு சிறைவாசிகள் போராட்டத்தில் குதிக்க, கடைசியில் சொர்க்கவாசல் யாருக்குத் திறந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

1999இல் சென்னை மத்தியச் சிறையில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத். கதை யாரின் பார்வை வழி சொல்லப்பட வேண்டும் என்ற இயக்குநரின் சமூகப்பார்வை வரவேற்புக்குரியது. படத்தின் முதல் பாதியை சீட்டுக்கட்டைப்போல் கலைத்துப்போட்டவர், இரண்டாம் பாதியில் ‘அடுத்து என்ன நடக்குமோ’ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்.

சிறை எப்படி இருக்கும் என்பதை அப்படியே கொண்டுவந்த இயக்குநர், கைதிகளில் ஆப்ரிக்கர், ஈழத்தமிழர், இஸ்லாமியர் போன்ற பல்பேறு தரப்பினரை அப்படியே காட்டியுள்ளார். விசாரணை நீதிபதியாக வருபவரை நேர்மையான இஸ்லாமியராக காட்டியுள்ளார் இயக்குநர்.

அப்பாவி இளைஞன் பார்த்திபனாக ஆர்.ஜே. பாலாஜி. எப்படி முதல் பாதி திரைக்கதை ’வீக்’காக உள்ளதோ அதே மாதிரி உள்ளது இவரின் நடிப்பு. இரண்டாம் பாதியில் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். ஸ்டார்டிங் டிரபுள் போல பாலாஜிக்கு. கட்டபொம்மன் என்ற கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும், அதை அப்படியே திரையில் கொண்டு வந்த கருணாஸின் நடிப்பும் படத்துக்கு பெரும் பலம். கேரக்டருக்கு ஏற்ற தேர்வு கருணாஸ். எம்.ஜி.ஆர். காலத்து ரவுடி போல் இல்லாமல், புதுப்பேட்டைப் படத்தில் வரும் டேனியல் பாலாஜி போல வருகிறார் செல்வராகவன். இவரின் கதாபாத்திர உருவாக்கம் முரணாக உள்ளது. இருபது கொலைகள் செய்து, சிறையையே கட்டுப்பாட்டில் வைத்துள்ள உள்ள ஒருவன் எப்படி மனமாற்றம் அடைகிறான் என்ற இடம் முக்கியமல்லவா இயக்குநரே?. விசாரணை அதிகாரியாக வருகிறார் நட்டி (இஸ்மாயில்). இவரின் நெஞ்சு எரிச்சல் மேனரிஸம் நமக்கும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எழுத்தாளர் ஷோபா சக்தியும் (சீலன்) ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். இயக்குநர்கள் சந்தான பாரதி, பாலாஜி சக்திவேல் மற்றும் ஹக்கிம் ஷா போன்றவர்கள் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை க்ரைம் த்ரில்லர் படத்துக்கு ஏற்ற வகையில் உள்ளது. ஆர்.கே. செல்வாவின் படத்தொகுப்பு கச்சிதம். சிறையை யதார்த்தமாகக் கட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். கலர் டோன், காட்சிப்படுத்திய விதம் கவனத்தை ஈர்க்கிறது. ஒளிப்பதிவு தரமோ தரம்.

’குரலை உயர்த்தி நீதி கேட்கிற இடம் இதுல்ல…’ என ஜெயிலர் பேசினால், ’நா நல்லவனாகவே இருந்தாலும் நீ போலீஸ்தானே’ என சிறைவாசி பதில் சொல்கிறார். கதைக்கு ஏற்ற கூர்மையான வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழ் பிரபாவும் அஷ்வின் ரவிச்சந்திரனும். சில இடங்களில் வசனங்கள் தூக்கல்!

மனித உரிமை மீறலின் கூடாரமாக சிறைச்சாலைகள் இருப்பதைச் சொல்லவந்த இயக்குநர், அதிலிருந்து கொஞ்சம் நழுவியிருக்கிறார். சிலரின் சுயநலத்தால்தான் சிறைச்சாலைகள் மிகமோசமாக உள்ளது என்ற சித்திரத்தை படம் ஏற்படுத்துகிறது.

முதல் பாதி திரைக்கதையை இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்திருக்கலாம்...!

logo
Andhimazhai
www.andhimazhai.com