“பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” என்ற பாரதியின் வரிகளை நினைவுபடுத்துகிறது இயக்குநர் அதியன் ஆதிரையின் தண்டகாரண்யம் திரைப்படம்.
படத்தின் தலைப்புக்கு உள்ள ரத்தம் தேய்ந்த வரலாறும் ஓவியர் சந்தோஷ் நாராயணனின் கைவண்ணத்தில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த படபோஸ்டர்களும் பரவலான கவனத்தை ஈர்த்ததோடு, எதிர்பார்ப்புகளையும் உண்டாக்கின.
வனக்காவலர் ஆகும் ஆசையில் உள்ள கலையரசன் (முருகன்) கனவு, அவரின் அண்ணன் தினேஷின் (சடையா) புரட்சிகர செயலால் சிதைகிறது. இதைத் தொடர்ந்து, ஒருவரின் உதவியால் ஜார்க்கண்டில் உள்ள ராணுவ அகடாமி ஒன்றில் சேர்கிறார் கலையரசன். அங்கு நக்சல்களாக இருந்து சரணடைந்தவர்களும் உள்ளனர். அப்போது, அம்மாநில தேர்தல் வருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, ’சொன்னபடியே நக்சல்களை ஒழித்துவிட்டோம்’ என்பதை அறிவிப்பதற்காக மாநில அமைச்சரும் காவல் துறை உயர் அதிகாரிகளும் சேர்ந்து விளையாடும் அதிகார விளையாட்டை தோலுரிக்கிறது இந்த ’தண்டகாரண்யம்.’
அரசு, கார்ப்பரேட், அதிகாரம் இவற்றின் அரசியல் லாபக்கணக்கில் மனித உயிர்கள் எப்படி பகடைக்காய்களாக மாற்றப்படுகின்றன என்பதை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. இடதுசாரிப் பார்வையில் படத்தை இயக்கியுள்ளார்.
அரசியல் தெளிவு, திரைக்கதையை அணுகிய விதம், ரத்தம் தோய்ந்த உண்மைச் சம்பவத்தை காதலோடு இணைத்து சொன்ன விதம் என அனைத்திலும் தேர்ந்த இயக்குநராகத் தடம் பதிக்கிறார்.
படத்தின் முதல் பாதி கிருஷ்ணகிரி அருகே உள்ள மலைப்பகுதியில் நடக்கிறது. கலையரசன் – வின்சு ரேச்சல் இடையேயான காதல், வனக்காவலர்களின் அட்டூழியம், தினேஷின் அறிமுகம் என மிதமான வேகத்தில் செல்கிறது. இரண்டாம் பாதியில், பயிற்சி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்கள், நக்சலைட்டாக இருந்த சரணடைந்த சபீர் கல்லரக்கலின் கதை, நக்சல் ஒழிப்பு என்ற போர்வையில் நடக்கும் ஊழல் போன்றவை பேசப்பட்டுள்ளன.
முருகனாக நடித்திருக்கும் கலையரசன் இந்த படத்திலும் இறந்துவிடுகிறார். கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பில் தனித்து ஸ்கோர் செய்கிறார். அவரது யதார்த்த நடிப்பு அவ்வளவு கச்சிதம். ராணுவ அகாடமியில் காதலியை நினைத்து ஏங்குவது, காவல் துறையின் சூழ்ச்சியை நினைத்து கலங்குவது, காதலிக்குத் தைரியம் தருவது, செம்மையாய் வாழலாம் என்று நம்பிக்கை விதைப்பது என அடர்த்தியான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
இவருக்கு அடுத்து, சபீரின் கதாபாத்திரம் மனதை உலுக்கி விடும். தொடக்கத்தில் அவரின் கதாபாத்திரம் எதிர்மறையாக மனதில் பதிந்தாலும், அவரைப் பற்றிய பின்கதை அதை மாற்றிவிடுகிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் அவர்.
தினேஷின் அறிமுக காட்சி ரத்தத்தை சூடாக்கினாலும், அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்ட விதம் சூட்டைக் குறைக்கிறது. அவர், நக்சல்பாரி அமைப்பை சேர்ந்தவரா? அல்லது அவர்களுடன் தொடர்பில் இருப்பவரா? என பல கேள்விகள் எழுகின்றன.
யுவன் மயில்சாமி மிரட்டியுள்ளார். மிடுக்கான உடல் மொழி, மிரட்டும் பார்வை என முத்திரை பதிக்கிறார். வின்சு ரேச்சல், ரித்விகா இருவரும் காதல் டூயட் காட்சிகளுக்கு தலைகாட்டுகின்றனர். தினேஷ் - கலையரசன் இருவரின் அப்பாவாக நடித்துள்ள பெரியவர் நடிப்பில் தனித்து தெரிகிறார். இவர்களுடன், அருள் தாஸ், பால சரவணன், வேட்டை முத்துக்குமார், கவிதா பாரதி என பலரும் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். டைட்டில் கார்டு போடும் போதே வரும் பின்னணி இசை பதை பதைக்க வைக்கிறது. ’அடியே அலங்காரி’, ’காவக்காடே’ பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. இளையராஜாவின் ‘ஓ பிரியா பிரியா’ பாடல் பயன்படுத்திய இடம் சிலிர்க்க வைத்தது.
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு காடுகளை அப்படியே கண்முன் நிறுத்தியது. ராணுவ அகாடமி காட்சிகள் அப்படியே டாணாக்காரன் படத்தை நினைவூட்டியது.
படத்தின் அரசியல் முக்கியமானதென்றாலும் அதை இன்னும் நேர்த்தியாக சொல்லியிருக்கலாம். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளைப் படம் அழுத்தமாக பேசத் தவறுகிறது. திரைக்கதை அங்கங்கே கொஞ்சம் அலைபாய்கிறது.
கலையரசனும் - வின்சும் பேசும் கவித்துவமான வசனங்கள் எதார்த்தத்தை மீறியதாக உள்ளன.
நக்சலைட் ஒழிப்பு, அவர்களுக்கான மறுவாழ்வு போன்றவற்றின் பின்னுள்ள அரசியலையும், வனவாசிகளின் வாழ்க்கை போராட்டத்தை பேசிய விதத்திலும் தண்டகாரண்யம் முக்கியமான அரசியல் படங்களின் பட்டியலில் இடம் பெறும்!