நாம் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாக வந்திருக்கிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. சசிகுமார், சிம்ரன்- அபிஷன் ஜீவிந்த் கூட்டணி செம காம்போ!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், தமிழ்நாட்டுக்கு குடிபெயர்கிறது சசிகுமார் (தர்மதாஸ்) குடும்பம். ராமேஸ்வரம் காவல் துறையிடம் சென்டிமெண்ட் நாடகம் நடத்தி, அங்கிருந்து வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு வருகிறார்கள். இங்கு, எதிர்பார்த்த வாழ்க்கையும் அமைகிறது. நல்லா வாழ்ந்தா பிடிக்குமா...? ஒரு சம்பவத்தின் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார்கள். இந்த சம்பவத்துக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
சசிகுமார் நடித்த அயோத்தி, கருடன், நந்தன் போன்ற ஹிட் படங்களின் வரிசையில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படமும் சேர்ந்துள்ளது. மானுட மேன்மைகளை உணர்த்தும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சசிகுமாருக்கு பாராட்டுகள். ஒரு சில உணர்ச்சிகளை மட்டும் வழக்கம்போல் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் சசிகுமார்.
வசந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ரன். ‘என்னமா சிம்ரன் இப்பயும் இப்படி நடிக்கிறீயே’ என வியக்க வைக்கிறார். "அண்ணாக்கும் கோஃபி", “ஒன்னும் நடக்கல ஒன்ரை வருஷம் கழிச்சு நீதான் நடந்த" என அவர் செய்யும் டைம்மிங் காமெடிகள் பெரிய ப்ளஸ். இவர்கள் இருவரை விடவும் மகன்களாக நடித்திருக்கும் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் இருவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள்.
வாழ்வின் மீது நம்பிக்கை இழந்து விரக்தியும் கோபமும் நிறைந்த இளைஞராகக் காட்டப்படும் மிதுன் ஜெய் சங்கர் கேரக்டர் ரைட்டிங் அட்டகாசம். சிறுவன் கமலேஷின் நடிப்பு, தியேட்டரையே வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. காவலரை ஏமாற்றப் போடும் நாடகம், ஓணம் பண்டிகைக்குப் போடும் கெட்டப், ஸ்கூல் வாத்தியாரை சம்பவம் செய்வது என ஒவ்வொரு காட்சியிலும் அதகளம் செய்கிறார்.
’யார்ரா இந்த பையன்’ என முதல் படத்திலேயே தேட வைத்திருக்கிறார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தி. அகதியாக வேறுநாட்டுக்கு வரும் குடும்பம் பற்றிய கதைதான் என்றாலும், அந்த குடும்பம் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்னைகள், நகர வாழ்க்கையின் தனிமை என சமகால வாழ்வின் சில முக்கிய பிரச்னைகளை படம் தொட்டு செல்கிறது. படத்தை கடைசி வரை போரடிக்காமல் பேச வேண்டிய அரசியலையும் மனிதத்தின் மேன்மையையும் அழுத்தமாக பதிவு செய்கிறார் இயக்குநர்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வசனம் படத்தின் பெரும் பலம். ‘நாங்க தமிழ் பேசுவதுதான் உங்களுக்கு பிரச்னையா’ என எம்.எஸ். பாஸ்கர் வட இந்திய காவல் அதிகாரியைப் பார்த்து கேட்பதும், ‘உங்கள யார் அகதினு சொன்னது..’ என சசிகுமாரை பார்த்து ரமேஷ் திலக் கேட்பதும் படம் எந்தளவுக்கு சமகால பிரச்னையை பேசுகிறது என்பதற்கு உதாரணம்.
படத்தின் மைனஸாக, குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை, சசிகுமார் எல்லோரின் குட்புக்கிலும் இருப்பது, சிறுவனின் சாணக்கியத்தனம் எல்லா இடத்திலும் ஒர்க்கவுட் ஆவது போன்றவை கொஞ்சம் நம்பும்படியாக இல்லை.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு மிக எதார்த்தமான ஒரு சூழலில் கதை நடப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பு ஷார்ப். ஷான் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை அழகாக கடத்துகிறது. முகை மழை பாடல் அத்தனை இதம்.
அத்தனை உணர்வுகளுக்கும் தீனிபோடும் ‘டூரிஸ் ஃபேமிலி’யை, கோடை விடுமுறைக்கு ஃபேமிலியாக போய் பார்க்கலாம்!