வா வாத்தியார்: திரைவிமர்சனம்!

வா வாத்தியார்
வா வாத்தியார்
Published on

அந்நியன் படத்தின் பாதி கதையும், முகமூடி படத்தின் பாதி கதையும் சேர்ந்து பிசைந்தால் ஒரு கதை உருவாக்கி, அதில், எம்ஜிஆர் டூப் நடித்தால் எப்படி இருக்கும், அதுதான் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம்.

மாசிலா என்கிற ஊரில் நடிகர் ராஜ்கிரண் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருக்கிறார். எம்ஜிஆர் இறந்த நேரத்திலேயே அவருக்கு பேரன் பிறக்க, வாத்தியாரைப் போல இவனை வளர்க்க வேண்டுமென நாயகன் கார்த்தியை வளர்க்கிறார். எம்ஜிஆர் காட்டிய நல்வழிகளில் கார்த்தி சென்றாரா? இல்லையா? என்கிற ஒன்லைன் கதையைக் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.

வித்தியாசமான கதை சொல்லல் மூலம் கவனம் பெற்ற நலன் குமாரசாமி, வா வாத்தியாரில் என்ன சொல்லப்போகிறார் என ஒவ்வொரு காட்சிக்கும் காத்திருந்தால் நமக்கு விபூதி அடித்து அணுப்புகிறார்.

ஆரம்பக் காட்சிகள் ஆர்வத்தைக் கொடுத்தாலும் திரைக்கதை நம்மைப்படுத்தி எடுக்கிறது. உருவாக்க ரீதியாக சில விஷயங்கள் கவனம் ஈர்த்தாலும் மோசமான கதை, திரைக்கதையால் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை. ராஜ்கிரண் வசனங்களில் வலு இருந்தாலும் அதை கார்த்தியை வைத்து உடைத்து, அக்கதாபாத்திரத்தின் பலத்தையும் பலவீனமாக்கியுள்ளார் இயக்குநர்.

முதல்பாதி இடைவேளையின் போது, ஒரு டுவிஸ்ட் வருகிறது. ஆனால், அதுவும் எந்த விதமான ஆர்வத்தையும் தூண்டாத வகையிலேயே எழுதப்பட்டுள்ளது.

எம்ஜிஆரை மையமாக வைத்தே நாயகனின் செயல்பாடுகள் இருந்தாலும் முழுமையாக எம்ஜிஆரை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவரே இரண்டு கேரக்டர்களாக இருப்பது போன்ற திரைப்படங்கள் ஏற்கெனவே தமிழில் வந்திருப்பதால், இதில் கார்த்தியின் கேரக்டர் பெரிதாக ஈர்க்கவில்லை.

சிறுத்தை, ஜப்பான் படத்தின் சாயலில் நடித்திருக்கும் கார்த்திக்கு எம்ஜிஆர் கெட்டப் பொருந்தவே இல்லை.

யூ டியூபராக வரும் க்ருத்தி ஷெட்டிக்கு குறைந்த காட்சிகள்தான். அவரின் கவர்ச்சியை மட்டும் வைத்து தப்பிக்கலாம் என இயக்குநர் நினைத்தாரோ என்னவோ வலுவில்லாத கதாபாத்திரமாகவே எஞ்சிவிட்டது. நடிகர் ராஜ்கிரண் வரும் காட்சிகள் ஆறுதலைக் கொடுக்கின்றன. சத்யராஜின் தோற்றம் நல்ல வடிவமைப்பு.

ஜாலியான சமூக அக்கறை பேசும் படமாக வா வாத்தியாரை எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அவர் தூவிய மசாலா கதைக்கு பலவீனமாக மாறிவிட்டது. எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தும் திரைப்படம் என்றாலும், அவரை போகிற போக்கில் கிண்டல் செய்யவும் செய்கிறது.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பு ஓரளவு பலம் என்றே சொலல்லாம். பெரும்பாலான இடங்களில் பழைய எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்கவிட்டு பட்டையைக் கிளப்புகிறார்கள்.

நீதிமன்ற வழக்கால் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த வா வாத்தியார், இந்தப் பொங்கலுக்கு ‘போங்கு வாத்தியாராக’ வந்திருக்கிறார்!

logo
Andhimazhai
www.andhimazhai.com