தமிழில் பார்ட் 2 திரைப்படங்கள் பெரும்பாலும் சொதப்பியதே வரலாறு. இதில் விடுதலை 2 தப்பிக்குமா? தணிக்கை குழுவின் பிடியில் சிக்கி வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது?
விடுதலை முதல் பாகம், குமரேசனால் (சூரி) பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்வதோடு முடிந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று விடுதலை 2 ஆம் பாகம் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியை சேத்தன் தலைமையிலான காவல் துறையினர் மலையிலிருந்து கீழே அழைத்து வருகின்றனர். செல்லும் வழியில், தான் எப்படி மக்கள் படையின் தலைவனாக மாறினேன் என்பதை சொல்லிக் கொண்டே வருகிறார் விஜய் சேதுபதி. இவரைக் காவலர்களிடமிருந்து விடுவிக்க அவரின் தோழர்கள் முயற்சிக்கிறார்கள். இதனால், இருதரப்புக்கும் மோதல் வெடிக்க, இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
பண்ணையார் மற்றும் அரசால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் பிரச்சினையை, அவர்களுக்கான அரசியலைப் பேசும் தரப்பை உள்ளடக்கிய கதைக் களத்தை கச்சிதமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
அரசு, ஆளுங்கட்சி, அரசு உயர் அதிகாரிகள், மக்கள், போராளிகள், போலீஸ் என ஒவ்வொரு தரப்பின் பக்கத்தையும் அப்படியே விரித்து வைக்கிறது படம். எந்தச் சார்பையும் எடுக்காமல், யாரின் பக்கமும் சாயாமல், எந்த தரப்பு என்ன முடிவை எடுக்கும் என்பதை நெத்திப் பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் முதல் பாதி தமிழ்நாட்டின் சமூக வரலாற்றோடு தொடங்கி, பெருமாள் வாத்தியார் பற்றிய சித்தரிப்புகளோடு விறுவிறுவென நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், இறுதிக்காட்சி நெஞ்சை பிசைகிறது.
பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதிபதி படத்தை தோளில் சுமக்கிறார். தொழிற்சங்கவாதியாகவும், கொள்கை பிடிப்புள்ள போராளியாகவும், அன்புள்ள கணவனாகவும் அசத்தியிருக்கிறார்.
பண்ணையாரின் மகளாக வரும் மஞ்சுவாரியர் கம்யூனிசம் பேசுகிறார். இவரின் கதாபாத்திர உருவாக்கம் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.
குமரேசனாக நடித்திருக்கும் சூரி, மனசாட்சிக்கு துரோகம் இழைக்காதவராக வருகிறார். முதல் பாதி அளவுக்கு, இதில் அவருக்கு வேலை இல்லை. கிஷோர், கென் கருணாஷ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிச்சயம் இருவரின் நடிப்பும் பேசப்படும். சேத்தன், கெளதம் மேனன், இளவரசு, ராஜுவ் மேனன், அனுராக் கஷ்யப், போஸ் வெங்கட் என பலரும் அவர்களின் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.
‘தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள்’, ‘உன்னுடைய பாதை தான் உன்னோட இலக்கை தேர்ந்தெடுக்கும்’ என்பது போன்ற பல வசனங்கள் கதைக்கு பலம் சேர்க்கின்றன.
இளையராஜாவின் பின்னணி இசையும், ’மனசுல ஒரு மாதிரி’, ‘தினம் தினம் உன் நினைப்பு’ பாடலும் கதைக்கு வலு சேர்க்கிறது. கலை இயக்குநர் ஜாக்கி 1960 - 1990 காலகட்டத்தை முடிந்தவரை தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவும், ராமரின் படத்தொகுப்பும் கொஞ்சம் சறுக்கல்தான்.
போஸ் வெங்கட் சாட்டையால் அடிக்கும் காட்சி, பண்ணையாரை வீடு புகுந்து கெவின் வெட்டும் காட்சி, மஞ்சுவாரியர் – விஜய் சேதுபதி இடையேயான காதல் காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.
அதேபோல், இளமையில் தீவிரமாக வன்முறையை நம்பும் விஜய்சேதுபதி, இறுதியில் வன்முறை தீர்வல்ல என்கிற இடத்தை நோக்கி நகர்கிறார். இது கதையில் மிக முக்கியமான புள்ளி.
ஆயுதப்போராட்டத்தை நம்பும் குழுவுக்கும் அதை ஒடுக்கும் காவல் துறைக்கும் இடையிலான மோதலில் வன்முறைக்கே அதிக இருக்கும் என்பதால், படத்தில் ரத்தம் தெறிக்கிறது.
மக்கள் அரசியல் பேசும் விடுதலை 2 போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் அத்திப்பூ! முதல் பாகம் போலவே இதையும் சிறப்பாக இயக்கி வரலாறு படைத்துள்ளார் வெற்றிமாறன்.
தமிழக இடதுசாரி அரசியல் மட்டுமல்லாமல் திராவிட இயக்க பங்களிப்பையும் தொட்டு செல்கிற தன் நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்வதன் மூலம் சார்பற்றுச் செல்கிறது படம்.