ஏழு கடல் ஏழு மலை - எட்டாயிரம் அடி உயர அலை
நம்ம ரேட்டிங்(2 / 5)
‘கற்றது தமிழ்’ தொடங்கி 20 ஆண்டுகால சினிமா பயணத்தில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள ராமின் 6 வது படம் இந்த ஏழு கடல் ஏழு மலை.
ஒரு பாட்டில் சரக்குக்கு ஒரு சொட்டு பதம் என்பது போல இப்படத்தின் ஒரு எலிய காட்சியைப் பற்றிப் பகிர்ந்துவிட்டு விமர்சனத்தைத் தொடர்வது பரஸ்பரம் இதை எழுதுகிறவர் படிக்கிறவர் இருவருக்குமே நல்லது.
தீபாவளித் திருநாளன்று ஜஸ்ட் மூன்றே பயணிகளுடன் விரைந்துகொண்டிருக்கிற ரயில். ஒருவர் படத்தின் நாயகன் நிவின் பாலி. இரண்டாமவர் சக பயணி சூரி. மூன்றாமவர் மிஸ்டர் எலி.
இந்த எலியாருக்கு மனசு சரியில்லாமல் இருப்பதை உணர்ந்துகொள்ளும் நிவின் பாலி சூரியிடன் ஒரு ஸ்பூனில் சரக்கை ஊற்றச் சொல்கிறார். ராவாகக் குடித்தால் எலியின் இரைப்பைக்கு என்னாவது ? எனவே இரண்டு சொட்டு மழை நீரைக் கலந்து எலிக்குக் கொடுக்கிறார். அது மது மயக்கத்தில் நிவின் மடியில் ஓய்வெடுத்துக்கொள்கிறது.
நல்லாத்தானே இருக்கு என்பவர்கள் மேலும் தொடரலாம்.
ராம் சொல்ல வருகிற கதையின்படி, நாயகன் நிவின் பாலிக்கு எட்டாயிரம் வயதுக்கு மேல். அதாவது சாகாவரம் பெற்றவன். திருவள்ளுவர், தொல்காப்பியர்களுக்கெல்லாம் மூத்தவன். வள்ளுவர் கடைசி 30 குறள்கள் எழுத கன்டென்ட் இல்லாமல் தவித்தபோது கைகொடுத்தவன்.
அவனுக்கு இப்போ இந்த தீபாவளி ரயிலில் என்ன வேலை என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்திருக்கும். ஏனெனில் கதையில் நீங்க ரொம்பவே இன்வால்வ் ஆகிவிட்டீர்கள். நிவின்பாலியிடம் சிக்கிய சூரியைப் போலவே இனி நீங்கள் தப்பிக்க முடியாது.
நிவின் பாலியின் இந்த ரயில் பயணமாகப்பட்டது, முந்தைய காலங்களில் அவரது காதலியாக இருந்து மரித்துப்போன அவரது காதலியை இந்தக் காலத்தில் தேடிக் கண்டடைவது. அப்படிப்பட்ட பயணத்தில்தான் துபாய் ரிடர்ன் சூரி அவரிடம் வலுவாக மாட்டிக்கொள்கிறார். பத்து வருடங்களுக்கும் மேலாக சந்திக்காத மகன் மேல் காட்டும் பாசத்தை அந்த எலியின் மேல் காட்டாததால் நிவின் பாலியின் கோபத்துக்கு ஆளாகும் அவர் பலவிதமாக சித்திரவதைக்கு ஆளாகிறார்.
இறுதியில் எலிக்கு என்ன ஆச்சு… அந்த ஒரு எலியைத் தாண்டி காதலி அஞ்சலியை சந்தித்தாரா ? எலிதாபாமானமே இல்லாத சூரி பழியில் இருந்து விடுபட்டாரா என்பதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’.
படம் முடியும் சமயம் மனதில்,… இயக்குநர் ராமுக்கு இருக்கும் துணிச்சல் உலக சினிமா அளவில் வேறு யாருக்காவது என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில் நாயகன் ஏழெட்டு எலிக்குஞ்சுகளை கையில் ஏந்திக்கொண்டு அவற்றுக்கு பால்கொடுக்க பதறி அலைகிற காட்சியில் எல்லாம் நம் நெஞ்சில் பாலே சுரந்துவிடுகிறது.
என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு திகிலான ரயில் பயணத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறது. யுவனும் சந்தோஷ் தயாநிதியும் கலந்து இசையமைத்திருக்கிறார்கள். வழக்கமாக ராமின் படத்தில் இருக்கும் சுவாரசிய இசை கூட இப்படத்தில் இல்லை.
நிவின் பாலியும், சூரியும் அந்த எலிக்கு இணையாக நடித்திருக்கிறார்கள். அஞ்சலி நாலைந்து காட்சிகளில் வந்துபோகிறார். கதாநாயகனை வெறுமனே ஏக்கப்பார்வை பார்க்கவைத்துவிட்டுப் போனதோடு நில்லாமல் அவனது ஜென்மம் முடிவுக்கு வர காதலித்தாவது தொலைத்திருக்கலாம்.
இயக்குநர் ராம் பொதுவாகவே தன் படங்களில் பல குறியீடுகளை ஒளித்து வைத்திருப்பவர். இந்தப் படம் காந்தி ஜெயந்திக்கு முந்தின தினம் ரிலீஸாகியிருப்பதே ஒரு குறியீடுதான். அந்த குறியீடு என்னவென்று இதைப்படிக்கிற நீங்கள்தான் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும்.
ஹே ராம்.
